Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது.

பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது?

ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி செய்யாவிட்டால், இந்த பக்தி என்ற அமிர்தமே பாம்பின் நஞ்சாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

திருப்பதி பிரசாதமான லட்டில் கலப்படம் இருந்த விஷயத்தை பக்தியில் மூழ்கிப்போன பக்தர்களோ அல்லது சகல மந்திரங்களையும் படித்த அர்ச்சகர்களோ கண்டுபிடிக்கவில்லையே?
அப்படி அவர்கள் கண்டுபிடித்திருந்தால் சிறப்பு தானே?

ஆனால் அறிவியலால் தான் அதை கண்டுபிடிக்க முடிந்தது.

சரி இப்படி கலப்படம் இருந்த விஷயத்தையே கண்டுபிடிக்காத இவர்கள், அந்த கலப்படத்தால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கி விட்டார்களாம்.
அதாவது மாட்டுக் கொழுப்பு தீட்டு அதை சரிசெய்வது மாட்டுக் கோமியமாம். அதில்லாமல் ஏதோ புகைபோட்டு மொத்த தோஷத்தையும் நீக்கி விட்டார்களாம்.

இப்படி செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்கும் இந்தக் காலத்தில் கூட இவ்வாறான மிக முட்டாள்தனமான மூட நம்பிக்கைகளை செய்து கொண்டு அதை ஒரு மதத்தின் பெருமையாகப் பேசிக் கொண்டிருத்தால் நாமும் முட்டாள்கள் அல்லாமல் வேறென்ன?

திருப்பதி போய் வந்தால் நல்ல மனநிம்மதியும், ஒரு அனுபவமும் கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். லட்டு பிரசாதம் அருமையாக இருக்கும். இதெல்லாம் சரி. இதை ஒரு நல்ல குடும்ப சுற்றுலாவாக, ஒரு நிம்மதிக்கான பயணமாக எண்ணினால் சிறப்பு.

அதையும் தாண்டி திருப்பதி மலைக்கு நடந்தே வருவேன் என்பது கூட, ஆரோக்கியத்திற்காக அல்லது உடற்பயிற்சிக்காக என்ற கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படும். இப்படி புகை போட்டு கோமியம் தெளித்து தீட்டுக் கழிப்பதை நான் முழுதாக நம்புகிறேன் என்பது ஏற்புடையதல்ல.

எனது இந்து தர்மம் இதையெல்லாம் போதிக்கிறது. இதை எதிர்த்து நான் கேள்வி கேட்க மாட்டேன் என்று பேசுவதே அறிவிலித்தனம் தான்.

எதிர்த்து கேள்வி கேட்பதைத் தவறு என்று போதிக்கும் எந்த்வொரு உருப்படாத புத்தகமும் தர்ம புத்தகம் ஆகி விடாது.

சரி இப்படி புகைபோட்டு தீட்டு கழிக்கும் அர்ச்சகர்கள், எல்லா மனிதர்களின் தீட்டையும் கழித்து அனைவரையும் கருவறையில் அனுமதிப்பார்களா என்றால் இல்லையாம்.

பிறப்பால் அவர்களுக்கு வந்த சிறப்பாம் அது.
அப்படி ஒரு மனிதனுக்கு பிறப்பில் பெருமையையும், இன்னொரு மனிதனுக்கு தாழ்மையும் உருவாக்கும் கடவுள், கடவுளே அல்ல.

இதை ஏற்றுக்கொள்ள அந்த அர்ச்சகர்கள் தயங்கினால் சரி, அவர்களுக்கு அதில் வியாபாரமும் லாபமும் இருக்கிறது என்பதால் அதை விடமாட்டார்கள் என்றால் இன்னொரு கும்பல் அரசியலுக்காக இதை தூக்கி நிறுத்துகிறார்கள்.
இதில் இரண்டிலும் தொடர்ச்சியான சிந்தனை திணிப்பிற்குள்ளாகி பல படித்த மக்களும் பக்தியையும் மூட நம்பிக்கையையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

ஒரு இனிமையான கடவுளின் உருவத்தை நம் கைபேசியில் அல்லது முகப்பில் வைத்தால் மனதிற்கு இனிமை கிடைக்கிறது என்பது பக்தி, அதை செய்யலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கடவுளின் படத்தை பத்து பேருக்கு அனுப்பினால் நல்லது நடக்கும், அல்லது கெட்ட செய்தி வரும் என்றால் அதையும் ஒரு கும்பல் நம்புகிறது. இதுவும் பக்தி என்றால் அது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

அறிவியலின் உச்சத்திலிருக்கும் இந்த காலத்தில் கூட விள்கேற்றி மணியடித்து கொரோனா கிருமியை விரட்ட முயற்சித்திருக்கிறோம், ஆனால் இறுதியில் தடுப்பூசி தான் தீர்வானது.

அதுபோல மாட்டுக்கொழுப்பினால் ஏற்பட்ட தீட்டை மாட்டுக் கோமியத்தால் நீக்கிவிட்டோம் என்பதையும் ஒரு கூட்டம் நம்புகிறது என்பது தான் வேதனையாகிறது.

இதைப்பேசும் சிலரை நாத்திகவாதி என்பார்கள். அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களைப் பேசுபவன் நாத்திகவாதியுமல்ல, மூட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்புபவர்கள் ஆத்திகவாதிகளும் அல்ல.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற விஷயம் பக்திக்கும் பொருந்தும்.

பக்தி இருப்பது தவறல்ல. படித்த அறிவை மறந்து முட்டாளாக இருப்பது முழுத்தவறு.

இது பலருக்கும் ஒவ்வாது என்றால் கூட இதைப் பேசுவது சமூக அக்கறை.

என்றென்றும் நல்ல சிந்தனைகளை விதைக்க நினைக்கும், நினைவுகள்!