ஓர் அரசன் என்பவன் மக்களின் குறைகளை கேட்டு அதைக் களைந்து அவர்கள் குறைதீர்க்கும் வகையில் நல்லாட்சி தருபவனாக இருக்க வேண்டும் என்று பல இலக்கியங்களிலும் படித்திருக்கிறோம்.
இவ்வளவு ஏன் தனது குட்டியை தேரில் ஏற்றி சாகடித்ததற்காக, நீதி கேட்ட பசுவுக்காக தனது மகனையே தேரில் வைத்து நசிக்கிக்கொன்று நீதி காத்தமனுநீதிச்சோழனின் கதையை இன்றளவும் பெருமையாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.
மொத்த நாடும் தன்னுடைய சொத்து என்று ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் கொண்ட மன்னனுக்கே இப்படியான பண்புகள் வரையறுக்கப்பட்டிருந்த இதே சமூகம் இன்று மக்களாட்சி, மக்களுக்கே அதிகாரம் என்று மார்தட்டிக் கொண்டாலும், நடப்புகள் என்னவோ கொடுங்கோல் ஆட்சி அதிகாரம் போலத்தான் உணரப்படுகிறது.
மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில் ஒரு பெருந்திரளான மக்கள் தமக்கு இது வேண்டாம் என்றும் தமது சமுதாயத்திற்கு இது ஒவ்வாது என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தாலே அது நியாயமான முறையில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு அவர்களை போராடும் நிலைக்குத் தள்ளுகிறது. அதே போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக அறவித்து அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்துகிறது.
இதுவா மக்களாட்சி?
ஒரு நிதியமைச்சர் பலதுறை முதலாளிகளை அழைத்து ஒரு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறார். அதில் ஒரு உணவக முதலாளி, வரிவிதிப்பு பற்றி ஒரு சிறிய யோசனையை சொல்கிறார். கறாராகவோ, காட்டமாகவோ அல்லாமல், நல்லமுறையில் பக்குவமாகத்தான் சொல்கிறார். ஆனால் மறுநாளே அவர் நிதியமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பது போன்ற காணொளி வெளியாகிறது.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று, நான் வணங்கும் ஈசனாகவே நீவிர் இருந்தாலும் நீவிர் பாடியது தவறு என்று பேசிய நக்கீரர் பெருமையைக் கொண்டாடும் நமது வீரம் எங்கே போனது.
மக்களாட்சி என்ற பெயரில் நடக்கும் இந்த அதிகார ஆட்சியில் நமது வீரம் நசுக்கப்பட்டுவிட்டதோ?
இன்றைய ஆட்சியாளர்கள் பசு மணி அடித்து நீதி கேட்டால் இளவரசர் மீதே பழி போடுகிறாயா என்று பசுவை தேரில் நசுக்கிக் கொன்று விட்டு மணியையும் கழட்டி வைத்து விடும் நிலைதான் உள்ளது.
மக்களாட்சி என்பது மக்களுக்காகவே நடக்கும் நிலை உருவாக வேண்டும். செலுத்தப்படும் வாக்குகள் நியாயமான ஆட்களை பதவியில் அமர்த்த வேண்டும். குறிப்பாக பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கும் நிலை மாற வேண்டும்.
அதுவரையிலும் இங்கே மனுநீதிச் சோழர்களை எதிர்பார்ப்பது தவறு.
ஒரு நியாயமான வேண்டுகோளை நினைவுகள் வாசகர்களிடம் வைத்திருக்கிறோம்.