Categories
சினிமா தமிழ்

சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்

ஒரு கல்லை எடுத்து அதை சிலையாக வடித்து சில மந்திரங்களை சொன்ன பிறகு அது கடவுளாகி விட்டது என்று நம்பும் பல மனிதர்கள் ஏனோ எத்தனை ஆண்டுகளானாலும் கீழ்சாதிக்காரன் தீட்டுக்காரன், தீண்டத்தகாதவன், அவன் நமக்குக் கீழே தான் என்ற எண்ணத்தை மட்டும் மாற்றுவதே இல்லை.

ஒரு கல்லை கடவுளாக்கத் தெரிந்த அந்த மனிதர்களுக்கு சக மனிதனை மனிதனாகக் கூட மதிக்கத் தெரிவதில்லை என்ற வருத்தமான சமூகநீதிக் கருத்தை எடுத்துச் சொல்லும் சினிமா தான் நந்தன்.

நமக்குத் தெரிந்த, பழகிய அன்றாடம் இன்று வரை செய்தியில் நாம் காது குளிர கேட்டுக் கொண்டிருக்கும் உண்மைக் கதைகளின் கருத்துருவாக்கமே இந்தப்படம்.

சில ஊராட்சிகள், சில சட்டமன்றத் தொகுதிகள் தனித்தொகுதிகள் என்பதையும், அப்படியான தனுத்தொகுதிகள் பலவற்றில் பிறசாதிக்காரர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்த கதையும், கலவரம் செய்த கதையும், இவ்வளவு ஏன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெட்டி வீழ்த்திய கதையையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா.
அது போல சில தொகுதிகளில்/ஊராட்சிகளில் பொம்மை போன்ற ஆட்களை தலைவராக்கி விட்டு சாவி கொடுத்து ஆட்டுவிப்பதையும், அவர்களை நாற்காலியில் கூட அமர விடாமல் தடுப்பதையும் நாம் சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அப்படியான பொம்மை பஞ்சாயத்து தலைவர் எப்படி எதற்காக எந்த சூழலில் உருவாகிறார். அவர் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறார். எதிர்த்து கேள்வி கேட்க முயற்சிக்கும் முன்பே எப்படி வதைக்கபடுகிறார் என்பதை கலகலப்பாகவும், கலைநயத்தோடும் சிறிதும் சலிப்பு ஏற்படுத்தாமல் சுருக்கமாக நறுக்கென 1.45 மணிநேரத்தில் சொன்ன படம்.

நடிகர்கள் தேர்ச்சி யதார்த்தம். கதாநாயகி நம் பக்கத்தி வீடுகளில் பார்த்தமாதிரி இருக்கிறார்.
சசிகுமார் அந்த கதாநாயகனுக்கான பாத்திரத்தில் அசலாக ஒத்துப்போகுமாறு மாற்றப்பட்டிருக்கிறார்.

படத்தில் சசிகுமாரின் குடும்பம்

வில்லன்கள் யதார்த்தமான நடிப்பு, ஒரு சில காட்சிகள் நம்மை கலங்கடிக்கிறது. சசிகுமாரின் ஆத்தா இறந்து சுடுகாட்டில் நிகழும் பிரச்சினை, கொடி ஏற்றுதலில் சசிகுமார் ஏமாற்றப்படும் இடைவேளை காட்சி ஆகியவை. அதிலும் சசிகுமார் நிர்வாணப்படுத்தப்பட்டு கழிவறையில் கிடத்தப்பட்டு வதைக்கப்படும் காட்சி நம்மை கதிகலங்க வைக்கிறது.

படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம்

நேர்மையான சமூகநீதி போற்றும் அதிகாரியாக சமுத்திரக்கினி ஒரு சில காட்சிகள் வந்தாலும், ஆழமாகப்பதிகிறார்.

நான் புதைத்த ஆமணக்கு முளைத்து விட்டது, நாமளும் எங்க போனாலும், எத்தனை இன்னல்களை சந்தித்தாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் சசிகுமாரின் மகன் கதாபாத்திரம் சொல்லும் காட்சி கவிதை போல அழகு. இதுபோல சில நல்ல காட்சிகள் உண்டு.

மொத்தத்தில் ஒரு ஊராட்சியில் வாழ்ந்த திருப்தி இந்தப்படத்தில் கிடைக்கிறது.

இறுதிக்காட்சியில் சசிகுமார் பஞ்சாயத்து தலைவராக கையெழுத்து இடுவது மிடுக்கானதாக இருந்தாலும்,
சினிமாவில் தான் இது நடக்கிறது நிஜ வாழ்க்கையில் இன்னும் கூட தலித் தலைவர்கள் தலித் என புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதை நிகழ்கால தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரின் பேட்டியை இணைத்ததன் மூலமாக அறிய முடிகிறது.

ஒரு பஞ்சாயத்து தலைவருக்கே இந்த நிலை என்றால், மற்ற சாதாரண மக்களுக்கு?

இன்னும் கூடவா சமூக நீதி நிலை நாட்டப்படவில்லை? என்ற கோபத்தை நமக்கு உண்டாக்குகிறது.

நந்தன், சமூக நீதி பேசும் சத்தியப்படம்.

நல்ல கருத்து கொண்ட படங்களை வரவேற்போம்.
உண்மையை உரக்கச் சொல்வோம். உழைக்கும் வர்க்கத்திற்காக நம்மாலான நன்மைகளை செய்வோம்

அன்புடன் நினைவுகள்.

சமீபத்தில் வெளியான கடைசி உலகப் போர் படத்தின் விமர்சனம் இங்கே.

புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்