மில்கா சிங்.
(நவம்பர் 20,1929 – சூன் 18,2021)
இந்திய தடகள வீரர்.
தனது மின்னல் வேக ஓட்டத்திற்காக பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டவர்.
காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் தடகள விளையாட்டில் தங்கம் வென்ற முதல் சுதந்திர இந்தியாவின் வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இவரது இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை.
அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரராக இவர் மட்டுமே திகழ்கிறார். 1958 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1958 காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1962 ஆசிய போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், அதே போட்டியில் 400*4 தொடர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார்.
மேலும் 1958 கட்டாக்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீ மற்றும் 400 மீ ஓட்டங்களில் தங்கப்பதக்கமும், 1964 ல் கல்கத்தாவில் நடைபெற்ற தேசிய போட்டியில் 400 மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் என பதக்கங்களைக் குவித்தவர். 1959 ஆம் ஆண்டே பத்மஸ்ரீ விருது வென்றவர்
மேலும் இவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் இந்தியாவுக்காக தேர்வானவர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ்ல் 400 மீ ஓட்டத்தில் தனது வித்தாயசமான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தவர்.
46.16 வினாடிகளில் 400 மீ கடந்த இவர், 0.1 வினாடி வித்தியாசத்தில் புகைப்பட தேர்வு முறையினால் வெணகலப் பதக்கத்தை இழந்தார்.
1964 டோக்யோவில் நடைபெற ஒலிம்பிக் பட்டியலில் இந்தியாவிற்காக பங்கெடுத்த வீரர்.
இவர் நேரடியாக விளையாட்டு வீரராக ஆனவர் அல்ல.
இந்திய இராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து அங்கிருந்து இவரது திறன் கண்டறியப்பட்டு, விளையாட்டு வீரராக அவதரித்தவர்.
இவர் தனது வாழ்க்கையைப் பற்றிய சுயசரிதையை தனது மகளுடன் இணைந்து “The Race of my Life” என்ற புத்தகமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
அந்தப்புத்தகத்தை தழுவி 2013 ஆம் ஆண்டு Bhaag Milkha Bhaag என்ற திரைப்படம் வெளியானது.
இந்தி மொழியில் மட்டுமே ஆங்கில சப்டைட்டிலோடு வெளியான படம் என்றாலும் இன்று வரையிலும் என் மனதில் மிக ஆழமான தாக்கத்தை உருவாக்கிய படம் என்றால் அது மிகையல்ல.
மில்கா சிங் செய்த சாதனைகளின் பட்டியலை மேலே கண்டோம், அவரது வாழ்க்கைப் பயணத்தை இந்த படத்தில் நான் கண்ட காட்சிகளின் மூலமாக விவரிக்கிறேன்.
மில்கா சிங் பஞ்சாப் மாகாணத்தில், தற்போது உள்ள பாகிஸ்தான் பஞ்சாப் பில் பிறந்தவர். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இவரது அப்பா அம்மா பல சகோதர சகோதரிகள் உட்பட அனைவரும் மதம் மாற மறுத்த காரணத்தால் பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் கொல்லப்படுகின்றனர்.
எஞ்சிய இவரது குடும்பம் இந்திய எல்லைக்குள் அகதியாக நுழைகிறது. இவர் இவரது அக்காவோடு வாழ்கிறார்.
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் மற்றும் ரயிலில் கறி திருடும் காரணத்திற்காக சிறை செல்கிறார் சிங். அவரை அவரது அக்கா தனது நகைகளை வைத்து வெளியே எடுக்கிறார்.
பிறகு அவரது அண்ணன் ஒருவரின் மூலமாக இந்திய இராணுவத்தில் ஆள் சேர்ப்பு பற்றிய தகவல் அறியும் அவர் அங்கே சென்று தேர்வாகி விடுகிறார்.
அந்த முகாமில் நல்ல ஓட்டக்காரர்களை அடையாளம் காண்பதற்காக ஒரு டம்ளர் பாலுக்கும் முட்டைக்கும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல மைல்கள் ஓடுவார்.
உயர் அதிகாரிகளின் கண்ணில் பட்ட இவர் படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டு, விளையாட்டு வீரராக மாறி இந்த சாதனைகளை செய்கிறார்.
அந்தப்படத்தில் நான் ரசித்து சிலாகித்த சில காட்சிகளை விவரிக்க விரும்புகிறேன்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினை கால சண்டைகள், பாகிஸ்தான் இராணுவத்தின் கொடூர தாக்குதல்கள், மற்றும் அப்பாவி மக்கள் தற்காலிக காம்ப்களில் தங்கும் போது அனுபவிக்கும் சிக்கல்கள் படத்தில் மிக நேர்த்தியாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.
ஒரு ஊரில் குடியேறிய பிறகு மில்கா சிங் தனநு வீட்டிற்கு ஒரு நெய் டின் ஐ கொண்டு செல்வார். வழிமறித்த போலீஸ்காரர் இதற்கு வரி செலுத்தாமல் இந்த இடத்தைத் தாண்டக்கூடாது என்று சொல்லவும், மில்கா சிங் குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்டால் செய்து செய்து அந்த மொத்த நெய் டின்னில் உள்ள நெய்யையும் குடித்து விடுவார்.
இராணுவத்தில் பயிற்சியில் இருக்கும் போது விளையாட்டுக்காக இவர் ஓடிப் பயிற்சி செய்யும் போது வெளிவரும் வியர்வையை பிழிந்து சேகரிப்பார். ஒரு குடிவையில் சேகரமாகும் வியர்வை, நாளடைவில் ஒரு வாலி நிறைய சேகரிக்கப்படும்.
இந்த படத்தில் மில்கா சிங்காக நடித்திருந்த பர்கான் அக்தர் உடலைக் கட்டுக்கோப்பாக்கி 8 பாக்ஸ் வைத்திருந்தார்.
பாலைவன மணலில் மிகப்பெரிய லாரி டயரை இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடுவது போன்ற காட்சியமைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கும்.
ஒரு காட்சியில் மில்கா சிங் இந்திய விளையாட்டு வீரராக ஆன பிறகு கோட் சூட் அணிந்து தனது அக்காவை காண வருவார். அவரது அக்கா யாரோ பெரிய அதிகாரி வந்திருப்பதாக நினைத்து எழுந்து நின்று வணக்கம் வைப்பார். இவர் நான் தான் அக்கா மில்கா சிங் என்று கூறும் போது அவரது அக்கா வெடித்து அழும் காட்சி நம்மை கண்கலங்க செய்து விடும்.
இறுதியாக இவரது ப்ளையிங் சிக், அதாவது பறக்கும் சீக்கியர் பட்டம் கிடைத்த காட்சி, படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நம்மை ஆர்ப்பரிக்க செய்யும்.
ஜவஹர்லால் நேரு பிரதமராக பதிவியேற்ற பின்பு, பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அங்கு நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் ஐ வீழ்த்த வேண்டும் என்று மில்கா சிங் இடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
அதன்படி அந்த போட்டியில் பங்கேற்று ஓடி வெல்லும் மில்கா சிங் ன் ஓட்டத்தைக் கண்டு வியந்த பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் ஆயுப் கான், மில்கா சிங் க்கு பறக்கும் சீக்கியர் என்ற பட்டத்தை அளிக்கிறார்.
மில்கா சிங்கின் கதையை நினைவுகள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.