Categories
சினிமா தமிழ்

மெய்யழகன் – சினிமா விமர்சனம்

தற்போதைய காலகட்டத்தில், தலையை துண்டாக வெட்டுவது, ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்வது போன்ற படங்களை யதார்த்தமாக குடும்பத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

கிட்டதட்ட 100 க்கு 70 படங்கள் அந்த வகையில் தான் வருகின்றன. அதைத் தாண்டி வரும் மீதி முப்பது படங்களிலும் கூட கல்லூரி வாழ்க்கை அல்லது காதலோ, நட்போ என்று கதையம்சம் இளைஞர்களை கவர்வதாகவே உள்ளது.

குடும்ப உறவுகளை, அதன் நிகழ்வுகளை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்து விட்டது, மேலும் அப்படியான படங்கள் க்ரிஞ்ச் என்று கேலிக்கும் உள்ளாகிறது.

சமீபத்திய சிவகார்த்திகேயனின் எங்க வீட்டுப் பிள்ளை, கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆக்கியவை குடும்ப உறவுகளை மையப்படுத்திய படம். இவை பலதரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டதன் காரணம், அந்த நடிகர்களின் பிரபலத்துவமாகக் கூட இருந்திருக்கலாம் என்ற வாதத்தைத் தாண்டி அதன் யதார்த்தமும் அதன் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
அதாவது வன்முறை, அல்லது அடிதடி ஒரு குறிப்பிட்ட அளவோடு ஏற்றுக் கொள்ளும்படியாக அந்தப்படங்களில் இருந்தது.

அதே மாதிரியான குடும்ப உறவுகள் மையப்படுத்திய வாரிசு என்ற நடிகர் விஜயின் படம், சற்று ஜொலிக்காமல் போகக் காரணம் பாசமும், பகையும் என இருபுறங்களிலும் பயணித்து வன்முறை திணிக்கப்பட்டு செயற்கையாக இருந்த காரணம்.

தெலுங்கில் வந்த வைகுந்தபுரமுலு என்ற பக்கா குடும்ப பொழுதுபோக்கு படத்தையும் இப்போது நாம் நினைவில் கொள்ளலாம். கதாநாயகனுக்காக சில அடிதடி காட்சிகள் இருந்தாலும் குடும்ப உறவுகளின் நடப்பு மிக அற்பதமாக படமாக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதிரி குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை தான் நேற்று வெளியான மெய்யழகன் படம்.

படத்தின் ஆரம்பகட்டத்தில் வரும் காட்சி

ஆனால் வன்முறையோ அல்லது சண்டைக்காட்சியோ துளியும் இல்லை. காய்கறி நறுக்கும் காட்சிகளில் கூட கத்தியை மறைவாகத்தான் வைத்திருப்பது போல, நமக்கு வன்முறையின் நினைவே இல்லாமல் படம் நகர்கிறது.

இதில் என்ன சிறப்பம்சம் என்றால் மற்ற படங்கள் போல அம்மா, அப்பா, தங்கச்சி, ஒண்ணுவிட்ட தம்பி என குடும்பக் கதையை அமைக்காமல், ஒரு இளைஞனின், ஒன்று விட்ட பங்காளிமுறையில் வரும் அத்தானுக்கும் அந்த இளைஞனுக்கும் இடையிலான அன்புப் போராட்டம் தான் படம்.

அந்த இளைஞராக கார்த்தியும், அத்தானாக அரவிந்த் சாமியும் வாழ்ந்திருக்கிறார்கள், படம் முடிந்த பிறகும் நம் மனதில் வாழ்கிறார்கள்.

இயந்திர துப்பாக்கியை எடுத்து 20-30 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய கார்த்தியோ சின்ராசு சர்த்குமார் மாதிரி அன்பு பொழியும் அன்னை தெரசாவாக வலம் வருகிறார்.

தீமைதான் வெல்லும் என்று கெத்து வில்லனாக வந்த அரவிந்த்சாமி கார்த்தியின் அன்பில் கலங்கும் குழந்தை போல நடித்திருக்கிறார்.

ரொம்ப நாள் கழித்து அரிவாள், துப்பாக்கி வன்முறை இல்லா படம்.

ஆனால் படத்தின் நீளம் சற்று சலிப்பு தான்.

படம் முழுக்க இரண்டு பேரும் வேற வேற இடங்களில் அமர்ந்து பேசுகிறார்கள்.

இருவரும் சற்று நெருங்கிய பிறகு வேற லொகேஷன் செல்கிறார்கள்

படம் என்ன என்பதைக்காட்டும் ஆரம்ப ப்ளாஷ்பேக் காட்சிகள், இருவரும் பேசும் போது அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் காட்சிகளைத் தவிர்த்து பெரும்பாலான காட்சிகளில் இருவரின் முகங்களை மட்டுமே காண முடிகிறது.

ஆனாலும் இருவரின் அந்த கலகலப்பான, அன்பான, கண்கலங்க வைக்கும், உறவுகளை பற்றி பாடம் நடத்தும் அரட்டை நம்மை படத்தினுள் இழுத்து பிடிக்கிறது.

ஒரு சில காட்சிகள் கவிதை போல மிக அழகாக இருப்பது சிறப்பு. அப்படியான காட்சிகள் ஆங்காங்கே வந்து நமது சோர்வைப் போக்கி விடுகிறது. அதை ஆழமாகப் பேசினால் படம் பார்க்க சுவாரஸ்யம் இருக்காது என்பதால் தவிர்க்கிறோம்.

கார்த்தி நல்லவர் தான் என்பது உறவினரின் மீது அவர்காட்டும் அக்கறையிலேயே புரிகிறது. அவரை ரொம்ப நல்லவர் என்று காட்ட, அவரது அரசியல் பின்புல நடவடிக்கைகள், போராளி என்று காட்டியிருப்பது தேவைப்படவில்லை. மேலும் நிகழ்கால லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்தியின் கதாபாத்திரம் சினிமாவில் அதற்கு எதிராக இருப்பதால் அந்த காட்சிகள் கேலிக்குள்ளாகிறது.

அன்பான உறவுப் போராட்டத்தின் இடையே 2 பீரை குடித்து விட்டு தமிழ் வாழ்க, தமிழரின் வரலாறு வாழ்க, என்று பேசுவதும், ஜல்லிக்கட்டு கதையும் மிக செய்கையாக உள்ளது. தேவையே இல்லாத ஒன்று.

அன்பேசிவம் படத்தில் கமலஹாசன் பேசும் கம்யூனிசமும் கருத்துகளும் அடுத்தடுத்த காட்சிகளில் ஆனி அறைந்தார் போல மாதவனுக்கு உணர்த்தப்படும். அதைப்போல ஏதோ முயற்சிக்கிறேன் என்று சிறு குழந்தைகள் தூங்குவதற்கு கதை சொல்வது போல, நிகழ்கால போராளிகளின் கதையை சொல்வது தேவையா?

மொத்தத்தில் அன்பே சிவம் படத்தின் பின்புலத்தை ஒரு சந்தோஷமான சூழலில் மாற்றி, கார்த்தியை கமலஹாசனாகவும், மாதவனை அரவிந்தசாமியாகவும் வர்ணித்து, இருவரையும் வேற வேற லொகேஷனில் உறவுகளின் அருமை பெருமை, வாழ்க்கையின் இனிமை பற்றி பேச வைத்து கேமராவை ஓடவிட்டு படமாக்கி ஒரு மாதிரியாக அவியலாக நம்மிடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நான் முன்பு கூறியது போல படத்தில் வரும் கவிதைபோன்ற சில காட்சிகள் மிகச் சிறப்பு.

அன்பில் இணைந்த இரு உறவுகள்

ஆனாலும் இனிமையாக சிரித்து மகிழ்ந்து இந்தப்படத்தை பார்க்கலாம்.

மேலே காட்டப்பட்ட மூன்று படங்கள் போல படம் இவ்வளவு தான் நகரும். அதாவது Goat படத்தில் ஆரம்ப காட்சியில் ஒருவர் ஓடும் ரயிலை கிட்டதட்ட 15 நிமிடமாக ஒரே இடத்தில் இருந்து குறிவைப்பது போல. இந்தப்படத்தில் நீடாமங்கலம் எனும் அழகிய கிராமத்தில் கேமராவை வைத்து விட்டு இருவரையும் படம் பிடித்திருக்கிறார்கள்.

ஆனால் பல இனிமையான நினைவுகளைத் தரும் என்பது உண்மை. குறிப்பாக நம் குழந்தைப் பருவ நினைவுகளை நம் மனிதில் நிறுத்திவிடுவார்கள்.

மெய்யழகன், கொடுக்கும் பணத்துக்கு நட்டமில்லை.

தொடர்ந்து வாசிக்க, சில சமீபத்திய சினிமா விமர்சனங்கள் கீழே. 

ஆகச்சிறந்த தமிழ் சினிமா – லப்பர் பந்து – விமர்சனம்

சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்

ரசிக்க கூடிய என்டர்டைனர் – கடைசி உலகப்போர் – விமர்சனம்

மக்கள் தவறவிட்ட நல்ல சினிமா- ஜமா- விளக்கம் மற்றும் விமர்சனம்