Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப்பணியின் அதிகாரமும், தனித்துவமும்.

அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை

சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது.

இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள்.

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.

அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் கூறும் காரணங்கள். அவர் முன்னறிவிப்பு இல்லாமல் தாமதமாக வேலைக்கு வருவதாகவும், உயர் அதிகாரிகளின் பேச்சுகளை, கட்டளைகளை நிறைவேற்றத் தவறுவதாகவும் கூறியிருக்கிறது.

அதற்கு அவர் கூறியிருக்கும் பதில் சுவாரஸ்யமானது. “தினமும் வேலை முடிய இரவு வெகுநேரம் ஆகிறது, நான் வீடு செல்ல இரவு 11 மணி ஆகிறது. மீண்டும் மறுநாள் காலை எப்படி வேகமாக வருவது?”

“தொடர்ச்சியான வேலைப்பளுவால் நான் உடல்நிலை சரியில்லாமல் ஆனேன்” என்று கூறுகிறார்.

மேலும், ”என்னை உதட்டுச்சாயம் பூசி வரக்கூடாது என்று கூறினீர்கள். இந்த விதிமுறை எந்த சட்டத்தில் வருகிறது?“ என்றும் கேட்டுள்ளார்.

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நபர் இதுமாதிரி நடந்திருக்க முடியுமா? அல்லது இது மாதிரி பதில் சொல்லியிருந்தால் வேலையில் இருந்திருக்கத்தான் முடியுமா?

அரசு வேலை தரும் சௌகரியம் இதுதான்.
ஒரு அரசு அதிகாரி மீது எந்த விதமான குற்றச்சாட்டு வந்தாலும் அவருக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை பணியிட மாற்றமோ அல்லது இடைக்கால நீக்கமோ தான். பணி நீக்கம் என்பது ஒருபோதும் இருக்காது. இந்த காரணத்தால் தான் பல இளைஞர்களும், படித்து விட்டு பல காலம் போராடி அரசு வேலை பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள், சிலர் பணம் கொடுத்தாவது வாங்கி விட முயற்சி செய்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் அனைவருமே தப்பு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற அர்த்தத்தில் இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஆனால் பலர் இது மாதிரி இருப்பதை நாம் அன்றாட வாழ்வில் காண முடிகிறது.

ஒரு கர்ப்பிணி பெண்ணை காலால் உதைத்த காவல் அதிகாரியும் அரசு அதிகாரி தான், இரவு ரோந்தில் வெட்டிக்கொல்லப்பட்ட காவல் அதிகாரியும் அரசு அதிகாரி தான்.

அந்தந்த ஆட்களைப் பொறுத்தது அவர்களின் நடத்தையும் வேலையில் அவர்களின் ஈடுபாடும்.

ஆக இது ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளை குறை கூறும் கட்டுரை அல்ல.

இந்த சம்பவம் என்ன என்பது முழுதாக தெரியாமல் இதில் நாம் அந்த தபேதரின் மீதோ அல்லது மேயர் அலுவலகத்தின் மீதோ குறை சொல்ல இயலாது.
ஆனால் இதிலிருந்து நாம் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசுப்பணியாளர்கள் கொத்தடிமைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நிரூபணமாகிறது.

தனியார் நிறுவனங்களில் இல்லாத ஒரு சுதந்திரமும் அதிகாரமும் அரசுப் பணியில் இருப்பதை உணர முடிகிறது.

குறைந்தபட்சம் எதிர்த்துப்பேசும் உரிமையாவது உள்ளதே!

நமது இளைஞர்கள் நன்கு படித்து அரசுப் பணியில் சேர்ந்து, இதுபோல லிப்ஸ்டிக் கூலிங் க்ளாஸ் பிரச்சினைகளுக்காக எதிர்த்துப் பேசாமல் மக்களின் நலனுக்காக அரசாங்கத்திடம் குரல் கொடுக்க வேண்டும்.

அரசுப் பணியில் கிடைக்கும் அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் மக்களின் நலனுக்காக உபயோகிக்க வேண்டும்.

அப்படி உபயோகிக்கும் பட்சத்தில் நாடு நலம் பெறும் என்பது நிச்சயமான உண்மை.

அன்புடன் நினைவுகள்.

தொடர்ந்து வாசிக்க,

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

மக்களாட்சியில் கேள்வி கேட்கலாமா?

திருப்பதி லட்டில் கலப்படமா?- புரட்டாசி புத்தர்கள் அதிர்ச்சி!

சென்ற மாத பதிவுகளுக்கான முன்னோட்டம்,  நினைவுகள் பதிப்பாசிரியர்குறிப்பு – 02

புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்