Lockdown சமயத்தில் வெளியான சிறப்பான கலை படைப்புகளில் ஒன்று “நான் ஒரு ஏலியன்“ என்ற ஹிப்ஹாப் தமிழாவின் இசைதொகுப்பு.
நல்ல நினைவுகளை ஏன் தேடிக்கொள்ள வேண்டும், நட்பு பாராட்டுவத்தின் முக்கியத்துவம், வாழு வாழவிடு, போன்ற தத்துவங்கள் வெளிப்படும் துடிப்பான ஆல்பம் என்று சொல்லலாம்.
எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தாஹிப்ஹாப் தமிழா (போகட்டும் போகட்டும் போ…)
நினைவு மட்டும்தான் இருக்கும்,
அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்
கடைசி வரைக்குமே நிலைக்கும்.
நல்ல நட்பு, சுற்றி சொந்தம்,
கடைசி வரைக்குமே அன்ப தரனும்.
ஒரு வேலை மரணம் வந்தாக்கூட
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்.
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்.
மனிதனை சிரிக்க வைப்பது அவனை சிந்திக்க வைப்பதை விட கடினம். தன்னை ரொம்ப சீரியஸாக எடுத்துகொள்ளாமல் விளையாட்டாக, சிந்தனையை எளிமையாக சொல்பவர்கள் அரிதே.
சுதந்திர இசையை கடந்து ஹிப்ஹாப் ஆதி சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை சினிமாவில் பார்ப்பது எனக்கு இதுவே முதன்முறை. இருந்தாலும் மேலேகூரிய காரணங்களால் நல்ல மசாலா படத்திற்கான எதிர்பார்ப்புடன் போன எனக்கு ஏமாற்றமில்லை.
மூன்றாம் உலக போருக்கு நடுவில் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது போன்ற கற்பனை கதை. பணக்காரன், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், என அதிகார வர்க்கம் இதை எப்படி சமாளிக்கிறது; நாட்டில் பிரச்சனை வரும்போது பொதுமக்கள் படும் அவஸ்தை, பிறகு அதை எப்படி சமாளிக்கிறார்கள், நாட்டை திரும்ப பெற்றார்களா, இதில் இருந்து என்ன பாடம் கற்றார்கள் என்று திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
துரோகமும் கரோதமும் எதற்காகஹிப்ஹாப் தமிழா (உன்கிட்ட சொல்ல, பாடியவர் மீனாட்சி இளையராஜா)
பஞ்சமும் வன்மமும் எதற்காக
ரத்தமும் யுத்தமும் எதற்காக
ஆறடி மண்ணே உனக்காக
நாயகன் வீரனாக இருந்தாலும், பல இடங்களில் நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று தெரியாதவராக, வெட்கப்பட்டு ரசிக்கவைக்கிறார். தன் மீது மட்டும் கவனத்தை செலுத்தாமல் பல கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உயர்த்துவதில் இயக்குனராக மிளிர்க்கிறார்.
நாசர், அழகம் பெருமாள், முனிஷகாந்த் என்று தேர்ந்த நடிகர்களும், சில ஹிப்ஹாப் தமிழா முகங்களும், தத்தம் பாத்திரங்களில் அசத்ததியிருக்கிறார்கள்.
சதுரங்க வேட்டை நாயகன் “நட்டு” என்கிற நடராஜன் அந்த படத்தை போலவே, கதை சொல்பவராகவும், கிங்மேக்கர் என்கிற முக்கிய கதாபாத்திரத்திலும் நம்மை வெகுவாக கவர்கிறார். இவருக்காக எழுதப்பட்ட அரசியல் undertaker பாட்டு தனியாக கேட்டும் ரசிக்கக்கூடிய குட்டி கதை. பிரமாதம்.
Nepo kid ஆக நீச்சல் தெரியாத மீனாக, நடிகை அனகா நடித்திருக்கிறார். மற்றபடி படத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் மிகக்குறைவு. ஹீரோயின் உட்பட பெண் கதாபாத்திரங்கள் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
இடைவேளைக்கு முன் கதை வேகமாக நகர்ந்த்தாலும் சில காட்சிகளில் முழுமையாக ஒன்றமுடியவில்லை. காதல் காட்சிகளிலும், எமோஷனல் core என்று சொல்லப்படும் இழப்பை பதிவு செய்யும் காட்சிகள் வேகமாக நகர்ந்து விடுவதால் மேலோட்டமாக இருப்பது போல் தோன்றுகிறது.
இதற்கு ஈடாக இடைவேளைக்கு பின் உள்ள காமெடி நம்மை ஆங்காங்கே குபீரென்று சிரிக்கவைப்பது இந்த படத்தின் பலம். படம் முழுக்க, தமிழகத்தின் அரசியல் மற்றும் சினிமா துறைக்கு வைக்கும் குட்டுக்கள் நம்மை வெகுவாக ரசிக்கவைக்கின்றன.
இந்த உலகம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆனது, இப்போது மனிதனிடம் உள்ள பலத்தால் ஒரே நொடியில் எல்லாத்தையும் அழிக்க முடியும். இவ்வளவு பொருள் உள்ள மனிதன், கஷ்டம் வந்தால், மனிதர்களை தான் தேடுகிறான் என்ற எண்ணத்தோடு படம் முடிகிறது.
ஓடி ஓடி பொருளை தேடிஹிப்ஹாப் தமிழா, (எட்டுதிக்கும், பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி)
ஓய்ந்து போகும் வாழ்க்கையே,
ஓடை மீது ஓடும்
ஓடம் போல நாட்களே...
பாடல்கள் என்று தனியாக இல்லாமல், கதையோடு வரும் பின்னணி இசையாக, வசனத்துக்கு பலம் சேர்க்கும் பிரமாதமான தமிழ் ஹிப்ஹாப் பாடல்களும், folk ballad களும், துடிப்பான எலக்ட்ரானிக் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. மேலே கூறிய சிறு குறைகளும் படத்திற்கு தான். பாடல்களுக்கு இல்லை.
இசையில், வேகத்தை கூட்டியும் குறைத்தும், நேரம் எடுத்துக்கொண்டு கருத்தை பதிவு செய்வதில் ஹிப்ஹாப் தமிழா நன்றாக தேறிவிட்டார்கள். சினிமாவில் அதே போல சில காட்சிகளில் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
மற்றபடி, எழுத்திலும், இசையிலும், படமாக்க தரத்திலும், சமீபத்தில் வெற்றி பெற்ற (?) commercial குப்பையை தூக்கி சாப்பிடும் இந்த குட்டி பையன் ஹிப் ஹாப் தமிழாவுக்கு நினைவுகள் சார்பாக பாராட்டுக்கள்.
சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் விமர்சனம் இங்கே.
புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்