தியாகி இமானுவேல் சேகரனார்.
(9/10/1924 – 11/09/1957).
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து, பிறகு தான் பிறந்த சமூகத்தின் நலனுக்காக சமூகப்பணியில் ஈடுபட்டு, இளம் வயதில் உயிர்துறந்த தியாகி.
ஆசிரியர் மற்றும் வழக்கறிஞரான இவர் தந்தையிடமே பாடத்தையும் சமுதாய சிந்தனையையும் கற்றவர்.
சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமிகுந்தவராகத் திகழ்ந்தவர்.
தனது 18 ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று மூன்று மாதம் சிறை தண்டனை பெற்றார்.
தனது 19 ஆவது வயதில் இரட்டைக்குவளை ஒழிப்பு மாநாட்டையும், 1954 ஆம் ஆண்டில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற மாநாட்டையும் நடத்தியவர்.
இந்திய இராணுவத்தில் அவில்தாராகப் பணியாற்றிய இவர் தனது சமூக மக்களின் அவலநிலையையும், அவர்களின் மீது நடத்தப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளையும் கண்டு அதற்கு எதிராகப் போராடத் துவங்கினார்.
இராணுவத்தில் பணியாற்றியதன் காரணமாக பல மொழிகளிலும் வல்வராகத் திகழ்ந்தார்.
கர்ம வீரர் காமராஜரின் வேண்டுகோளுக்கு இணங்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு அந்தத் தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படும் சூழல் நிலவியது.
காங்கிரஸ் மற்றும் பார்வர்டு ப்ளாக் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் சாதிக் கலவரமாக உருவாகும் சூழல் இருந்தது.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தின் கீழ் இவரது சமூக மக்களுக்கும் பார்வர்டு ப்ளாக் கட்சியை சார்ந்த சமூக மக்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இவர் பார்வர்டு கட்சி சார்பில் பங்கேற்ற பெரிய பிரமுகரிடம் தனது சமூக மக்களுக்கான உரிமை மற்றும் பிரதிநிதித்துவம் பற்றி பேசும் போது, எதிர்த்துப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதற்கு மறுநாள் இவர் கொல்லப்பட்டார்.
இவரது இறப்புக்குக் காரணம் அந்த பெரிய மனிதர் என்று குற்றம் சுமத்தப்பட்டு பிறகு அவர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைக்காகவும், பிரதநிதித்துவத்துக்காகவும் போராடிய இமானுவேல் சேகரன் அவர்களின் புகழை இன்றளவும் பெரும்பாலான அடித்தட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இவரது நினைவாக இந்திய அஞ்சல் துறை சார்பாக 2010 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
அவரது நினைவு தினமான செப்டம்பர் 11 இன்றும் போற்றப்படுகிறது.
நினைவுகள் வாசகர்களுக்காக, அவரைப் பற்றி சிறுகுறிப்பு.
இதற்கு முன் வெளியான பூலி தேவரின் நினைவுகளை வாசிக்க