Categories
சினிமா தமிழ்

தேவரா- சினிமா விமர்சனம்

வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி பல மெனக்கெடல்கள், மிகப்பெரிய பொருட்செலவு என்று சினிமா அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே போகிறது.

ஒவ்வொரு கதாநாயகர்களின், இயக்குனர்களின் மத்தியில் நான், நீ, என்ற போட்டியும் பெருகி விட்டது.

பிரபாஸ் க்கு ஒரு பாகுபலி என்றால், அல்லு அர்ஜுனாவுக்கு ஒரு புஷ்பா என்றால் எனக்கு என்ன இருக்கிறது? என்று ஜூனியர் என்.டி.ஆர்க்கு தேவரா என்ற படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒருவர் பிரியாணி செய்வதைப் பார்த்து நாமும் அதுபோலவே செய்யலாம். ஆனால் பட்டை கிராம்பில் துவங்கி கறிமசாலா, தேங்காய்பால் பதம், கறியின் தன்மை, அரிசியின் ருசி என்று பலவும் சரியாக இருந்தால்தான் அது நல்ல பிரியாணி.

ஏதோ பிரியாணி என்று பெயர் வைத்துவிட்டால் அது பிரியாணி ஆகுமா?

மேலும் மட்டன் பிரியாணி என்றால் ஒரு சுவை, காளான் பிரியாணி என்றால் ஒரு சுவை. ஒரு போதும் காளான் பிரியாணி மட்டன் பிரியாணி ஆகாது.

அதுபோலத்தான் இந்தப்படமும். ஒருபோதும் பாகுபலி ஆகாது. ஆனால் காளான் பிரியாணி என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்ல ஒரு முயற்சி. அந்த முயற்சியை நடிகர் பட்டாளமும், மாநிலத்திற்கு ஒரு நடிகரும் இருந்தால் அகில இந்தியப் படமாக வென்று விடலாம் என்று நினைப்பது சரி, ஆனால் அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? பார்ப்போம்.

மாநிலத்திற்கு ஒரு நடிகர் என்ற ரீதியில் மலையாளத்திலிருந்து ஒரு நடிகர், தமிழிலிருந்து கலையரசன், வில்லனாக சைப் அலி, கன்னடத்திலிருந்து பிரகாஷ் ராஜ் என்று ஒரு பட்டாளத்தை இறக்கியிருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் என்பதால் இந்தப் பட்டாளத்திற்கு தனித்துவமான காட்சிகள், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது அருமை.

இதன் கதை என்னவென்றால் ஒரு
தவறை சரியாக செய்யும் கில்லாடி கதாநாயகன், ஒரு சூழலில் தான் செய்யும் தவறை தவறென உணரும் போது, திருந்த முயற்சிக்கிறான். ஆனால் அவனோடு தவறு செய்து பணம் பார்த்த கூட்டாளிகள், அவனையும் திருந்த விடாமல் தாங்களும் திருந்த முயற்சி செய்யாமல் பழைய படியே தவறு செய்து வாழ நினைக்கிறார்கள். அவர்களை அந்த தவறை செய்ய விடாமல் தடுக்கிறார் நாயகன். தடுப்பதென்றால், எந்த எல்லைக்கும் செல்வேன் என்று எதிர்த்து நிற்கிறார். இதனால் ஆத்திரமடையும் கூட்டாளிகள் அவனைப் போட்டுத்தள்ள முயற்சி செய்து ஒரு பெரிய திட்டம் தீட்டுகின்றனர்.

அந்த திட்டம் வென்றதா? அவரது குடும்பம் என்ன ஆகிறது, அவரது மகன் என்ன செய்கிறான் என்ற அரைத்துப் புளித்த கதையைத்தான், புதியதொரு சூழலிலயலில் எடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் காட்டப்படும் மலை கிராமங்கள், மலை, கடல் என்ற கற்பனையான பின்புலம் அருமை.

கவர்ச்சிக்காகவே கதாநாயகி.

கதாநாயகன் மற்றும் வில்லனின் பலத்தைக்காட்ட பல சண்டைக்காட்சிகள்.

இரண்டு கதாநாயகர்கள், வில்லன் மற்றும் கதாநாயகி

மாறி மாறி கத்தியும் , ரத்தமும் அடிதடியும் தான்
3 மணி நேரமும். இடையிடையே ஆபாசமும் கூட.

ஆக மொத்தம் வழக்கமான சினிமா. வன்முறை, வெட்டுக்குத்து, கவர்ச்சி ஆபாசம் என்று நகரும் மசாலா படம்.

ஆனால் மசாலா நெடி மூக்கைத்துளைப்பது அசௌகரியம்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கொஞ்சம் நன்றாகத்தான் இருந்தது. தேவரா வாக வரும் அப்பா கதாநாயகனும், வராவாக வரும் மகன் கதாநாயகனும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருந்தாலும் நடிப்பில் ஒரு சின்ன வேறுபாட்டை காட்டியிருப்பது பரவாயில்லை.
அதாவது அப்பா மாவீரனாகவும், மகன் கோழையாகவும், மசாலா படத்திற்கு ஏற்ற காட்சியமைப்புகள் நலம்.

வசனங்கள் சில இடங்களில் நறுக்கென இருந்தது. அதேமாதிரி கடல் கொள்ளை காட்சிகள் அற்புதமாக இருந்தது.

“தேவரா கேட்குறானா, சொல்றானு அர்த்தம்.
அப்ப சொன்னா என்னனு புரிஞ்சுக்கோங்க.”

“உன் கண்ண பாத்து பேசுற அருகத இல்ல தாயி, அதான் கால பாத்து பேசுறேன்.“

“இனி உன் குழந்தைக்கு மட்டுமில்ல. எந்தக் குழந்தைக்கும் ஆபத்து வராம நான் பாத்துக்குறேன்.”

இது மாதிரியான சில காட்சிகளும் வசனங்களும் மிடுக்கு.

கதை துவங்கிய இடத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, மீண்டும் துவங்கிய இடத்திற்கு வந்து இரண்டாம் பாகத்தின் முன்னோட்டமாக நிற்கிறது.

பாகுபலி, புஷ்பா போன்ற படங்கள் முதல் பாகம் முடிந்த போது , இரண்டாம் பாகம் எப்படி வருமோ, என்ன இருக்குமோ என்ற ஏக்கம் இருந்தது.

இந்தப்படம் அப்படி ஒரு பெரிய ஏக்கத்தையோ , தாக்கத்தையோ உண்டாக்கவில்லை.

ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் வேண்டுமானால் ரசித்து மகிழ்ந்து இந்தப்படத்தைக் கொண்டாடலாம். ஆனால் மற்ற சினிமா ரசிகர்களுக்கும், பொது ரசிகர்களுக்கும், குடும்பங்களுக்கும் இது பெரிய மகிழ்ச்சி தரும் படமாகவோ, மனதில் தங்கும் படமாகவோ அமையவில்லை.

ஏதோ பத்தோடு பதினொன்றாக இதையும் ஒரு படமாகப் பார்க்கலாம்.

கதாநாயகன் என்றாலே பத்து பேரை ஒரு கையில் தூக்கி எறிய வேண்டும் என்ற அதே பழைய வட்டம் சற்றே சலிப்பு.

படத்தின் நீளம், இடையில் செருகப்பட்ட பாடல்கள் ரொம்ப சலிப்பு.

அப்பா தேவரா ஆடிய போது ரசித்த ரசிகர்கள், மகன் தேவரா கவர்ச்சி குத்தாட்டம் போட்ட போது ரசிக்கவில்லை. அதிக பொருட்செலவில் காட்டப்பட்ட கதாநாயகியின் கவர்ச்சியைக் கூட ரசிக்க விருப்பமில்லாமல் காலியான பாப்கானை நிறைக்க ரசிகர்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.

சிறிது கத்தரித்து, சரிசெய்து படத்தின் நீளத்தைக் குறைத்து, இரண்டு மூன்று சண்டைக்காட்சிகளை வெட்டி எறிந்து படத்தை நறுக்கென முடித்திருந்தால் நல்ல படமாக நினைவில் தங்கும் படமாக வந்திருக்கும்.

கண்டிப்பாக பார்க்கக் கூடிய அளவு நல்ல படம்தானா என்று கேட்டால், கடல் கொள்ளை காட்சிகளின் மெனக்கெடல்களுக்காகவும், படத்தின் கதையின் பின்புல சூழலியல் அழகுக்காகவும், அப்பா தேவராவுக்காகவும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காகவும் ஒருமுறை பார்க்கலாம் தான்.

தொடர்ந்து வாசிக்க, சில சமீபத்திய சினிமா விமர்சனங்கள் கீழே. 

மெய்யழகன் – சினிமா விமர்சனம்

ஆகச்சிறந்த தமிழ் சினிமா – லப்பர் பந்து – விமர்சனம்

சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்