Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

விபத்து- சிறுகதை (பலரை சிதைத்த கதை)

அருண், என்ஜினியரிங் முடித்த பட்டதாரி. வீட்டில் அருண் என்று தான் அழைப்பார்கள். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரன்.

படிக்கும் போதே கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தான் படித்த படிப்பிற்கும் மென்பொருள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் அந்த வேலைக்கு செல்வதில் அருணுக்கு பெரிய உடன்பாடு இல்லை.

ஆனாலும் சரியான பயிற்சி கொடுத்துதான் வேலையில் வைப்பார்கள், சம்பளமும் நல்ல சம்பளம் என்பதால் அவனுடைய அப்பா, இந்த வேலைக்கு சேர சொல்லி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

எப்படி இருந்தாலும் இன்னும் 40 நாட்கள், அவகாசம் இருக்கிறது். பொறுமையாக பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது.

நான்கு வருடம் கல்லூரி விடுதி வாழ்க்கை என்பதால், ஊரில் நன்கு சுற்றித்திரிந்தான். அவனை பெரிதாக அவன் பெற்றோர் கண்டிக்கவில்லை. சாப்பிட மட்டும் வீடு வந்தால் போதும் என்ற நிலவரம் தான். மற்ற நேரங்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றித்திரிந்தான்.

இவன் வயதை ஒத்த நண்பர்கள், வேறு வேறு இடங்களுக்கு, வேலைக்காக, படிப்புக்காக என்று பிரிந்து விட்டதால், இவன் ஊருக்கு வரும்போதெல்லம், ஊரிலேயே வேலை பார்க்கும் இவனது அண்ணனின் நண்பர்களுடனே பெரும்பாலும் நட்பு பாராட்ட நேரிட்டது.

அவர்களுடன் வேலை செய்யும் இடங்களுக்கு சென்று அங்கே அரட்டை அடிப்பது, அவர்கள் தங்கியிருந்த அறையில் சென்று அரட்டை அடிப்பது என பொழுதை கழிப்பான்.

அவனது அண்ணன் நண்பர்களில் சிலர் வெளியூரிலிருந்து வந்து அந்த ஊரில் வீடு எடுத்து தங்கி வேலை செய்தார்கள்.

ஊரிலிருந்த வரை அருண் எந்தவொரு கெட்ட பழக்கங்களையும் கற்றுக் கொண்டதில்லை. ஆனால் கல்லூரி வாழ்க்கையில் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் கூட, நண்பர்களும், குடிக்க இடமும் இருந்த காரணத்தால், அந்த பழக்கம் தொடர்ந்தது.

பையன் தப்பு செய்கிறானோ என்ற சந்தேகம் இருந்தாலும், நான்கு வருடம் பிரிந்து இருந்து இப்போது தான் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதால் அவனது பெற்றோர் எதுவும் பெரிதாக கேள்வி கேட்கவில்லை.

அது சாதகமானதால் தினமும் இரவில் அதிக நேரம் ஊர் சுற்றி விட்டு வீடு திரும்புவது, இரவு காட்சி செல்வது, சில நேரங்களில் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வது என இவனது அட்டகாசம் தொடர்ந்தது.

ஊர் சுற்றுவது சரி, அந்த வேலைக்கு போவதற்கு என்னவெல்லாம் தயார் செய்ய வேண்டும் என்பதை பார்த்து தயார் செய்யலாமே என பேச்சு வந்தது.

அந்த வேலையில் இணைவதற்கு, கடவுச்சீட்டு அவசியம் என்பதால், அதை தயார் செய்யும் வேலைகளை துவங்கினான்.

ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கான அலுவலகத்தில் அப்பாயின்ட்மென்ட்க்கு பதிவு செய்தான்.
அப்பாயின்ட்மென்ட் தேதி மே 28, 2010.

அவன் ஊரிலிருந்து மதுரைக்கு தான் கடவுச்சீட்டு விண்ணப்பிக்க செல்ல வேண்டும். கிட்டதட்ட 97 கி.மீ தூரம் அவன் ஊரிலிருந்து மதுரை.

அருண் வழக்கமான தனது வேலைகளை தொடர்ந்தான்.

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் முந்தைய நாள், அதற்கு தேவையான ஆவணங்கள், புகைப்படம், தனது அசல் சான்றிதழ்கள் என அனைத்தையும் எடுத்து ஒரு பையில் போட்டு வைத்தான்.

மறுநாள் காலை சீக்கிரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், அதிகாலை 5.30 மணிக்கு ஊரிலிருந்து மதுரை கிளம்பும் தனியார் பேருந்தில் ஏறி மதுரை செல்லுமாறு வீட்டில் பேசி முடிவு செய்தார்கள்.

அதிகாலை கிளம்ப இருப்பதால், இன்று இரவு அதிக நேரம் வெளியே சுற்றாதே, தயவு செய்து சீக்கிரம் வந்து படு என அவனது அப்பா சொல்லி அனுப்பினார்.

ஆனால் அன்று நடந்த கதை வேறு. அவனது அண்ணன் நண்பர்கள் அறையில் அன்று ஏதோ தண்ணி பார்ட்டி என்பதால் இவனையும் பிடித்து உட்கார வைத்து விட்டார்கள்.

கொஞ்ச நேரம் குடித்து அரட்டை அடித்து விட்டு, “நான் கிளம்புறேன் அண்ணா, நாளைக்கு மதுரைக்கு போகனும், பாஸ்போர்ட் எடுக்க“ என்று அருண் கூற, அவனது அண்ணனின் நண்பன் அஜய், ”இருடா, எங்க போற? நீ இல்லாம போரடிக்கும், இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பலாம்“ என்றான்.

இவனோ, பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி சொன்னதையே சொல்ல ஆரம்பிக்க அவனோ வேறு ஒரு யோசனைக்கு வந்து விட்டான்.

“உனக்கென்ன, நாளைக்கு பாஸ்போர்ட் எடுக்கனும், அவளோதான? நான் எப்படியும் சனி , ஞாயிறு வீட்டுக்கு போகத்தான் போறேன், நாளைக்கு லீவு போட்டா, உன் கூடவே நானும் வந்துடுவேன், உன்னைய பாஸ்போர்ட் ஆபிஸ்ல விட்டுட்டு நான் வீட்டுக்கு போறேன். நீ பஸ் க்கு கிளம்ப வேண்டாம், வண்டியில போலாம், லேட்டா கிளம்பினா போதும்” என்று சொன்னான். அந்த அஜய்க்கு மதுரை தான் சொந்த ஊர்.

“இல்லணா வண்டில லாம் போனா எங்கப்பா திட்டுவாரு, நான் அந்த 5.30 மணி பஸ் லயே போறேன், நான் கிளம்புறேன்” என்று அருண் மீண்டும் சொன்னான்.

“அப்பாட்ட சொல்லாத டா, காலையில எழுந்து இங்க வந்துடு, பஸ் ல போறேன்னு வீட்ல சொல்லிடு, நாம வண்டியில போலாம்” என்று அஜய் சொல்ல, “இல்லணா எப்படிதான் வண்டியில வேகமாக போனாலும் 2.5 மணி நேரம் ஆகும்.”

“நீங்க தூங்கி எழுந்து பொறுமையா வாங்க, என்னை விடுங்கள்” என்று அருண் மறுத்தான்.

“டேய், நான் தனியா 100 கிமீ வண்டி ஓட்டனும், பயங்கர போரடிக்கும். நீ மதுரை தான போற?”

“சரி உனக்கென்ன? என்னையும் 5 மணிக்கு எழுப்பு, அந்த பஸ்க்கு முன்னாடியே நாம கிளம்பலாம்“ என அஜய் மீண்டும் வற்புறுத்தினான்.

“இல்லணா, இப்பவே மணி 12.30. குடிக்க வேற செஞ்சுருக்கோம். விடிகாலையில அவளோ தூரம் வண்டி ஓட்ட முடியாது, சொன்னா கேளுங்க“ என்று அருணும், மற்றவர்களும் சொல்ல, அஜய் அதை மறுத்தான்.

“நீ எழுப்பு. நான் வண்டி ஓட்டுறேன். இப்ப வீட்டுக்கு கிளம்பு.” என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான்.

சரி காலையில இவன் எப்படியும் எழுந்திருக்க மாட்டான், நாம பஸ் ல போலாம் என்று எண்ணிக்கொண்டு அருண் கிளம்பினான்.

காலையில் எழுந்து வீட்டில் டீ எல்லாம் குடித்து, குளித்து கிளம்பினான் அருண். அவன் அப்பாவின் இருசக்கர வாகனத்தை பேருந்து நிலைய காப்பகத்தில் விட்டு, பேருந்தில் கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

கல்லூரி முடிந்து வீடு திரும்பியிருந்த காரணத்தால் அவனுக்கு 5 செட் புது டிரஸ் எடுத்து கொடுத்தார்கள்.

அதில் ஒன்றை போட்டுக்கொண்டு பள பளவென கிளம்பினான்.

போகும் வழியில் தான் அஜய் தங்கியிருந்த வீடு என்பதால் ஒருமுறை அவனை எழுப்ப முயற்சித்து விட்டு போகலாம் என்று அங்கே சென்றான்.

அவனுடன் வண்டியில் மதுரை வரை செல்ல இவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எழுப்பாமல் சென்றால் அவன் கோபம் கொள்வான் என்பதால் அங்கு சென்றான். வீட்டு வாசல்வரை சென்று, உள்ளே செல்ல விருப்பமில்லாமல் இருமுறை கால் செய்தான். ஒருமுறை மட்டும் கால் செய்துவிட்டு, பஸ் ஏறி விட்டால் அதற்கும் சண்டையிடுவான் என இருமுறை கால் செய்தான்.

இரண்டாவது முறையும் அவன் போனை எடுக்கவில்லை. சரி நல்லது என அருண் வண்டியை ஸ்டார்ட் செய்ய அஜயிடமிருந்து போன்.

அட சண்டாளா எழுந்து விட்டாயா? என்று போனை எடுத்ததும், “இரு, கிளம்பி வரேன்” என்று அஜய் சொன்னான்.

அவனும் கிளம்பி வர, இவன் அப்பா வண்டியை பேருந்து நிலைய காப்பகத்தில் போட்டு விட்டு இருவரும் அருகிலிருந்த டீ கடையில், டீ குடித்து விட்டு அவன் வண்டியிலேயே மதுரை கிளம்பினார்கள்.

கிளம்பும் முன் அஜய் வீட்டுக்கு போன் செய்து தான் வரும் தகவலை சொன்னான்!

“என்னடா சனிக்கிழமை வருவ, இன்னிக்கு கிளம்புறேங்குற, அதுவும் இவ்வளவு காலையிலேயே?” என்று கேட்க, காரணம் சொன்னான். “சரி உன் ப்ரெண்டுக்கும் சேர்த்து இட்லி செய்றேன், வந்து சாப்பிட்டு போக சொல்லு” என அவன் அம்மா சொல்ல, “இல்லமா, அவனுக்கு லேட் ஆயிடும், மதியம் வேணா சாப்பிட கூப்பிட்டுக்கலாம்”, என சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டு கிளம்பினார்கள்.

சரியாக 20 கிமீ தூரத்தில் ஒரு பெரிய விபத்து, பின்னால் உட்கார்ந்திருந்த அருண் பேச்சு கொடுப்பதை குறைத்தான், அவனுக்கு தூக்க கலக்கம், அவன் பேச்சு கொடுப்பதை நிறுத்தியதும் அஜயும் தூங்கி விட எதிரே வந்த காரில் வண்டி மோதி இருவரும் பறந்து கீழே விழ, அஜய் மீது அவன் வண்டியும் விழ, ஒரே ரத்த களமாகிப்போனது அந்த இடம்.

காரின் முன்பாகம் முழுவதுமாக நொறுங்கி, கண்ணாடி உடைந்து, காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த இருவருக்கும் பலத்த அடி.

சிறிது நேரம் மயங்கி கிடந்த அருண் பட்டென்று விழித்து எழுந்தான்.
சுற்றிலும் பெரிய கூட்டம், அஜயிடம் நெருங்க நினைத்தவனை கூட்டதினர் தடுத்தனர். “தம்பி ஆம்புலன்ஸ் வருது, நீ ஓரமா உட்காரு” என்று சொல்லி தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தார்கள்.

தனது சான்றிதழ்கள் கீழே எங்கேயோ விழுந்து விட்டதை சொல்ல முயற்சித்தான். யாரும் கேட்காததால் அவனே தேடிப்பிடித்தான்.
அவன் கொண்டு வந்த பையும், அவனது மணி பரஸ்ம் கிடைத்தது.
அதிலிருந்த பணத்தை காணவில்லை. உலகம் இப்படித்தானே?

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது.

அவனையும், அஜயையும் அதில் ஏற்றி சென்றார்கள். அருணுக்கு உடம்பில் பல காயம், பதினோறு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினான். அவனது இடது கையில் பலத்த அடி என்பதால் அவன் கையைத்தூக்கவே ஆறு மாதம் ஆனது.

அந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது உடமைகள் பறிக்கப்பட்டது, ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு தந்தி கொடுக்கப்பட்டது. ஏழை டிரைவர் என்பதால் பெயிலுக்கு கொடுக்க பணமில்லை. ஒரு வருடம் சிறையில் தான் கழித்தார்.

கடனில் வாங்கியிருந்த அவரது வாகனமும் சிதைந்து, வருமானம் இல்லாமல் அவரது குடும்பமும் வாடியது. அதற்கு மேற்கொண்டு் வழக்கு செலவு வேறு.

அஜய்!
அத்தனை பேர் அத்தனை முறை சொல்லியும் கேட்காமல் , அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான்.

ஆசையோடு அவனது வருகைக்காக காத்திருந்த அவனது குடும்பத்தை ஒரேடியாக ஏமாற்றினான்.

அண்ணன் இருக்கிறான், எனது படிப்பு செலவையும், திருமண செலவையும் பார்த்துக்கொள்வான், என்று நம்பியிருந்த அவன் தங்கையை ஏமாற்றினான். மகன் ஆளாகி விட்டான். வேலைக்கு போய்விட்டான்.
தனது சுமை குறைந்தது என்று நினைத்த அவனது தகப்பனின் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டான்.

“குடி, குடியைக் கெடுத்தது”!

தயவு செய்து குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்!

இது கற்பனை கதை அல்ல.

விபத்துக்குப்பின்னர், அதில் சம்பந்தப்பட்ட அந்த மூன்று குடும்பமும் அனுபவித்த நரக வேதனைகளை நான் சொல்லவில்லை.

அதை எழுதும் அளவிற்கு மனதில் தெம்பு இல்லை.

தயவு செய்து குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்!

இன்னொரு அஜய் சாக வேண்டாமே?
இன்னொரு அருண் வாழ்க்கையும், இன்னொரு ஏழை ஓட்டுனரின் வாழ்க்கையும் திசை மாற வேண்டாமே?

வீட்டில் நமக்காக காத்திருக்கும் உறவுகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசிப்போம், இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாக இருந்தால்!

நல்லதையே நினைப்போம்.

நல்லதையே செய்வோம்.

நல்லதே நடக்கும்!

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம் மற்றும் சென்ற மாத பதிவுகளை முன்வைக்கும் ஆசிரியர் குறிப்பு.