சில நினைவுகள் இனிமையாகவும், சில நினைவுகள் தீராத ரணமும் தரும் விதமாக அமைவது இயற்கை. அப்படி இனிமையாக அல்லாத நினைவுகள் நல்ல பாடத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
சமகால வராலாற்றில் மறக்க முடியாத நாள் செப்டம்பர் 11,2001. உலகத்திற்கே தீவிரவாதத்திற்கு எதிரான பெரிய படிப்பினையைத் தந்த மிகக் கொடுமையான ஏற்றுக்கொள்ளப்படாத அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த நாள்.
அமெரிக்காவிலிருந்த உலக வர்த்தக மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் பென்டகன் கட்டிடம் ஆகியவை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்ட நாள்.
இந்த சம்பவம் நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருந்திருக்கும். 1990 களில் பிறந்த என் போன்ற ஆட்களுக்கு அது ஒரு மிகப்பெரிய கதை.
அன்றைய தேதியில் சரியாக பத்து முதல் பதினைந்து வயது மிதிக்கத்தக்க என் போன்ற ஆட்கள் 2001 ல் இந்த சம்பவம் நிகழ்ந்த போது என்னென்ன யோசித்தோம் என்னென்ன பேசிக்கொண்டோம் என்பதைத் தான் இந்தப்பதிவில் ஒரு அலசலாக சமர்ப்பிக்கிறேன்.
முதலில் அந்த சம்பவம் எங்களுக்கு விளக்கமாக புரியவே இல்லை. நான்கு விமானங்கள் 19 தீவிரவாதிகளால் நான்கு அணிகளாகப் பிரிந்து கடத்தப்பட்டு இரண்டு விமானங்கள் முறையே நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களையும், ஒரு விமானம் வாஷிங்டன் நகரிலிருந்த பாதுகாப்புத் துறையின் பென்டகன் கட்டிடத்தையும் இடித்து தகர்த்தன. மற்றொரு விமானத்தில் இருந்த பயணிகளின் கிளர்ச்சியால் தீவிரவாதிகள் அதை கட்டுப்படுத்த இயலாமல் பென்சில்வேனியா அருகிலிருந்த ஒரு குடியிருப்பில் மோதப்பட்டது.
இந்த முழுக்கதையே எங்களுக்குத் நெரிந்திருக்கவில்லை. இரட்டை கோபுர தாக்குதல் என்று தான் தெரியும்
அப்போதெல்லாம் இன்று போல குண்டு வெடிக்கும் போதே படம் பிடிக்கும் செய்தி சேனல்கள் இல்லையே. பழைய தலைமுறை சொல்லும் செய்தியைத்தான் கேட்டு அறிந்து கொண்டோம்.
அந்த தீவிரவாத தாக்குதலுக்குக் காரணம் ஒசாமா பின்லேடன் என்ற தாடி வைத்த ஆள் என்பதை அறிந்து கொள்ள பக்குவம் இருந்தது.
அவர் மிக நன்றாகப் படிப்பவர் எனவும், ஸ்டேட் பர்ஸ்ட் ரேங்க் எடுத்தவர் எனவும் ஒரு செய்தி உலாவியது. ஒசாமா பின்லேடனின் ரேங்க் கார்டை பார்த்தவர் யார் என்றுதான் தெரியவில்லை.
அவருக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்த காரணத்தாலேயே இரட்டை கோபுரத்தில் எந்த இடத்தில் விமானம் மோதினால் மொத்த கட்டிடமும் இடியும் என்பதை கணிக்க முடிந்ததாகவும் சொல்லப்பட்டது.
எது எப்படியோ எனக்கும் எனது நண்பர்களுக்கும் பெரிய வாக்குவாதமே நிகழ்ந்தது.
கேப்டன் மட்டும் அங்க இருந்திருந்தா விமானத்தை மீட்டு, தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளி மக்களைக் காப்பாற்றியிருப்பார் என ஒருவனும், கேப்டனால் முடியாது அர்ஜூனும் கூட போனாதால் அது சாத்தியம் எனவும் ஒரு வாக்குவாதம். அடப்போங்கடா நம்ம கையில் துப்பாக்கி இருந்திருந்தாலே நாமளே சுட்டுருக்கலாம் என்றும் பேசியதாக ஞாபகம்.
எத்தனை ஆக்ரோஷமாக வாக்குவாதம் நிகழ்ந்திருப்பினும் எங்களது அனைவரது நோக்கமும் அந்த தாக்குதலை தடுப்பதாகவே இருந்தது.
அதாவது பத்து வயது குழந்தைகளின் மனதில் வன்மமோ தீவிரவாத எண்ணமோ இல்லை. அப்பாவி மக்கள் அமெரிக்க மக்களாக இருந்தாலும் சரி அவர்களை காப்பாற்றியிருக்க வேண்டும் என்ற எண்ணம்.
அதே குழந்தைகள் வளர்ந்த பிறகு ஏன் இத்தனை வன்மம், இத்தனை ஆக்ரோஷம். உலகம் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது, அன்பு ஒன்றே உலகை நல்வழிப்படுத்தும் ஆயுதம் என்பது ஏன் மறந்து போகிறது.
மதம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்துவதற்கும் நல்வழிப்படுத்துவதற்குமான ஒரு வழி என்பது மாறி, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்கா மதம்?
தனது மதக் கோட்பாடுகளை தனது மத புனித நூல்களை முறையாக படித்த ஒருவனும் இன்னொரு உயிருக்கு கடுகளவும் தீங்கு நினைக்கலாகானே?
இவர்களுக்கெல்லாம் அது ஏன் அறிவில் உதிக்காமல் போனது. இம்சை என்றுமே தீர்வு தருவதில்லை. அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்வோம்.
பேரன்புடன்
நினைவுகள்.