உணவு என்பது மனிதனின் அன்றாடத் தேவை என்பதைத் தாண்டி ஒரு பேசுபொருளாக, தகுதியை நிர்ணயிக்கும் விஷயமாக மாறிய பின்பு பல சீரழிவுகள் நடைபெறுகிறது.
மொத்த குடும்பமும் சேர்ந்து பெரிய பெரிய பவன்களிலோ அல்லது ரெஸ்டாரண்ட்களிலோ உணவருந்தி புகைப்படங்களைப் பதிவேற்றுவது வாடிக்கையாகி விட்டது.
ஏதோ ஒரு விஷேசம் அல்லது ஒரு திருமண நாள், பிறந்தநாள் அல்லது நண்பர்களின் விருந்து என்றில்லாமல் வார இறுதி என்றால் நாங்கள் அந்த பவனில் தான் சாப்பிடுவோம் என்று யதார்த்தமாக ஆரம்பித்தது இன்று வாடிக்கையாகி விட்டது.
சென்னை மாநகரில் நான் கண்டு வியந்த இரு விஷயங்கள் உண்டு.
ரேஷன் கடைகளில் ஊரில் அவ்வளவு கூட்டம் இருக்கும். இங்கே சென்னை வந்த பிறகு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், பொங்கல் பரிசு வழங்கும் நாட்கள், தவிர்த்து மற்ற நாட்களில் அவ்வளவு கூட்டமில்லை.
ஆனால் ஞாயிறு தோறும் பிரியாணி கடைகளில் அவ்வளவு கூட்டத்தைப் பார்க்கிறேன்.

நான்கு பேர் சாப்பிடும் பிரியாணி வாளியில் தரப்படுகிறது 1500 ரூபாய்க்கு.
அந்த பணத்தில் ஆட்டுக்கறி எடுத்தால் கிட்டதட்ட 1.5 கிலோவுக்கு மேலாக வரும். ஆரோக்கியமாக வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஏன் இவ்வளவு குடும்பம் பிரியாணி கடைகளில் காத்துக்கிடக்கிறது என்பது புரியவில்லை. அப்படி வாரம் வாரம் உணவகத்தில் ருசிக்காவிட்டால் உயிர் உடலில் தங்காதா என்ன?
இன்னொரு ஒரு குழு இருக்கிறது. புட்டீஸ் குழு, அதாவது உணவுப் பிரியர்கள் என்று தங்களை பரைசாற்றிக் கொண்டு, ரோட்டுக் கடையில் துவங்கி பெரிய உணவகம் வரை சாப்பிட்டு அதை புகைப்படம் பதிவேற்றி மகிழ்வது.
ஏன் நல்ல பொருட்களைத் தேடி சமைத்து சாப்பிட்டால் ஆகாதா?
இந்தக் கட்டுரை ஒட்டுமொத்த வெளி உணவுப் பழக்கத்திற்கு எதிரானது அல்ல. அளவுக்கு மிஞ்சுகிறது என்ற எச்சரிக்கையாகத்தான்
இன்று டெல்லியலிருந்து சென்னை வந்த ரயிலில் 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சி கண்டறியப்பட்டுள்ளது.
நாம் வீட்டில் இறைச்சி வாங்கி சமைத்தோமேயானால் அதை சுத்தம் செய்யும் போதே அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து விடலாம். ஆனால் உணவகத்தில் இப்படியான கெட்டுப்போன இறைச்சியை மசாலா தடவி சரிசெய்து விற்று விடுவதாக பல புகார்களை சந்தத்திருக்கிறோம்.
சென்ற வாரம் கூட ஒரு பிரபல பிரியாணி கடையில் கொடுக்கப்பட்ட பிரியாணியில் ஆட்டிறைச்சியின் உள்ளே புழு இருந்ததை காணொளியாக பதிவேற்றியிருந்தார்கள்.
புழு இருக்கிறதோ இல்லையோ, நாம் வீட்டில் சமைக்கும் போது இறைச்சியை எந்த அளவுக்கு சுத்தம் செய்கிறோமோ அப்படி உணவகத்தில் செய்வார்கள் என்பது என்ன நிச்சயம். அப்படி நிச்சயமில்லாத விஷயத்தை நம்பி நமது குழந்தைகள் உட்பட அனைவரது ஆரோக்கியத்தையும் சீரழிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
உணவகமே வேண்டாம் என்பதல்ல. ஆனால் ஒரு அளவோடு அதை நிறுத்திக் கொள்ளலாமே?
சுவர் இல்லாமல் சித்திரம் ஏது. நல்ல வாழ்க்கைக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தேவை தானே?
புதிது புதிதாக பல நோய்கள் வரும் இந்தக் காலத்தில் வியாபார உணவுகளிடம் ஆரோக்கியத்தை அடமானம் வைக்கலாமா?
வாசகர்களின் மீதான அன்புடன் நினைவுகள்.