பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை.
பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம்.
“பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை.
பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை நமக்கு பரீட்சயமான அறிவு என்ற ராப்பர் தான். இவர் rap மட்டும் பாடுபவர் அல்ல. தமிழகத்தின் நாட்டுப்புற பாராம்பரிய இசையும், தேவாலயங்களில் பாடப்படும் gospel இசையும், சமூக விழிப்புணர்ச்சிக்காக எழுதப்பட்ட அறிவொளி இயக்க இசையும் கேட்டு வளர்ந்திருக்கிறார்.
இதற்கான ஆதாரங்கள் இந்த கோப்பு முழுக்க நிறைந்திருக்கிறன. உதாரணமாக தேயிலை பறிக்கும் போது பெண்கள் பாடும் “தேய்யாலாலா லாலாலாலா தேய்யாலாலா தேய்யல“ என்ற நாட்டுப்புற பாடல் கங்காணி என்ற பாடலில் இடம் பெற்றுள்ளது.
கங்காணி என்பவன் கண்காணிப்பாளன், சூப்பர்வைசர், இடைத்தரகர் என்று சொல்லலாம். தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களை கூட்டி வரவும், அவர்களை கண்காணிக்கவும் நியமிக்க பட்ட ஆட்கள்.
நாளப்பொரம் நாரப்பெருமரமாஅறிவு , வள்ளியம்மா பேராண்டி தொகுதி-01
கால காலமா வெட்டும் விரகா
கப்பல் ள ஏறி தொட்டில்ல ஆடி,
அட்டகடி வாங்கி, மிச்சம் தான் கூலி,
...
கங்காணி கங்காணி கருத்த கோட்டு கங்காணி
நாலாளு வரலனா நக்கி போவான் கங்காணி
இந்த பாடலின் அரசியல், அறிவு பற்றி அறிந்தவர்களுக்கு வியப்பாக இல்லை. வியப்பூட்டும் விஷேசம் இந்த கோப்பில் பரவலாக காணப்படும் காதல் பாடல்களும், பெரிய கருத்தம்சம் இல்லாத பொழுதுபோக்கு பாடல்களும் இருப்பதாக தோன்றுவது தான். இது ஏன் என்று புரிந்து கொள்ள இதன் பின்னிருக்கும் அரசியலும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
என்ஜாய் எஞ்சாமி (Enjoy Enjaami) என்ற பிரபலமான பாடலின் உருவாக்கத்திலும், அதன் வரவேற்பிலும் அறிவு சந்தித்த கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டே இந்த இசை கோப்பை இயற்றியிருக்கிறார். அப்படி என்ன நடந்து விட்டது என்ற கேள்வி எழுப்புவோர் அந்த பாடலின் வரிகளையும், அதன் படமாக்கலையும் கவனித்தால் போதும்.
பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா,அறிவு, என்ஜாய் எஞ்சாமி
வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா,
ஆக்காட்டி கருப்பட்டி, ஊதங்கொழு, மண்ணுச்சட்டி,
ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம்,
ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே,
உப்புக்கு சப்பு கொட்டி முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு.
நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே
என் கடலே, கரையே,
வனமே, சனமே,
நிலமே, குளமே,
இடமே, தடமே,
எஞ்சாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி,
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
இயற்கையையும், நிலத்தையும், விவசாயிகளையும் வணங்கி, பாடுபட்டு வியர்வை சிந்தும் மக்களை ஒன்றுபடுத்தும் பாடல் வரிகளுக்கு, சில பின்னணி ஆட்டக்காரர்களுடன், பாடகி மட்டும் அரியணையில் வீற்றிருப்பது போல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
பாடலை எழுதி, rap சந்தங்களை பாடி, சரி பாதியான காட்சிகளிலும் நடனமாடியும், பாடியும் இருக்கும் அறிவு featuring என்ற பெயரில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பார்.
ஒப்புக்கு சப்பாணி போல 4,5 கிராமத்து பெரியவர்களின் முகங்கள் கடைசி நிமிடத்தில் புகைப்படமாக வந்து போகும். கடைசி அரை நொடிக்கு அறிவின் பாட்டியை காட்டுகிறார்கள்.
ஆங்கிலத்தில் featuring என்ற சொல்லுக்கு, காட்சியளிக்கிறார், அல்லது வந்து போகிறார் என்று பொருள். 3 நிமிட பாடலில் 1 நிமிட அளவிற்கும் குறைவாக வேறொரு பாடகர் வந்து போவது feat என்று குறிக்கப்படுகிறது.
என்ஜாய் என்ஜாமி பாடலில் அறிவு வந்து போகிறார் என்பது நிஜமா? இந்த பாடலில் ஒருவனை எவ்வாறு ஈர்க்கிறது? ஓடியா ஓடியா… குக்கூ குக்கூ… என்ற இசையாகும் சொற்களா, அல்லது பாடலில் உள்ள பின்னணி இசையா? இந்த பாடலை எழுதியது யார்? வேலை செய்பவன் ஒருவன் அதற்கான பலனை அனுபவிப்பவன் வேறொருவன்.
அந்த வார்த்தைகளின் பொருள் அறியாமல், அதன் ஆழம் புரியாமல், புரிந்து கொள்ள எள் அளவேணும் உழைப்பில்லாமல் படமெடுத்த இயக்குனரை என்ன சொல்வது?
500 மில்லியன் பார்வைகளை கொண்ட பாடலுக்கு இன்று வரை official லிரிக் வீடியோ கிடையாது. 1,700 கொண்ட இந்த rap பாடலுக்கு உண்டு லிரிக் வீடியோ.
ஒரு வேலையை சிலருடன் இணைந்து செய்யும் பொழுது அதற்கான அங்கீகாரம் சரியாக பிரித்து கொடுக்கப்பட வேண்டும். நாம் இணையும் நபர் நம்மை விட பணத்திலோ, பதவியிலோ, சிறியவராக இருக்கும் போது இன்னும் முக்கியம். பிள்ளைகளுடன் விளையாடும் பொழுது நாம் அவர்களுக்கு விட்டுக்கொடுத்து அவர்கள் செய்தது போலவோ வென்றது போலவோ காட்டிகொள்வது இல்லையா அது போல.
நாம் விரும்பும் பொருளை ஒருவர் அதன் மதிப்பு தெரியாமல் அழுக்காக்கி, கீழே போட்டுவிட்டு போய் விட்டால், அதனை நாம் எடுத்து சுத்த படுத்தி வைத்துக்கொள்ள மாட்டோமா? அது போல அவரது பாடலை திரும்ப எடுத்து விரிவு படுத்தியிருப்பதன் விளைவு வள்ளியம்மா பேராண்டி.

“என்னடா பெரிய ஹிப்ஹாப்பு? கட்டிக்கிட்டு வாடா ரோசப்பூ“ என்று கேலியாக துவங்கினாலும், அறிவ் அறிவ் அறிவ் அறிவ் என்று சொல்வது வரி வரி வரி வரி என்று நம் காதில் விழுவதும், வரி வரியான கவிதைகளை மையமாக கொண்ட இந்த இசைகோப்பை ஹிப்ஹாப் என்று வகை படுத்த காரணம் இதன் அரசியல்.
கங்காணி க்கு பிறகு ராசாத்தி என்ற பாடலால் கொஞ்ச நேரம் பஞ்சாபி கலந்து இளைப்பாற்றிவிட்டு, தொடாத என்ற தீண்டாமை பற்றிய பாடலை முன் வைக்கிறார்.
தொட்டாலே தீட்டு படுமா? நாங்க தொடாத பொருள் எதுவா?
என்று ஆரம்பிக்கும் பாடல் தீண்டாமை கொள்கையை வார்த்தை எனும் வெடிகுண்டால் பொறித்து எடுக்கிறது.
அது எதனால, அடுப்பு வெந்ததே இவனால ,
உனக்கு உடுப்பு வந்ததே அவனால,
அடுக்குமாடியும், வெளுத்த ஆடையும், கருப்பு மேனியின் கரையால,
தலைமுறையால,
கல் கடவுளானதே இவனால,
வடிச்ச சோறு அவன் வியர்வை.
படுத்து தூங்க இவன் போர்வை.ஏன்டா? கருவிலேயே கடவுளை நெறிக்கிற கொரவலையே,
அறிவு , வள்ளியம்மா பேராண்டி தொகுதி-01
பரம்பரை படிப்புல பழங்கதை கலக்குற
கடவுளை செத்துக்குற கரங்களையே,
அழுக்குன்னு ஒதுக்குற அரகொரயே,
நம்மாளு, கலவைய கேளு,
தொட்டா தீட்டுன்னு சுத்துன ரீலு,
பக்கா ஷார்ப் இந்த கத்திரிகோலு,
வித்தையை கற்றது புத்தரு ஸ்கூலு…
பாடகி தீ (Dhee) அவர்களும் தற்காலத்தில் இரண்டு பாடல்களை சுதந்திரமாக வெளியிட்டிருக்கிறார். “I wear my roots like a medal” என்ற பாடல் நமது சர்ச்சைக்கு சம்பந்த பட்டதாக தெரிகிறது.
பறை இசை பின்னணியில் இவரே ஆங்கிலத்தில் எழுதி அமைந்திருக்கும் பாடல், தீயின் பாட்டி வழியாக வரும் இலங்கை தமிழ் கலாச்சாரத்தை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது. இவரது குடும்பம் இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு இடம் பெயர்ந்த பல குடும்பங்களில் ஒன்று.
Generational traumasDhee, “I wear my roots like a medal”
fear and rest of the mental dilemmas weighed heavy on me
I didn’t know how to make it stop
I didn’t know how to make it stop
I was caught in the middle
spent way too long feeling lost and refused
now I got my foot on the pedal
so I wear my roots like a medal
வேர்களை பதக்கமாக அணிந்து கொள்கிறேன் என்கிற வாக்கியத்தில் உள்ள வன்மம் இவருக்கு புரிந்து தான் எழுதியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
பயம், கவலை, சுதந்திரம் போன்ற தலைப்புகளை கையாண்டாலும், இவரது பாடல் உள்பார்வை மட்டும் கொண்டிருப்பதால் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருவர் வேர்களை பற்றி பாட வேண்டும் என்று சந்திக்கின்றனர், ஒருவர் அதை அணிந்து கொள்ள விரும்புகிறார், ஒருவர் அதற்கு தண்ணீர் ஊற்ற நினைக்கிறார்.
1800 களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அடிமையாக கொண்டு செல்லப்பட்ட மக்களில் பலர் 1960களில் இலங்கையில் குடியுரிமை வழங்கப்படாமல், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களுள் ஒருவரான வள்ளியம்மா பாட்டி தன் பிள்ளைகளை படிக்க வைத்ததால் பூத்த ரோசாப்பூவின் பெயர் தான் இந்த கதையின் நாயகன், பிக்சன் என்று பெற்றோர்களால் அழைக்கப்படும் அறிவரசு கலைணேசன். ஆஹா எவ்வளவு அழகான பெயர்.
origins என்ற பாடல் விலங்குகள் போடும் சத்தங்களில் இருந்து மொழி எப்படி உருவாகியிருக்கலாம் என்பதை இசையால் சொல்கிறது. இந்த பாடலை கூர்ந்து கேட்கும் ஒவ்வொரு முறையும் புல்லரிக்கிறது. கீழே வரும் திருக்குறளை இதனுள் வைத்திருக்கிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்திருவள்ளுவர், குறள் 619
மெய்வருத்தக் கூலி தரும்
இதன் பின் வரும் பில்லியன்ஸ் (billions) என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடல் உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் ஆனால் ஒரே ஒரு உலகம் என்ற கருத்தை முன்வைக்கிறது.
It’s a paradise, why are we paralyzed?Arivu, Valliamma Perandi Vol 1
When we go analyze, we may just realize,
its a paradise, why are we paralyzed?
Brother bigson mandela என்ற பாடல் பிக்சனின் கற்பனையில் உருவான உலகம் எப்படி இருக்கும் என்பது போல் இருக்கிறது. இதில் தான் பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை, நமக்கு பரீட்சயமான அறிவு தான் என்பது தெரிகிறது.
I’m just a young man tryna understand, why they mad at me for what my ancestors demand?Arivu, Valliamma Perandi Vol 1
இதன் பின்னர் மாலா என்ற பாடல் பெண் பிம்பங்களை தேடி வெறுத்துபோகும் ஆணின் அனுபவத்தை விளையாட்டாக சொல்கிறது.
Diamond பேபி, என்ற பாடல் வைரக்கல் விற்பனையாளர்கள் நடத்திய ஆடை அனைவகுப்பு நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டது. Diamond விற்பனையாளரின் நிகழ்ச்சியில் பெண்கள் நடந்து வரும்போது அவர்களுக்கு இடையில் நின்று பாடல் பாட வேண்டும் என்பது வேண்டுகோள்.
இது போன்ற தருணங்கள் சமூக கருத்துக்களை முன்வைக்க ஏகுவாக இருப்பதில்லை என்பதை கருதி, கீழ் வரும் ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்ட பாடலை முன் வைக்கிறார்.
இது அறிவின் புதிய இடத்தையும், அதனால் வரும் சிக்கல்களையும் குறிக்கிறது. இதனை முதிர்ச்சியுடன் கையாள்கிறார். வைரத்தில் இருந்து அதை அணியும் பெண் மீது திருப்பி அழகாக்கிவிடுகிறார்.
ஏய் உச்சகட்ட அழகே,அறிவு , வள்ளியம்மா பேராண்டி தொகுதி-01
வா கிட்ட கிட்ட அருகே,
நீ வெட்கப்பட்ட பொழுதே,
நான் பத்திக்கிட்ட மெழுகே…
நடக்க நடக்க நரம்பு துடிக்குதே
உன் இடுப்பு மடிப்பில் இதயம் வெடிக்குதே
பவள சிரிப்பில் கவலை மறக்குதே
விரலை உரசி வைரம் மினுக்குதே
...
நீ சிரிச்ச சிரி கவிக்கு நிலக்கல்லே,
நின் அழகு விழிக்கு அறிவு fan அல்லே!
இந்த பாடல் முடிந்தவுடன் வைரக்கல் அழகாக இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல் இன்பம் கொடுப்பதில்லை, உண்மையான ஆனந்தம் வாழ்க்கையில் இருக்கிறது என்பது போல
தாத்தாக்கா பித்தக்கா தவளாசோறு எட்டாக்கா ஏளக்கா எருமப்பாலுஅறிவு , வள்ளியம்மா பேராண்டி தொகுதி-01
கிராமத்து வாழ்க்கையின் அழகை விவரிக்கும் அழகான பாடல்
நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது, இந்த காகர கிராமத்திலே, வெண்பாக்க வட்டத்திலே, தெருவிளக்கிலே படிக்கின்ற பிள்ளைகளுக்கு, புத்தக்கத்த கையில் எடுத்தா யுத்தமெல்லாம் ஜெயிக்கலாமுங்கோ….
அறிவு , வள்ளியம்மா பேராண்டி தொகுதி-01
என்ற அழகிய தத்துவத்தோடு முடிகிறது.
இது போன்ற பாடல்கள் கொடுக்கும் அனுபவமும், மனிதர்களை நகர்ந்து போக செய்கிறது. மனிதர்கள் தனித்து செயல்படுவது இல்லை, இவர்களின் செயல்பாடுகள் அவர்கள் வாழும் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது என்று ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
எல்லா தரப்பினரையும் தன் இசை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தொகுப்பை இயற்றியிருப்பதாக குறிப்பிடும் அறிவு, தன் கோவத்தை மட்டும் அல்லாது இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை கற்று கொண்டாதாகவும் தெரிவிக்கிறார்.
தேவையாற்ற சத்தங்களை கேட்காமல் காதை பொத்திக்கொள்வோது போல block பண்ணிட்டேன் என்ற பாடல் கென்றிக் லமார் போல lite ஆக வம்பு இழுக்கிறது.
பிறகு சார்பாக என்ற கேலிக்கையான பாடலுடன், விவரம் தெரியாமல் விமர்சனம் செய்பவர்களை கேலி செய்யும் விதமாக தொகுப்பு முடிவடைக்கிறது.
யப்பா யப்பா யப்பா யப்பா வெறுப்பேத்தாத
நீ கச்சா மூச்சா வார்த்தை சொல்லி கடுப்பேத்தாத
இன்றைய hiphop இசையின் அரசன் kendrick lamar. இவருடைய இசைக்கு கான்சியஸ் (concious) hiphop என்று பெயரிடுகிறார்கள், அதாவது தன் சூழலை அறிந்து, வாழ்வில் இருந்து எடுக்கப்படும் இசை. ஹிப்ஹாப் இசையை பொருத்த வரை, தனியாக பாடலை கேட்பதை விட முழு இசைகோப்பையும் (ஆல்பம்) கேட்கும் பொழுது, ஒரு புத்தகத்தை வாசித்த, மற்றும் symphony கேட்ட அனுபவத்தை கொடுக்கிறது.
மேலுள்ளவை அனைத்தும் அறிவுக்கும் பொருந்தும். வள்ளியம்மா பேராண்டி சராசரியான அமெரிக்க ஹிப்ஹாப் போல கெட்ட வார்த்தைகள் இல்லாமல் அழகான, எளிமையான தமிழில் இயற்றிறப்பட்டிருக்கிறது.
12 பாடல்கள், 40 நிமிடம் ஓடும் பாடல் தொகுப்பு வேகம் கூடியும் குறைந்தும், வார்த்தை விளையாட்டுகளோடு, ஒரு பாடலின் இசை வேறொரு பாடலில் கலந்து வருவது, வெவ்வேறு குரல் அமைப்புகளில் பாடுதல் என்பது போல ஹிப்ஹாப் இசைக்கு உரித்தான பண்புகளோடு, நேரத்தை அழகாக கடத்துகிறது. எந்த சூழலிலும் கேட்பது போல பின்னணி இசை, பலமாக இருந்தாலும் பாடல் மீது பாரமாக இல்லாமல் செதுக்கியிருப்பது சிறப்பு.
இந்த அறிவு களஞ்சியத்தில் இருந்து இன்னும் பல உண்மைகளை எடுக்கலாம், தங்களது பொன்னான நேரங்களை வெகுவாக எடுத்துக்கொண்ட காரணத்தால் நினைவுகள் வலைத்தளம் சார்பாக விடைபெற்றுக்கொள்கிறோம்.
(பி.கு. இந்த பதிவின் நோக்கம் ஒருவருடைய கலையை குறைத்து மதிப்பிடுவது கிடையாது, சமூகத்தில் உள்ள ஏற்றதாழ்வுகள் ஒருவருடைய நோக்கம் இல்லாமல் கூட எப்படி வெளிப்படக்கூடும் என்பதை சித்தரிக்கவே. வாசித்த உள்ளங்களுக்கு நன்றி.)
தொடர்ந்து வாசிக்க, தமது ஊரின் கசாப்பு கடையின் நினைவுகளை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார்.
அன்பர் அருண் பாரதியுடன் சேர்ந்து இயற்றிய வாழை திரைப்படத்தின் விமர்சனம் இங்கே.