Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் – வைஷ்ணோ தேவி

திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து வழிபடும் தலமான மாதா வைஷ்ணோ தேவியின் தலத்தைப் பற்றி வாசித்து, சிந்தித்து, நன்மை அடையலாம் என்ற நோக்கில் இந்த கட்டுரை. ஆண்டுதோறும் கிட்டதட்ட 8 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக தகவல்.

மாதா வைஷ்ணோ தேவி கோவில் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள கோவில்.

வைஷ்ணோ தேவி ஆலயம்

சக்தி வழிபாட்டிற்கு பிரபலமான இத்தலத்தின் தெய்வம் மாதா ராணி அல்லது வைஷ்ணவி தேவி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

வட இந்தியாவில் அமைந்துள்ள முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. இது இமய மலையின் மீது 5200 அடி உயரத்தில், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திரேதா யுகத்தில் பூமியை தீமையிலிருந்து காக்க, முப்பெரும் தேவியரால் உருவாக்கப்பட்டவர் இந்த வைஷ்ணவி தேவி என்று குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் வசித்த நீண்ட நாளாக குழந்தை இல்லாத தம்பதி ரத்னாகர்சாகர்- சம்ரிதி தேவிக்கு மகளாகப் பிறந்தார் இந்த வைஷ்ணவி தேவி.

குழந்தைப் பருவத்தில் இவர் திரிகுடா என்று அழைக்கப்பட்டார்.
விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் தனது குழந்தைக்கு வைஷ்ணவி என்று நாமம் சூட்டினார்.

தனது ஒன்பது வயதில் விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்த திரிகுடா வை ராமர் தனது படைகளுடன் சீதையைத் தேடிப் போகும் வழயில் கண்டார். தன்னை மணந்து கொள்ள விண்ணப்பம் வைத்த திரிகுடாவிடம், இந்த ஜென்மத்தில் தான் ஏகபத்தினி விரதன் என்றும், கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்கும் போது உன்னை மணந்து கொள்வேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம்.

அதுவரை திரிகுடா என்ற வைஷ்ணவி தேவி அமரராக நிலைத்திருப்பார் எனவும், உலகம் முழுக்க அவர் புகழ் ஓங்கும் எனவும் ராமர் வரம் அளித்தார்.

காலங்கள் ஓட அன்னையின் புகழ் பரவியது.

தன்னுடைய பக்தரான ஸ்ரீதர் என்பவரது குடிசையில் ஒருசேர 360 மக்களை அமர வைத்து விருந்து ஒன்றை நடத்த அன்னை அருள் புரிந்தார்.

பைரவ் நாத் என்ற சுயநலமிக்க அரக்கன் இந்த பெண்ணிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

அவனிடமிருத்து விலக வேண்டும் என்று மலைகளில் பதுங்கிய அன்னை அவனை நோக்கி விட்ட அம்பு தவறி பட்ட இடத்திலிருந்து ஒரு நீரூற்று கிளம்பியது. பாணம் எய்து கிளம்பிய நீரூற்று என்பதால் பாணகங்கை என்று அழைக்கப்படுகிறது.

இதில் குளித்தால் செய்த பாவங்கள் கரையும் என்று நம்பப்படுகிறது.

அன்னை ஒரு குகையில் பதுங்கினார். ஆனாலும் அவரைக் கண்டறிந்த அரக்கன் அவரை கொல்ல வந்த போது அன்னை காளி உருவமெடுத்து அரக்கனின் தலையை வெட்டினார். இதில் அரக்கனின் தலை இரண்டு கிமீ தள்ளி விழுந்தது.

சாகும் போது அரக்கன் அன்னையிடம் மன்னிப்பு கேட்டான்.
தனது முக்திக்காகவே அரக்கன் அவ்வாறு செய்ததை அறிந்த அன்னை அரக்கனுக்கு அருளினார். அரக்கனின் தலை விழுந்த இடம் இன்று பைரவ குகை மற்றும் பைரவ கோயிலாக இருக்கிறது.

பைரவர் கோவில்

அன்னையை தரிசிப்பவர்கள் இந்த பைரவரையும் தரிசித்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கத்ரா என்ற இடத்திலிருக்கும் துவார் என்ற நுழைவு வாயிலில் அனுமதி்சீட்டு வாங்கிக் கொண்டு 12 கிமீ மலையேறி இந்த அன்னையை தரிசிக்கலாம்.

வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் பாதை

ஒவ்வொரு 1.5 கிமீ க்கும் கடைகளும், தண்ணீரும், தங்குமிடமும் உண்டு.

குதிரை சவாரியும், ஹெலிகாப்டர் பயணமும் உண்டு.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் இருபுறமும் மதில் மற்றும் வலைகளுக்கு நடுவே ஒரு பாதுகாப்பான பயணம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாழும் தெய்வமான வைஷ்ணவா தேவியைக் காண வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்யலாம். அந்த வாய்ப்பு அமையும் வரை மனதார நினைத்து நம் இருப்பிடத்திலிருந்தே வேண்டிக் கொள்ளலாம்.

தொடர்ந்து வாசிக்க, இதற்கு முன் வெளிவந்த அறிவோம் ஆன்மீக தகவல் பகுதி திருக்குறுங்குடியின் கோவில்களை பற்றி பேசுகிறது.