Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருப்பம் தரும் திருப்பதியின் திருப்தியான விருந்து

நினைவுகளில் இருந்து நீங்காமலிருக்கும் சில விஷயங்களில் ஒன்று சாப்பாடு.

சோறு தான் சார் முக்கியம் என்று வாழும் பல உன்னத ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம்.

நம் அனைவருக்கும் என்றோ, எங்கேயோ, எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, அது நிகழ்ச்சி விருந்தாகவோ, கோவில் திருவிழா பந்தியாகவோ அல்லது உணவக விருந்தாகவோ கூட இருந்திருக்கலாம், அது என்றும் இனிய நினைவு தான்.

அப்படி இங்கே பலரும் கடந்து வந்திருக்கக் கூடிய இனிய உணவு உபசாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அன்னதான உணவு.

விறுவிறுவென ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்த்தப்பட்டு தயாராக இருக்கும் தையல் இலைகளில் (தற்போது வாழை) வண்டிகளில் தள்ளப்பட்டு வரும் சுடுசோறு இருபுறமும் சட சடவென பரிமாறப்பட்டு, அந்த சோறு கிளரப்படும் முன்னரே பின்னாடியிருந்து வரும் இன்னொரு வண்டியிலிருந்து சோறின் மீது சூடான சாம்பார் ஊற்றப்படும். தொட்டுக்கொள்ள மல்லித்துவையல்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ரசமும் , மோரும் வந்து நம்மைக்கடந்து விடும். அவை வருவதற்கான நேரத்தை கணக்கிட்டு அதற்குள்ளே இந்த சாம்பார் சோறு முழுதையும் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும் அல்லது ரசத்திற்கான பள்ளம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதன் நடுவே இரண்டாவது முறை சோறு வேண்டுமா என்று வேறு ஒரு வண்டி வரும். அடேங்கப்பா இன்னொரு தபா சோறு வாங்கி சாப்பிடும் ஆட்களுமுண்டோ என்று நாம் ஆச்சரியப்பட்டாலும் கூட அதற்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

மொத்தக்கூட்டமும் காலி ஆகும் முன்பு நாமும் சாப்பிட்டு எழுந்து விட வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே அந்தப்பந்தியின் போது நமது நினைவில் இருக்கும்.

ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்து விட்டால் பெருமாளை தரிசித்த ஒரு திருப்தி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

மனிதனை வாழ வைக்கும் கடவுள்களில் சோறும் ஒன்றுதானே!

உணவு தானே முதல் அத்தியாவசியம். அது தெரிந்து தான் இன்று பல கோவில்களிலும் அன்னதானம் நிகழ்கிறது.

கோவிலுக்குச் சென்றால் உனக்கு என்ன கிடைக்குமோ தெரியாது, ஆனா போஜனமுண்டு என்பது பரைசாற்றப்படுகிறது.

தமழகத்திலும் பல கோவில்களிலும் அன்னதானம் துவங்கி விட்டாலும், திருப்பதி அன்னதானம் என்பது திருப்தி ஆன ஒன்று தான்.

மாற்றான் தாய்ச்சோற்றின் மனம் நம்மைக்கவர்ந்த காரணமோ என்னவோ, தமிழனுக்கு திருப்பதி மீது தீராத மோகம்.

திருப்பதியின் மற்ற அனைத்தையும் புறக்கணித்து இன்று அன்னதான சாப்பாட்டின் நினைவுகளோடு சிறிது பசியாறலாம்.