Categories
குட்டி கதை தமிழ்

தெனாலிராமன் விகடகவியான கதை

அக்பருக்கு ஒரு பீர்பால் போல, நமது நாட்டில் கிருஷ்ணதேவ ராயரின் சபையை அலங்கரித்த தெனாலி ராமன் சிறப்பு.

விகடகவி என்ற பட்டம் பெற்ற தெனாலி ராமனுக்கு ஏது அத்தகைய அறிவு, எவ்வாறு அப்படி பட்டம் பெற்றார் என்று சினிமா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் கதையின்படி மிகவும் வறுமையிலிருக்கும் தெனாலி ராமன் காளியிடம் கடுமையான வேண்டுதலில் இருந்து வரம் பெற்று அந்தப் பட்டத்தையும், கிருஷண் தேவராயரின் அன்பையும் பெறுகிறார்.

இதற்கு ஒரு செவி வழி செய்தியும் உண்டு. கிட்டதட்ட அதே தான் ஆனால் அதில் ஒரு சின்ன வித்தியாசம்.

மிகவும் வறுமையில் வாடும் தெனாலி ராமன் தனக்கு கோவிலே கதி என்று காளி கோவிலுக்கு சென்று மன்றாடி வேண்டுகிறான்.

காளியிடம், இப்போது எனக்கு நீ அருள் தராவிட்டால் நான் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சாகத் துணிகிறான்.

அப்போது அவன் முன்னே காளி அவதரித்து, “ஏனப்பா சாகப்போகிறாய், என்ன பிரச்சினை?“ என்று கேட்கிறாள்.

தெனாலி ராமனோ “எனக்கு இருக்கிற பிரச்சினையை சொல்கிறேன், அதற்கு முன் எனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தை நீ் தீர்த்து வை” என்கிறான்.

“சரி சொல்லப்பா, உன் ஐயம் என்ன?“ என்று காளி வினாவ,

“மனிதப்பிறவிகளான எங்களுக்கு ஒரு முகம் இரண்டு கை இருக்கும் போதே சளி பிடிக்கும் போது சமாளிப்பது கடினமாக உள்ளது. நீ் பத்து முகங்களைக் கொண்டிருக்கிறாயே, ஓட்டுமொத்தமாக சளி படித்தால் பெரிய சிக்கலாகி அல்லவா போகும்?“ என்று கேட்கிறான்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்த காளி, “கோபத்தின் உருவமாக இருக்கும் என்னையே சிரிக்க வைத்துவிட்டாயே?”

“உனக்கு நல்ல அறிவையும், ஆளுமையையும் தருகிறோம். இதுபோலவே எல்லாரையும் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து நற்காரியங்களை நிலைநாட்டுவாயாக. விகடகவி என்ற பட்டமும் கிடைக்கப்பெற்று, மீதி வாழும் வாழ்வை செழுமையாக வாழ்வாயாக.“ என்று வாழ்த்தி மறைகிறார்.

பள்ளிப்பருவ செவி வழி கதைகளின் நினைவுகள்.

இன்னொரு குட்டி கதை வாசிக்க.