நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம்.
தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது.
தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை.
ஒரு அரசு அதிகாரி, அரசியல்வாதி தவறு செய்யும் போது மண்ணை வாரி இறைக்கும் இதே மக்கள் சமுதாயம் தான் 200 ரூ, 500 ரூ என்று வாங்கிக் கொண்டு தனது ஓட்டுகளை விற்கிறது.
மாற்றம், திருத்தம் என்பது தன்னில் துவங்க வேண்டும் என்பதை ஒருவரும் ஏற்றுக்கொள்வதில்லை.
என்னுடைய இரண்டு அனுபவங்களில் இதை பகிர்கிறேன்.
சபரிமலைக்கு நான் மாலை ஏதும் போடாமல் நண்பர்களோடு ஒரு இனிய பயணமாக புலிப்பாதை என்று சொல்லப்படும் பாதையில் சென்றேன்.
அதாவது குமுளி சென்று பெரியார் பாதையின் அருகே மலையேறத் துவங்கினால், கானக வழியாக 12 கிமீ தொலைவில் சபரிமலை.
நல்ல இயற்கை எழில் நிறைந்த பாதை, யானைகள் நடமாட்டம் மிகுந்த பாதையில் என்னோடு பயணித்த சாமி ஒருவர், தான் கொண்டு வந்த நெகிழி தண்ணீர் பொத்தலில் (ப்ளாஸ்டிக் பாட்டில்) தண்ணீர் தீர்ந்த உடன் அதை அந்த காட்டில் வீசி எறிந்தார்.
நான் பொறுக்கமாட்டாமல் ஏன் சாமி காட்டுக்குள்ள ப்ளாஸ்டிக்க வீசக்கூடாதுனு தெரியாதா? மாலை போட்டுருக்கீங்களே கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கோங்க என்று கடிந்த உடன்.
ஏன் சாமி , நான் போடுற இந்த அரை லிட்டர் பாட்டில்ல தான் காடு அழிஞ்சுடுதா என்று தான் செய்தது தவறே அல்ல என்ற ரீதியில் அலட்டிக்கொள்ளாமல் நடந்தார்.
இன்னொரு சம்பவம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை வேளையில் ஒரு சாலை சந்திப்பில்.
சமிக்கை சிகப்பில் இருக்கும் போது (red signal) எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் தொடர்ச்சியாக ஒலிப்பானை இயக்கிக்கொண்டே இருந்தார்.
அவர் மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் போல.
என்னங்க பிரச்சினை இன்னும் சிக்னல் போடல ஏன் ஹாரன் அடிக்கிறீங்க என்று நான் கேட்டதும், சார் ட்ராபிக் ப்ரீயா தான இருக்கு புகுந்து போயிரலாம் நகருங்க என்றார்.
நான் முடியாது என்று சொன்னதும், எனக்கு இடப்புறம் லேசாக இடம் கிடைத்த உடன் சிகப்பு விளக்கு எரியும் போதே அத்துமீறி சென்று குறுக்கே வந்த கார்காரனை கடந்து சென்றுவிட்டார்.
போகும் போது என்னைப் பைத்தியம் என்று வேற சொல்கிறார்.
அதாவது விதிமுறைகளை மதிப்பவர்கள் இங்கே பைத்தியம்.
எல்லாம் தலை விதி.
அவரது மகனுக்கு அவர் எதை சொல்லிக் கொடுக்கிறார் என்பது புரியவில்லை. முதலில் நாம் திருந்தினால் தான் மற்றவை மாறும் என்ற எண்ணம் ஏனோ கசப்பாகத்தான் இருக்கிறது. மெதுவாக மக்கள் ஒழுக்கம் நிலைகுலைகிறது.
கூடிய விரைவில் விதிமுறைகளை மதிப்பவர்கள் பைத்தியக்கார மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படலாம்.
மோசமான நினைவுகளுடன், வருத்தங்களுடன்.