பணி நிறைவு. அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தை மிகப்பெரிய ஒன்று.
கிட்டத்தட்ட 25-35 ஆண்டுகள் வரை பணியாற்றி விட்டு அதிலிருந்து விடுபடுதல் என்ற அந்த நாள் வரும்பொழுது உடலில் இருந்து உயிர் பிரிவதை உணரும் முதல் தருணமாகத்தான் அது உணரப்படுகிறது.
பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.
உதாரணமாக ஒரு மண்டலம் அல்லது 21 நாள் என்ற கணக்கில் நாம் ஒரு வேலையைத் தொடர்ச்சியாக செய்யும் போது நமது உடல் அதற்குப் பழகி விடும் என்ற சொல் உண்டு். அப்படியிருக்க வருடக் கணக்காக ஒரு பணியை செய்தவரிடம் திடீரென, “இன்று மாலை, உங்களுக்கு மாலை மரியாதை அணிவிக்கப்பட்டு அனுப்பப்டுவீர்கள்” என்று சொல்லும்போது, அத்தோடு இந்த பந்தம் முடிந்தது என்பதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.
பணி ஓய்வு பெற்ற சிலர் வீட்டிலும், சுற்றத்திலும் சதா சண்டை போடுவதை நம்மால் பார்த்திருக்க இயலும். அதற்கு காரணம் வெற்றிலை மென்ற வாய் சும்மா இருப்பது தான். 35 வருடமாக பரபரப்பாக சுற்றித் திரிந்த உடலும் , மனமும் ஒரு இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்க ஒப்புக்கொள்வதில்லை.
இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஓய்வு பெற்ற ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம் தான். சில புத்தகங்கள் நமக்கு நற்செய்திகளைத் தரும். சில புத்தகங்கள் நமக்கு வாழ்வின் மோசமான சூழ்நிலைகள் எவ்வாறு வரும் என்பதை உணர்த்தும்.
சில புத்தகங்கள் நாம் எந்த சூழலில் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை உணர்த்தும். எப்படியோ, புத்தகங்கள் என்பது பாடம் புகட்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
பணி நிறைவு பெற்ற அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, பெரியப்பா, சித்தப்பா என்று நம் வாழ்வில் இந்த பணி நிறைவு விழா என்பதைக் கடந்து வந்திராமல் இல்லை.
பாஸ் என்ற பாஸ்கலன் படத்தில் ஓய்வு பெறப்போகும் ஆர்யாவின் மாமானாரிடம் சந்தானம் செய்யும் ரகளை நமக்குப் பணி நிறைவு விழா என்பதை நகைச்சுவையாக ஆணி அடித்தாற் போல மனதில் நிறைத்த காட்சி.
தோனியின் பணி ஓய்வு அறிவிப்பு, கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அறிவிப்பு, மேலும் பல வீரர்களின் ஓய்வு அறிவிப்பு, நமக்கும் வயசாவதைக் காட்டுகிறது.
சினிமாவும், கிரிக்கெட்டும் ஒரு புறமிருக்க, நாம் கடந்து வந்த பணிநிறைவு பெற்றவர்களின் நீங்கா நினைவுகளோடு.
நினைவுகள் வாசகர்களுக்காக.
பணி நிறைவு ஒரு புறம் இருக்க, பணியின் ஆரம்பமாக உள்ள நேர்காணல்களில் நடக்கும் கூத்துகளை பற்றி வாசிக்க, மனிதனா? இயந்திரமா? – நேர்காணல் பரிதாபங்கள்.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.