கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, அதாவது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.
பறம்பு மலை என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த மலை பிறகு திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் அழைக்கப்பட்டு இப்போது ப்ரான் மலை என்றும் அறியப்படுகிறது.
இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 42 கிமீ தொலைவில் மேற்கிலும், மதுரையிலிருந்து 63 கிமீ தொலைவில் வடக்கிலும் அமைந்துள்ளது.
சங்க காலத்தில் இது பறம்பு மலையாக இருந்தபோது இதற்கென்று பல பெருமைகள் உண்டு.
ஒப்பற்ற சுவை கொண்ட சுனைகள், பறவைகள், பலவகையான மரம் செடி கொடிகள் என செழிப்பான நாடாக போற்றப்படுகிறது பாரியின் பறம்பு.
கபிலர், ஔவையார், நக்கீரர், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் ஆகிய புலவர்கள் இந்த பறம்பு நாட்டின் புகழைப் பாடியிருக்கின்றனர்.
இந்திய சுதந்திரப்போராட்ட காலத்திலும் இந்த மலைக்கு ஒரு வரலாறு இருந்திருக்கிறது. ஊமைத்துரை மருதுபாண்டியர்களின் உதவிய நாடி வந்தபோது இங்குதான் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார். முதன்முதலாக இங்கு தான் ராக்கெட் தாக்குதல்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிறது.
அதன் நினைவாக இன்றும் மலை மீது ஒரு பீரங்கி உள்ளது.
இப்படி பல பெருமைகளை உள்ளடக்கிய இந்த மலையில் ஏற்கனவே சுற்றுலா என்ற ரீதியில் மனிதன் மது அருந்தி பாட்டில்களை உடைப்பது நெகிழிகளை பயன்படுத்தி வீசி எறிவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு மலையை பாழாக்குவதோடு அல்லாமல், அந்த மலையில் கல் குவாரி என்ற பெயரில் மலையை முழுதாக அழிக்கவும் துவங்கியாயிற்று.
ஆமாம் இந்த பறம்பு மலை சில தனியார் கல் குவாரிக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருப்பதால் சிறிது சிறிதாக பாரி மன்னனின் பறம்பு பறிபோய்க் கொண்டிருக்கிறது.
இதை எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்பு குரல் கொடுத்த ஒரு சில நபர்களையும் ஒடுக்கி விட்டனர். இப்போது அந்த மலை அங்கு இருக்கிறதோ? இல்லையோ? என்று சந்தேகப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கல்குவாரி, மனல் அள்ளுதல் என்று ஆறுகளையும், மலைகளையும் அழித்து கொண்டே வருகிறோம். பாரி ஆண்ட மலையை கூட விட்டுவைக்கவில்லை.
கரிகாலன் கல்லணை கட்டி காத்த காவிரியை நாங்கள் வீடுகள் கட்டுவதற்காக மணலை அள்ளி மழுங்கடித்துவிட்டோம் என எதிர்கால சந்ததியிடம் தலை குணிந்து நிற்கப்போகிறோமா?
சிந்தனைக்காக, நினைவுகள்.
தொடர்ந்து வாசிக்க, சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசை தொகுப்பை இங்கு சிவப்ரேம் ஆராய்கிறார்.