பச்சையப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
(பச்சையப்ப முதலியார்) பச்சையப்பனாக மாறிவிட்டார்.
கல்வி ஒரு சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தால் அந்தக்கல்விக்கு நிதியளித்த வள்ளல் பெருமானாரின் சாதி பெயரையும் மறைக்கும் அளவிற்கு ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்தத் தொன்மையான, பெருமைக்குரிய, புகழ்மிக்க கல்லூரியை, பல சினிமா படங்கள் ரவுடிகள் வளர்ப்பு மையமாகவும், கற்பழிப்புக்கு காற்றோட்டமான இடமாகவும், கஞ்சா குடிக்க ஒதுக்குப்புறமான இடமாகவும், மாறி மாறி காறி காறி துப்பித் தள்ளிவிட்டார்கள்.
அதன் உண்மையான தொன்மையையும், பெருமையையும் பார்த்தோமானால் இந்தக்கல்லூரி நிறுவப்பட்டது சனவரி 1, 1842. இன்னும் 18 வருடங்களில் 200 ஆண்டுகள் கடக்கப்போகும் கல்லூரி. கல்வி என்றால் என்னவென்று கேட்கப்பட்ட 1942 ல் நூற்றாண்டைக்கண்ட கல்லூரி.

சிறுவயதில் தந்தையை இழந்து தாயாருடன் ஊர்விட்டு சென்னை வந்து, நாராயணன் அவர்களிடம் அடைக்கலம் புகுந்து கஷ்டப்பட்டு படித்த பச்சையப்பருக்கு படிப்பின் முக்கியத்துவம் தெரிந்த காரணத்தால், பிற்காலத்தில் தான் சம்பாதித்த பணத்தில் கோவில் தர்மம் போக மீதியை கல்விக்கூடாரம் அமைக்கச் சொல்லி உயில் எழுதிவிட்டார்.
அந்த உயிலின்படி சைவமடமாக நிறுவப்பட்ட அந்த இடம் 1889 ல் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது.
கணித மேதை ராமானுஜர், அறிஞர் அண்ணா, நாடக சக்கரவர்த்தி பம்மல் சம்பந்த முதலியார், டாக்டர் மு.வ, போன்ற பழம்பெரும் அறிஞர்களும், நாவலர் நெடுஞ்செழியன், பேராசியர்.க.அன்பழகன்,
திரு.ஈ.வி.கே சம்பத் போன்ற தற்காலம் வரை தெரிந்த அரசியல்வாதிகளும், தங்கள் கனவுகளை நோக்கி பயணித்த இடம் இந்த பழம்பெரும் கல்லூரி.
அறிவில் மட்டுமல்லாது விளையாட்டிலும் இந்தக்கல்லூரியின் பங்களிப்பு உண்டு. கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ராபின் சிங், பரத் ரெட்டி ஆகியோர் இங்கே பயின்றவர்கள் தான்.
இசையமைப்பாளர் டி.இமான், கவிஞர் ந.முத்துக்குமார், பாடலாசிரியர் கபிலன் ஆகியோரும் இங்கே பயின்றவர்களே!
பச்சையப்பாஸ் என்றாலே பஸ் பிரச்சினை, மாணவர்கள் அடிதடி, வெட்டுக்குத்து, கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம், என்ற சினிமா காட்சிகளுக்கு ஈடான செய்திகளும் பச்சையப்பாஸ் கல்லூரி பற்றி பெரும்பாலான மக்களிடையே ஒரு தவறான சிந்தனையை விதைத்திருப்பது மாற்றுக்கருத்தல்ல.
ஆனால் இத்தனை பெரிய வரலாறும், இத்தனை பெருமைகளும் உள்ளடங்கிய ஒரு கல்வி பொக்கிஷம் நாம் ஒவ்வொருவராலும் போற்றப்பட வேண்டியது.
விவரமில்லாமல் திரியும் தற்கால சந்ததிகளுக்கு இந்தக்கல்லூரியின் பெருமையைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்தவும் வேண்டும்.
அன்புடன், நினைவுகள்