1984 ல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு த்ரில்லர் படமா என்று வியக்க வைக்கும் ஒரு தமிழ் திரைப்பட பொக்கிஷம்.
மணிவண்ணன் இயக்கத்தில், விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் சத்யராஜ் அவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம்.
கிட்டதட்ட ஒரு திகில் படத்தைப்பார்த்த உணர்வும் இந்தப்படம் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும்.
இத்தாலியில் 1977ல் வெளிவந்த sette note in Nero (Seven Notes in black) என்ற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் நூறாவது நாள் 1984 ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
பிறகு மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) மற்றும் இந்தியில் 100 days ( 1991) என ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது.
பின்னாட்களில் நடக்கப்போகும் சம்பவங்கள் கனவில் வருவதாக சொல்லும் ஒரு இளம்பெண்ணை யாரும் நம்பத் தயாராக இல்லை.
ஆனால் அந்தப்பெண் அவளது அக்கா கொலையுறுவதைப்போல கனவு கண்ட பிறகு சிறிது நாளில் அவளது அக்கா காணாமல் போகிறாள். அந்தப்பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் மட்டும் அவளை நம்புகிறார்.
இன்னொரு முறை வேறு ஒரு கொலை நிகழப்போவது அந்தப் பெண்ணின் கனவில் வர, அந்த கனவில் வந்த சில காணொளிகளை வைத்துக்கொண்டு தேடத் துவங்குகின்றனர். உதாரணத்திற்கு குதிரைப்படம் அட்டைப்படமாக போடப்பட்ட வார இதழ், சர்ச் கடிகாரம் என்று சில விஷயங்களை துருப்பாக வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றத் துடிக்கின்றனர்.
இதற்கிடையில் அந்தப் பெண் ஒரு பணக்கார அன்பான இளைஞனை திருமணம் செய்கிறாள்.
இந்த மர்ம கதைப்பின்னலில் அவளது திருமண வாழ்க்கை, காதல் , கனவு, தேடல் என்று விறுவிறுப்பான திரைக்கதையில் அமைந்த திரைப்படம். திகில் படத்திற்கு இணையாக நம்மை பயமுறுத்தும் காட்சிகள் .
என்னதான் தழுவலாக இருந்தாலும், அதில் காதல் , நகைச்சுவை, குடும்ப உறவு, என்று நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து இங்கு அந்தப்படம் பெருவெற்றி அடைய இயக்குனர் ஒரு மிகப்பெரிய காரணம்.
க்ரைம் த்ரில்லரின் டாப் பட்டியலில் என்றுமே இடம்பெறும் இந்தப்படம்.
நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய தமிழ் பொக்கிஷ திரைப்படம்.
மேலும் ஒரு பொக்கிஷ சினிமாவை பற்றி வாசிக்க அலிபாபாவும் நாற்பது திருடர்களும்