அறிவோம்- ஹரி ஓம்.
இந்து மதத்தின் இரு முக்கிய பிரிவுகளான சைவமும், வைணவமும், அதாவது பெருமாள் சன்னதியும், சிவன் சன்னதியும் ஒருசேர இருக்கும் கோவில்கள் அரிது தான்.
அப்படி ஒரு தலம் தான் திருக்குறுங்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான அழகிய நம்பிராயர் தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது.
திருக்குறுங்குடி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் என்ற ஊருக்கு அருகே, மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். இதே ஊரில் இன்னொரு கோவிலில் திருப்பாற்கடல் நம்பியும் குடிகொண்டுள்ளார். அதாவது ஒரு ஊரில் 5 பெருமாள் வாசம் செய்கிறார் என்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு.
இந்த கிராமத்தில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோவிலை பற்றியும், இந்த கிராமத்திலிருந்து சில கி.மீ தொலைவிலுள்ள மகேந்திரகிரி மலையின் மீது இருக்கும் மலை மேல் நின்ற நம்பி கோவிலைப்பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
அழகிய நம்பிராயர் கோவிலில், பெருமாள் நின்ற கோலம், அமர்ந்த கோலம் மற்றும் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரை முறையே நின்ற நம்பி, வீற்றிருந்த நம்பி மற்றும் பள்ளிகொண்ட நம்பி என்று அழைக்கிறார்கள்.
மேலும் ஒரு சிவன் சன்னதியும் இந்தக் கோவிலின் உள்ளே இருப்பது சிறப்பு. நடுவில் அது இடிக்கப்பட்டு சர்ச்சைகள் ஏற்பட்டாலும், நீதிமன்ற விதிமுறைகளின்படி மீண்டும் அது அங்கேயே நிறுவப்பட்டது.
இந்தக்கோவிலில் உள்ள சுற்றுப்பிரகாரத்தில் ஒரு மண்டபத்தில் உள்ள யாழி சிலை ஒன்று மிகச்சிறப்பு. அதன் வாயினுள்ளே ஒரு உருளைக்கல் இருக்கும், அதை நாம் கையை விட்டு உருட்டலாம், ஆனால் அந்தக்கல்லை வெளியே எடுக்க முடியாது. இதை எப்படி ஒரு சிற்பி செதுக்கியிருப்பார் என்ற ரீதியில் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
மலை மீது நிற்கும் நம்பியை, தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணிக்குள் தரிசனம் செய்யலாம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே மற்ற பெருமாள் கோவில்களில் கருட சேவை நடைபெறும். ஆனால் இங்கே எல்லா சனிக்கிழமைகளிலும் நடைபெறும் என்பது சிறப்பு.
திருக்குறுங்குடி, அழகிய நம்பி கோவிலைப்பற்றி பேச ஆரம்பித்தால் மனது லேசாகி பேச்சு நிற்காமல் போகும். நம்பியின் தரிசனத்தோடு, நாம் மலை ஏறிய பிறகு காணும் எழில் கொஞ்சும் இயற்கையும், கண்ணாடி போல சுத்தமான குளிரான நீரோட்டமிக்க நம்பியாற்றின் சப்தமும், ஒளியும் நம் மனதை லேசாக்கிவிடும்.
இந்த கோவிலை சார்ந்து ஒரு புராண கதையும் உண்டு.
ஒருநாள் அடர்ந்த வனத்தினூடே அழகிய நம்பியைக்காண பாணன் ஒருவன் சென்று கொண்டிருந்த போது ஒரு அரக்கன் வழிமறித்து அவனைத் திங்க எத்தனித்தான். அந்தப்பாணன், ஐயா நான் இன்று ஏகாதசி விரதமிருக்கிறேன், ஒரு முறை பெருமாளை பார்த்து விட்டு உங்களிடமே வருகிறேன், அப்புறம் என்னை சாப்பிடுங்கள் என்று கெஞ்சி, பெருமாள் மீது ஆணையிட்டு கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
பாணன் யாழிசைத்து பெருமாளைப் பாடி வணங்கும் போது அந்த இசையில் அரக்கனும் மயங்குகிறான். பிறகு அரக்கனைத்தேடிப் போன பாணனை ஒரு முதியவர் தொடர்ந்து வந்து மறிக்கிறார். அரக்கனுக்கெல்லாம் நேர்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்.
ஆனால் அந்தப்பாணன், ஐயா, நான் பெருமாள் மீது ஆணையிட்டிருக்கிறேன், அதனால் திரும்பி கண்டிப்பாக போக வேண்டும் என்று அரக்கனிடம் போனார்.
அரக்கனோ இப்போது குணம் மாறியவனாக, பாணனை சாப்பிட மனமில்லாதவனாக திருந்திவிட்டான். பாணனின் இசையில் அரக்க குணம் காணாமல் போனது. ஆச்சரியமடைந்த பாணனுக்கு மேலும் ஒரு ஆச்சரியம், தன்னைத் தொடர்ந்து காப்பாற்ற வந்த பெரியவர் தான் பெருமாள் என்பதை கண்ககூடாகப் பார்த்தான். அரக்கனும் உருவம் மாறி அந்தணன் ஆனான்.
இத்தகைய சிறப்புமிக்க ஆன்மீக தலத்தின் அருகே தான் களக்காடு உள்ளது. புலிகள் சரணாலயம் இங்கு உண்டு.
இப்படி இயற்கை எழிலும் ஆன்மீக சிறப்புமிக்க ஊருக்கு அருகில் சுற்றுலா தளங்களும் உண்டு். இனிய நினைவுகளைத் தரும் ஒரு நல்ல பயணமும், மனநிம்மதி தரும் ஆன்மீகமும் ஒரு சேர கிடைக்கும் இடம் திருக்குறுங்குடி.
TVS ஐயங்காரின் பூர்விகம் இந்த ஊர்தான். இங்கு TVS ன் பேரில் ஒரு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இத்தகைய சிறப்புகளுடைய திருக்குறுங்குடியை ஒரு முறை தரிசித்து விடலாமே.
நமக்கும் கூட நீங்காத நல்ல நினைவுகள் கிடைக்கும்.
ஆடி மாதத்தின் சிறப்பை பற்றி வாசிக்க
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.