Categories
கருத்து தமிழ் நினைவுகள்

கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள்

ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம்.

இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள்.

பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும்.

வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் அந்தக் கடைக்காரரின் உறவுக்காரனாகவே இருப்பார். எனது ஊரில் அவரது மகன்.

கறி வாங்க வரும் மக்களோ வெளியே நின்று கொண்டு தான் கறி வாங்க வேண்டும். நகரங்களில் இருக்கும் வண்ணம் ஹை ப்ரோட்டின்ஸ், ரிச் ப்ரோட்டின்ஸ் என்ற பலகை எல்லாம் கிடையாது. பெரும்பாலான கசாப்புக்கடைகள் கடை முதலாளியின் பெயரைக்கொண்டே அறியப்படும்.

கறி வாங்குவதற்காக மட்டுமல்லாமல் சும்மா, அந்த வழியே போகும் போது கடைக்காரரிடம் சிறிது நேரம் நின்று பேசும் பல ஜனமும் உண்டு.

கடைக்காரர், நுகர்வோர் என்ற உறவைத்தாண்டி, ஒரு நட்புணர்வுடனும் கசாப்புக்கடைக்கார அண்ணாச்சி, ஊரில் உள்ள மக்களிடம் பழகுவார்.

அந்த ஊரில் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்களிலும் இருக்கும் பல தரப்பட்ட மக்களையும் கசாப்பு அண்ணாச்சி முழுமையாக அறிந்து வைத்திருப்பார்.

இன்று இந்த வீட்டிற்கு கறி போகிறது என்றால் என்ன காரணம் என்பதை நன்கு அறிந்து கறியை வெட்டுவார் அண்ணாச்சி. இதுபோக கோவில் தி்ருவிழாக்களுக்கு, வீட்டு விஷேசங்களுக்கு என்று தனியாக கறி வெட்டும் போதும் அவர் வேற்று உணர்வுடன் அதை செய்வதில்லை.

ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருப்பார்.

ஒருபோதும் கறியை எடை போடும் தராசு அவருக்காக சாயாது. அது நம்பக்கமே அதிகம் சாய்ந்திருக்கும்.

“ஏ அத்தெ உம்புள்ள இப்பதான் பேரன பெத்துருக்கா, பச்ச ஒடம்புக்காரி ஒடம்புல ரத்தம் ஏறனும்லா? நாளைக்கு சொவரட்டி (மண்ணீரல்) எடுத்து வைக்கேன் வந்து வாங்கிக்க.”

“அடப்போயா, சொவரட்டி நீ தங்கம் வெலை சொல்லுவியே.
எனக்கு வேண்டாம்ப்பா, கையில காசு இல்ல.”

“அட ஏம்த்தே உன் மருமகன் ரூவா அனுப்பலயா?”

“இல்லப்பே, நம்ம பாடு நம்மதான் பாக்க வேண்டிருக்கு, நாம என்ன சட்டையப்புடிச்சா கேக்க முடியும்.”

“சரி சலிக்காத, காலைல வந்து வாங்கிட்டுப்போ, ரூவா வந்த பொறவு பொருமையா குடு. நீ என்ன இந்த வயசுல ஊர காலி பண்ணிட்டா ஓடப்போற?”

என்ற ரீதியில் தனது சொந்தத்தின் மீது அன்பு செலுத்துவது போல, ஊரில் உள்ள மக்களிடம் உரிமையாக அன்போடு பழகும் கசாப்புக் கடைக்காரர்கள் வெட்டிய கறி பழசா, புதுசா, மாடா, கோழியா, நாயா என்ற சந்தேகமே படத்தேவையில்லாத சுத்தமானது.

தனது நுகர்வோரை ஏய்த்தல் என்ற எண்ணமே அறவே இல்லாத மனிதர்கள் அவர்கள்.

தீபாவளி, பொங்கல் பண்டிகை கறி நாட்களில் விடியற்காலமே கடைக்குச் சென்று வரிசையில் நின்று ஆடு வெட்டப்படுவது, அதன் தோல் உறிக்கப்படுவது, ரத்தம் ஒரு கிண்ணத்தில் பிடிக்கப்படுவதை, ஆய்வகத்தில் தவளை வெட்டும் வகுப்பு நடப்பது போல உற்று கவனித்த அனுபவங்கள் நிறைய.

இன்று எத்தனை பெரிய உணவகத்தில் சென்று உணவருந்தினாலும், தூக்குவாளியிலோ, அல்லது வாழை இலைகளில் மடித்துத் தரப்பட்ட கறியை வீட்டிற்குக் கொண்டு வந்து பின்னர் அதை சமைத்து உண்ட போது கிடைத்த ஆனந்தம் கிடைப்பதில்லை தான்.

பணம் வாங்கிவிட்டு பில் போட்டு அந்த பில்லுடன் வரிசையில் நின்று கறி வாங்கும் நகரங்களுக்கு வந்த பிறகு தான் ஊரின் கசாப்பு அண்ணாச்சி எவ்வளவு அருமையானவர் எனப்புரிகிறது.

நீ என்னவே ஊர விட்டா ஓடப்போற, பணம் பொறவு பொறுமயா குடு என்கிற அந்த அன்பெல்லாம் ஹை ப்ரோட்டின் கடைகளில் கிடைத்துவிடுமா என்ன?

ஏன் எதற்கென்றே தெரியாமல் மண்ணீரலை ஈரலோடு கலந்து வெட்டும் ஹிந்திக்கார கசாப்பு பாய்ஸ் இருக்கும் இந்த நகர கசாப்புகளை பார்க்கும் போது தான், 4 ஆவது தெரு புள்ளக்காரி வருவா, மண்ணீரல தனியா எடுத்து வையிலே என்று மகனை மாரி அண்ணாச்சி அதட்டும் அந்த தோரணை நினைவுக்கு வருகிறது.

பெரும்பாலான கசாப்பு அண்ணாச்சி மாரி ஆகக்கூட இருக்கலாம்.
எங்கள் ஊரில் மாரி தான்.

முழுமுண்டமாக தொங்கும் மிகப்பெரிய கறிப்பிண்டத்தை பார்க்கும் போது தான் இளசாக தொங்கும் ஆட்டுக்கறியின் அருமை புரிகிறது. அதிலும் நெஞ்சுக்கறியா அல்லது சப்பக்கறியா என்று கேட்டு வெட்டும் பக்குவம் மனதிற்கு இதமான நினைவுகளைத் தருகிறது.

அண்ணாச்சி எங்க அத்தை கறி வாங்கிட்டு வரச்சொன்னா என்று சொல்லும் சிறுவனிடம், உங்க அத்தை கறி எல்லாம் வாங்க சொல்லிருக்க மாட்டா, கால் வாங்கியாற சொல்லிருப்பா, என்று யாருக்கு என்ன சரியாக வேண்டும் என்று புரிந்து வைத்திருந்த கசாப்பு அண்ணாச்சிகளை விட்டு தூரம் வந்து இங்கே ஆன்லைனில் தவறுதலாக ஆர்டர் செய்த பிறகு, அந்த ஆர்டர் பண்ணது பண்ணது தான் சார் என்ற அதட்டல்களை கேட்கும் போது சிறுவயதின் இனிய நினைவுகள் வந்து போகிறது.

சிறு வயதின் பல வகையான நினைவுகளில் என்றும் மறவாதவைகளில் இதுவும் ஒன்று.

கசாப்புக் கடைகள்.

இன்றும் அண்ணாச்சிகள் மாறவில்லை. நாம்தான் பாதை தேடி, பணம் தேடி பயணம் செய்து தூரம் வந்து விட்டோம்.

எப்போது ஊருக்குப் போனாலும் என்னை சிறுவனாகவே பார்க்கும் அண்ணாச்சியின் நினைவுகளோடு.

தொடர்ந்து வாசிக்க, பணி நிறைவு பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்பவர்களை பற்றி இங்கு எழுதியிருக்கிறோம்.