தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
குறள் 305, திருவள்ளுவர்
தன்னையே கொல்லுஞ் சினம்
இந்த திருக்குறள் அறத்துப்பாலில், துறவறவியலில் வெகுளாமை என்ற தலைப்பில் வருகிறது.
கோபத்தை கட்டுப்படுத்தாத மனிதன் அந்த கோபத்தால் தானே அழிகிறான் என்ற பொருளைக் கொண்டது.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க –
தன்னை ஒருவன் காக்க விரும்பினால், அவன் சினம் ( கோபத்தை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காவாக்கால்– அப்படி கட்டுப்படுத்த இயலாத காலத்தில்
தன்னையே கொல்லுஞ் சினம்– அந்த சினம் அவனையே கொன்று விடும்.
இதையே நமக்குத் தெரிந்த ஒரு சிறுகதையும் உணர்த்துகிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தகப்பனும், அவரது 10 வயது மகனும் தங்கள் குடும்பத்திற்கு புதிய வரவாக வந்த மகிழுந்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விவரமறியா சிறுவன், அங்கிருந்த ஆணி போன்ற ஒரு ஊசியான பொருளால் மகிழுந்தின் கதவில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட தகப்பன், புத்தம் புது மகிழுந்தல் இப்படி செய்துவிட்டானே என்று கடும் சினம் கொண்டு, தன் கையில் கிடைத்த இரும்புத் தடியால் அந்த சிறுவனின் கையில் அடித்து விடுகிறார்.
சிறுவன் சுருண்டு விழுந்து துடிக்கிறான்.கை உடைந்தே விட்டது.
அது இரும்புத்தடி என்பதை தற்போது தான் அந்த தகப்பன் உணருகிறான். கோபத்தில் தெரியாமல் இரும்புத்தடி வைத்து மகனின் கையை உடைத்து விட்டோமே என்று மனம் கலங்குகிறான்.
மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கிளம்பும் போது தான் மகிழுந்தின் கதவைப் பார்க்கிறான்.
அப்பா- I Love You என்று எழுதப்பட்டிருந்தது.
அதைக்கண்டவுடன் அவரது கண்கள் குளமாகின.
கோபத்தில் தான் மிருகமாய் மாறியதை உணர்ந்தார்.