Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ்

குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

குறள் 156, திருவள்ளுவர்

அதாவது ஒருவர் செய்த தீங்குக்காக அவரை தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் தான் இன்பம். ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு , இந்த உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும்.

இந்த திருக்குறளை நம்மாளு ஒருத்தரு கொஞ்சம் வித்தியாசமா புரிஞ்சிக்கிட்டாரு. எப்படின்னு விளக்கமா இந்தக் கதை மூலமா தெரிஞ்சிக்கோங்க.

நம்மாளு விமான நிலையத்துல வேலை செய்யிற ஆளு.

இந்தக்காலம் மாதிரி இல்ல, அந்தக்காலத்துல, அதாவது 80-90 கள்ல ரொம்ப குறைவான விமானங்கள் தான், மிகக் கணிசமான அளவில் தான் ஆட்களும் பயணிப்பார்கள்.

அதாவது மிகப் பணக்காரர்களாக இருப்பவர்கள் மட்டுமே விமானத்தில் பயணிப்பார்கள்.

அப்படி ஒரு திமிர் பிடித்த பணக்கார ஆசாமியிடம் நம்ம ஆளு மாட்டிக்கிட்டாரு.

தொட்டதுக்கெல்லாம் குறை, திமிர் பேச்சு, தேவையில்லாமல் திட்டுவது என்று அந்த விமான நிலைய ஊழியரை ஒருபாடு படுத்தி விட்டார்.

ஆனால் அதை எல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த ஊழியர் கடமையே கண்ணென அந்த மனிதரை நிம்மதியாக அவரது விமானத்தில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தாராம்.

அப்போது அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் கேட்டார்களாம், ஏம்ப்பா, பொறுத்துப் போக வேண்டியதான் ஆனா, செய்யாத தப்புக்கு அந்த ஆளு திட்டுனப்ப ஓங்கி ஒண்ணு வச்சிருக்க வேண்டிதானே? இப்படி பொறுத்து உனக்கு என்ன கிடைக்கப் போகுதுன்னு மற்றவர்கள் கேட்டதற்கு.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

என்றாராம் அந்த கோக்குமாக்குப் பேர்வழி.

என்னப்பா நாங்க ஏதோ கேட்டா நீ் ஏதோ பாட்டுப்பாடுற என்று கேட்கவும்

இல்ல சாமிகளா, நான் அந்த ஆள அடிச்சிருந்தா, அந்த நிமிஷத்தோட அவனும் மறந்துடுவான், எனக்கும் கோபம் போயிடும். அதனால அவர அமெரிக்க ப்ளைட்லயும் அவர் சாமான்கள இங்கிலாந்து ப்ளைட்லயும் அனுப்பிட்டேன்.

இனி அவர் வாழ்நாள் முழுக்க என்ன மறக்க மாட்டாரு. எனக்கும் இது ஒரு வாரத்துக்கு மனசுக்கு இதமா இருக்கும்னு சொன்னானாம்.

நல்ல வேளை இப்ப திருவள்ளுவர் இல்லை

அகில இந்திய வானொலியின் இன்று ஒரு தகவலில் தென்கச்சி கோ சாமிநாதன் அவர்கள் கூறும் நகைச்சுவை கதைகளில் சிறிது உல்டா செய்தது.

90 களின் நினைவுகளில் இருந்து, நினைவுகள் வாசகர்களுக்காக..

இன்னொரு குறளுடன் குட்டி கதை ஒன்று வாசிக்க

நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.