Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கிளி (கிழிந்த) ஜோதிடம் – அனுபவங்கள்

ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது.

பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது.

அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் ஒத்துப்போகாதது தான்.

ஆக ஜாதகக் குறிப்புகளும் பிறந்த நேரமும் மட்டுமே ஒருவனின் தலையெழுத்தை, வாழ்க்கையை தீர்மானிக்கும் எனில், விடாமுயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, அரவணைப்பு என்ற வார்த்தைகளே இருந்திருக்காதே இங்கு.

இது பொதுவாக ஜாதகமே பொய் என்று பரைசாற்றுவதற்காக எழுதப்படுவது அல்ல. உழைப்பு உயர்வு தரும் என்பதை உணர்த்தி, ஜாதகத்தை நம்பி முழுதாக வாழ்க்கையை இழந்து விட வேண்டாம் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே.

முன்பெல்லாம் சில பரிகாரங்கள் சொல்வார்கள், ஏதாவது கோவிலுக்கு செல்ல வேண்டும் விளக்கு ஏற்ற வேண்டும் என்றோ அல்லது பத்து பரதேசிகளுக்கு உணவளிக்க வேண்டுமென்றோ.

அதையும் தாண்டி அலகு குத்து, காவடி எடு என்று சொல்வது கூட ஏற்றுக்கொண்டு மக்கள் செய்தார்கள்.

ஆனால் சமீப காலங்களில் நான் சந்தித்த சில விஷயங்கள் இந்த கைரேகை, கிளிஜோசியர்களின் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கி விட்டது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குடும்பத்தோடு உலாத்திய போது சும்மா ஜாலியாக ஜோசியம் கேட்கலாம், பாவம் அந்தம்மாவும் சுத்தி சுத்தி வருதே என்று கைரேகை பார்த்தோம்.

ஒரு ஆளுக்கு 50 ரூபாய் .

சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு, உனக்கு நிறைய திருஷ்டி இருக்கு, நான் வள்ளி குறத்தி வம்சத்துல பிறந்தவ, சுத்தி போடுறேன், திருஷ்டி எல்லாம் கழிஞ்சுடும்னு சொல்லுச்சு.

சரிம்மா அதுக்கு ஏதாவது பணம் தரனுமா என்று கேட்டதும், ரொம்ப இல்லப்பா 1000 ரூ னு சொல்லுச்சு. திருஷ்டி கழிக்காட்டி உன் உயிருக்கே கூட ஆபத்துனு சொல்லுச்சு.

உன்கிட்ட ஆயிரம் ரூபா கொடுத்து தான் நான் உயிர் வாழனும்னா அப்படி ஒரு அவசியமும் இல்லனு சொல்லிட்டேன். அப்புறமும் ரொம்ப நேரமா எங்கள விடல, 500 ரூ, 300 ரூ , 200 ரூ வரைக்கும் பேரம் பேசி கடுப்பேத்துச்சு. ஒரு வழியா அப்புறம் கிளம்பிடுச்சு.

அடுத்தது திருச்செந்தூர்ல, எங்கயோ போன ஓணான வேட்டில விட்ட மாதிரி கிளி ஜோசியக்காரன்கிட்ட என் மனைவி மாட்டிவிட்டுட்டா.
அந்த கிளி சீட்ட எடுத்ததும் ஏதோ அருவருப்பான படம் வந்துச்சு.

என்னானு கேட்டா நான் தூங்கும் போது பல்லி விழுந்துருச்சாம் பரிகாரம் பண்ணாட்டி உயிருக்கு ஆபத்தாம். அவன் அவன் பாம்ப கட்டிப்பிடிச்சு தூங்கிக்கிட்டு இருக்கானுங்க. இன்னமும் பல்லி விழுறதுக்கு பரிகாரமாம்.

என்ன பரிகாரம்னா, போட்டுருக்குற தங்கம் எதையாவது கழட்டிக் கொடுத்தா அவரு நம்ம தலைய சுத்தி அப்புறமா கொண்டு போயி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில கடல்ல போடுவாறாம்.

அடேங்கப்பா! சரியான பரிகாரமா இருக்கே. நான் அவர்கிட்ட நானே கழட்டி நானே போட்டுக்கிறேனு சொன்னேன். அவங்க தான் திருஷ்டி சுத்த ட்ரெயினிங் எடுத்துருக்காங்களாம். நமக்கு தெரியாதாம்.

ஏதோ மந்திரம் சொல்லி சுத்தனுமாம். இல்ல ஐயா வேண்டாம்.

நான் ஏதோ இந்த சாமிய கும்பிட்டு உயிர் வாழ்ந்துக்கிறேன்.
அதுக்கு மேல அவரு பாத்து என்னிய கூப்புட்டுக்கிறதுனா கூப்புட்டுகிறட்டும். மாயம் மந்திரம்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.

அதுக்கப்புறமும் விடல, நீங்க ஆபரணங்கள கழட்ட வேணாம், என்கிட்ட குண்டுமணி தங்கம் இருக்கு, அத வச்சி மந்திரம் சொல்லி சுத்துறேன். 600 ரூ கொடுங்கனு சொன்னாரு.

நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்துட்டேன்.

ஒரு மன ஆறுதலுக்காக வேண்டுமானால் இந்த ஜாதகம், ஜோசியத்தைக் கேட்டுக் கொள்ளலாமே ஒழிய இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமான காரியங்களில் ஈடுபடுவதோ, பணவிரயம் செய்வதோ நமக்கு எந்த வித பலனும் தராது.

கடவுளை விழுந்து விழுந்து கும்பிடும் மனிதன் தான், கடவுளையும் நம்பாமல் இந்த மாதிரி கடவுளின் பெயரை சொல்லி, கிரகங்களின் பெயரை சொல்லி ஏமாற்றும் மனிதர்களை நம்புகிறார்கள்.

அப்படி நீங்கள் ஜோசியக்காரனின் பரிகாரத்தில் வாழுகிறீர்கள் என்றால் கடவுளின் மீதான உங்கள் நம்பிக்கை பொய். கடவுளை கொச்சை படுத்துவதற்கு சமம் என்று ஆகாதா?

தயவு செய்து கவனமாக இருக்கவும்.

நல்ல நோக்கத்துடன் நினைவுகள்.

தொடர்ந்து வாசிக்க, கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள்.