Categories
குட்டி கதை தமிழ் வரலாறு

பண்டைய தமிழகத்தின் நாகரீகம் – கற்றோர் சிறப்பு

பண்டைய தமிழகத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்க காலங்களிலும் தமிழை வளர்த்த புலவர்கள் பெரும் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம்.

அதில் நமக்கு வந்து சேர்ந்த சில கதைகளைத்தான் நாம் சற்று நினைவில் கொள்ளப் போகிறோம்.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவபெருமானையே குற்றம் சாட்டிய நக்கீரர் பெருமானை அறயாதோரும் இலர். தன் உயிரை விட தமிழ் வளர்க்கும் மூதாட்டியின் உயிரே முக்கியம் என ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்த அதியமான் கதையையும் அறிவோம்.

அதியமானுடன் தோழமை உறவு கொண்டிருந்த ஔவைக்கு அவர் மரியாதை செய்ததோ, நெல்லிக்கனியை பரிசாக அளித்ததோ அதிசயமானதாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அதியமானை வீழ்த்தி அவனது நாட்டை கைப்பற்ற நினைத்த தொண்டைமானும் ஔவைக்கு மரியாதை அளித்து போருக்கு வராமல் இருந்த கதையும் உண்டு.

அதியமான் ஒரு நாள் சோகமாக இருந்ததை கவனித்த ஔவையார் அவரிடம் சோகத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். பிறகு, “நீ கவலைப்படாதே, போர் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கிளம்பினார் ஔவை.

தொண்டைமானை சந்திக்கச் சென்றார் ஔவை. அவரை வரவேற்று விருந்தளித்த தொண்டைமான், ஔவை அதியமானுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதை அறிந்து அவனது ஆயுதபலத்தை ஔவையிடம் காண்பித்தால், ஔவை சென்று அதியமானிடம் சொல்லுவார், அதியமான் அதைக்கேட்டு பயப்படுவான் என்று நினைத்து, தனது அரண்மனையை சுற்றிக் காண்பித்து, அப்படியே ஆயுதங்களையும் காட்டினார்.

எல்லாம் பளபளவென கூர்மையாக சண்டைக்கு ஆயத்தமாக இருந்தன. அதை பார்த்து முடிந்ததும் ஔவை தொண்டைமானிடம், “உங்கள் ஆயுதங்களோ பட்டை தீட்டி கூர்மையாக உள்ளன. ஆனால் அதியமானின் ஆயுதங்களோ இரத்தக் கறை படிந்து நெளிந்து உடைந்து கொல்லனின் பற்றையில் கிடக்கின்றன” என்றார்.

இதன் ஆழமான அர்த்தத்தை தொண்டைமான் உணர்ந்தார். நமது ஆயுதங்களோ சண்டையே பார்க்காதவை, ஆனால் அதியமானின் ஆயுதங்களோ சண்டையிட்டே சலித்தவை. இவர் நம்மைப் புகழ்வது போல, அதியமானின் வீரத்தை நம்மிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும், அதியமானுடன் தான் போர் புரிவதைத் தடுக்கவே இவர் தூதாக வந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்து, போர் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார் தொண்டைமான்.

இப்படி ஒரு புலவரின் பேச்சுக்கு எதிரி நாட்டு மன்னனிடமும் மரியாதை இருந்திருக்கிறது.

இன்னொரு கதையும் உண்டு.

அரசர் காலங்களில் முரசு வைக்கப்படும் கட்டில் முரசு கட்டில் எனப்படும். அதில் மனிதர்கள் யாரும் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால் வீரர்கள் அவரது தலையை வெட்டி விடலாம் ஏனென்றால் முரசு கட்டிலை அவமதிப்பது அரசையே அவமதிப்பதற்குச் சமம்.

சேரமான் இரும்பொறையை சந்திக்க வந்த மோசீகரனார், முரசு கட்டிலில் இருந்த முரசை வீரர்கள் சுத்தம் செய்வதற்காக எடுத்துச்சென்றிருந்த காரணத்தால் அதை சாதாரண கட்டில் என எண்ணி அதில் அமர்ந்தார். களைப்பில் தூங்கியும் விட்டார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தால் சில வீரர்கள் முரசோடு இவரது அருகே நின்றார்கள்.

தான் களைப்பில் முரசு கட்டிலில் அல்லவா தூங்கிவிட்டோம், நம் தலை உருளப் போகிறது என்று பயந்தார். பின்னாலிருந்து சில்லென்ற காற்று வீசியது. திரும்பிப் பார்த்தால் சேரமான் இரும்பொறை கவரியால் விசிறிக் கொண்டிருந்தார்.

ஒரு புலவருக்கு அரசர்கள் எப்படியெல்லாம் மதிப்பு அளித்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கதைகளின் மூலமாக உணரலாம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சும்மாவா சொன்னார்கள்?

ஔவையார் மற்றும் இராஜ இராஜ சோழன் புத்தகங்களிலிருந்து நினைவுகள் வாசகர்களுக்காக.

காமராஜர் கல்விக்கு ஆற்றிய பணியை தெரிந்து கொள்ள கல்வி தந்தை காமராஜரின் நினைவுகள்