க்ளோவர் இலை வடிவ மேம்பாலம்.
இந்த வகையான மேம்பாலம் போக்குவரத்து மிக அதிகமான இடங்களில், வாகனங்கள் ஒரு திசையிலிருந்து இரண்டு அல்லது மூன்று திசைகளுக்கு பிரிந்து தடையில்லாமல் செல்வதற்காக ஏற்படுத்தப்படும் பாலம் .
இந்தப்பாலங்கள் கீழ்க்கண்ட இந்த இலையின் வடிவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக, தேவைகளுக்கு ஏற்ப, இணைக்கும் திசைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் வெர்ஜினியா, கலிபோர்னியா, மிச்சிகன், போன்ற மாநிலங்களிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரிலும் இந்த வகையான பாலம் உள்ளது.
ஆமாம் சென்னையின் மிகப்பிரபலமான கத்திப்பாரா மேம்பாலம் ஒரு பொறியியல் பிரம்மாண்டம் என்பதைத் தாண்டி உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே கட்டப்பட்ட க்ளோவர் இலை வடிவ பாலங்களில் இதுவும் ஒன்று. அதுவும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய க்ளோவர் இலை வடிவ பாலமும் ஆகும்.
பொதுவாக மேம்பாலங்களில் செல்லும் வாகனங்கள் நேர்கோட்டில் தான் பயணிக்கும். ஒரு ரயில் வழித்தடத்தையோ, அதிகமான போக்குவரத்து நெரிசலையோ கடக்க உதவும். க்ளோவர் இலை வடிவ பாலங்களில் நாம் 270 டிகிரி க்கு திரும்பி, விரும்பிய திசையை அடையலாம்.
முதன்முதலில் இந்த யோசனை அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் ஹேல் என்ற கட்டுமானப் பொறியாளரால் 1916 ல் வெளியிடப்பட்டது. பிறகு பலவிதமான கூடுதல் யோசனைகளுடன், பல பகுதிகளில் கட்டமைக்கப்பட்டது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் இருக்கும் இந்தப் பாலம் GST சாலை, அண்ணா சாலை, உள் வளைவு சாலை ஆகியவற்றை இணைப்பது.
அதாவது ஆலந்தூரிலிருந்து வடபழனி வழி கோயம்பேடு சாலை, பூந்தமல்லி சாலை, கிண்டி ஆகிய மூன்று பாதைகளையும் இந்தப்பாலத்தின் வழியே அடையலாம். பொழுதுபோகவில்லை என்றால் ஆலந்தூரிலிருந்து பாலத்தில் ஏறி இரண்டு அடுக்கு பாலத்தில் சுற்றி திரும்ப ஆலந்தூருக்கும் வரலாம்.
ஆலந்தூர் பகுதியில், பூந்தமல்லி, கிண்டி மற்றும் சைதாப்பேட்டை வழி்செல்லும் வாகனங்களின் நெரிசல் காரணமாக அந்த சந்திப்பில் பயணம் ஒரு மணி நேரம் முதல் பல மணி நேரம் வரை கூட தாமதப்பட்டது. அதனை சரிசெய்வதற்காக இந்த கத்திப்பாரா மேம்பாலம் கட்டமைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது
இந்த பாலத்தின் மொத்த கட்டுமான செலவு 486 கோடி ரூபாய் ஆகும். இது ஒரு பொறியில் பிரம்மாண்டம் என்று சொன்னால் மிகை ஆகாது.
இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை விட, ஏன் தெற்காசியாவிலேயே இது தான் இந்த வகையில் மிகப்பெரிய பாலம்.
கழுகுப் பார்வையில் பார்த்தால் இதன் அழகே தனிதான்.
இந்தப்பாலம் உபயோகத்திற்கு வந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் அடிக்கடி சென்னை பயணப்பட ஆரம்பித்தேன்.
என்னுடைய நீங்கா நினைவுகளில் ஒன்று, தாம்பரத்திலிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சத்யம் தியேட்டரை அடைந்த பேருந்து பயணம். காரணம் ஆலந்தூர் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசல்.
அதன்பிறகு 2012 ல் நான் சென்னையில் குடியேறிய பிறகு பலமுறை இந்த கத்திப்பாராவை கடந்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறையும் எனக்கு அந்த கசப்பான பயண நினைவுகள் நிச்சயம் வரும்.
இன்றைய சூழலில் கத்திப்பாரா மீதும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது வருகிறது என்றாலும் கூட, இந்த கத்திப்பாரா ஒரு பெருமையான பொறியியல் அடையாளம் என்பதையும் சென்னையின் பொக்கிஷம் என்பதையும் மறுக்க முடியாது.
கத்திப்பாரா பாலத்தின் அல்லது அந்த பாலம் வரும் முன்பு ஆலந்தூர் சந்திப்பில் ஏற்பட்ட நல்ல, கசப்பான நினைவுகளைப் பகிரலாமே!
இதற்கு முன் வெளிவந்த பாம்பன் பாலத்தின் நினைவுகளை வாசிக்க.
வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்த காபி ஹவுஸ் கட்டிடத்தை பற்றி வாசிக்க