உலகம் விசித்திரமானது.
பல இடங்களிலும், பல விதப்பட்ட, விசித்திரமான விஷயங்கள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஒரு உணவகத்தைப்பற்றி நினைவில் கொள்ளலாம்.
கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மத்திய இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் இந்தியன் காபி ஹவுஸ் என்ற உணவகம் பற்றியது தான் இந்தப் பதிவு.
அங்கே என்ன அப்படி வித்தியாசம் என்றால், என் வயதுக்கு அப்போது வாத்துக்கறியும், வாத்து முட்டையுமே வித்தியாசமானது தான். அது கேரளாவில் மிக சாதாரணமான உணவு என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
சரி கதைக்கு வருவோம்.
அந்த உணவகத்தின் வித்தியாசமே அதன் கட்டிட அமைப்பு தான்.
அப்படி என்ன என்று பார்த்தோமேயானால், இது வழக்கமான, சதுர அல்லது செவ்வக வடிவில் இல்லாமல், வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடம்.
அடடே, அப்படியா என்று பெரிதாக ஆச்சரியம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. விளக்கமாக பார்க்கலாம் இதன் கட்டமைப்பை.
பொதுவாக இங்கே லைட் ஹவுஸ் அதாவது கலங்கரை விளக்கு பார்க்க பலரும் உள்ளே போயிருப்போம். அதன் உள்ளே எப்படி சுழலும் படிக்கட்டுகள் அடுக்கடுக்காக மேலே ஏறுமோ, அதே மாதிரி இந்த ஓட்டலும் சுழலும் கட்டமைப்பில் மேல்நோக்கி ஏறும் விதமாக கட்டப்பட்டுள்ளது.
அதாவது மூன்று தள அடுக்கின் உயரம் உள்ள இந்த ஓட்டலுக்கு ஒன்று இரண்டு என்று தள வேறுபாடு கிடையாது. அதாவது படிக்கட்டுகள் ஏறி இன்னொரு தளத்தை அடையும் விதமான கட்டமைப்பு இல்லை.
கீழே இருந்து சுழல் போல ஏறத்துவங்கினால் சுத்தி சுத்தி மேல்தளம் வரை செல்லலாம். ஒரு பாதை நடக்க, மற்ற பக்கத்தில் அமர்ந்து சாப்பிட சிமெண்டு மற்றும் கடப்பா கல் கொண்டு கட்டப்பட்ட பலகை மற்றும் இருப்பிடம்.
காற்று மற்றும் வெளிச்சத்திற்காக சுற்றுச் சுவரில் ஏற்படுத்தபபட்ட வித்தியாசமான வடிவமைப்பு ஜன்னலாக செயல்படுகிறது.
கட்டிட அமைப்பில் இப்படி ஒரு வித்தியாசமான ஓட்டலை எனது அனுபவத்தில் நான் ரசித்த ஒன்று இந்த இந்தியன் காபி ஹவுஸ்.
என்றும் நீங்கா நினைவுகள் உடையது.
ஊர் சுற்றும் விருப்பமிருப்பவர்கள், திருவனந்தபுரம் சென்றால் பத்மாநசாமி கோவில் ,உயிரியல் பூங்கா என்பதை மட்டுமல்லாது இந்த வித்தியாசமான உணவக கட்டிடத்தையும் ஒரு முறை பார்க்கலாமே!
நினைவுகளில் இருந்து மறையாத நினைவைப் பகிர்வதில் மகிழ்ச்சி.
தொடர்ந்து வாசிக்க, கோவில்களின் கட்டிட கலை பற்றி இங்கு எழுதியிருக்கிறோம் – கட்டிட கலை அதிசயம் : சாயா சோமேஸ்வரர், கட்டிட கலை அதிசயம்: தஞ்சை பெரிய கோவில்.
நினைவுகள் சம்பத்த பட்ட பதிவுகள் இங்கே, பாம்பன் பாலத்தின் நினைவுகள், மனதை கவர்ந்த மாருதி 800.