பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
திருவள்ளுவர், குறள் 738
அணியென்ப நாட்டிவ் வைந்து
இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதற்கு இவையே அடையாளம் என்பது பொருள்.
நாம் இந்த 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில் கல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஒரு பணிமருத்துவர் ஒரு கும்பலால் கொடூர முறையில் கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிகிறோம்.
இந்த சுதந்திரம் யாருக்கு?
கும்பலாக கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கா? இப்படி இன்னும் எத்தனை கற்பழிப்புகளை கடந்து போகப்போகிறோமோ?
நல்ல காவல் என்பது ஒரு காப்பாளன் எப்போதும் நம்மைப் பாதுகாக்க வர வேண்டும் அல்லது பணியில் இருக்க வேண்டும் என்பதல்ல.
All Indians are my brothers and sisters என்ற சத்தியம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தன்னை விட வலிமை குறைந்த எதிர்பாலினத்தவருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் நாம்தான் காவலாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.
காந்தியடிகளின் வார்த்தை உண்மையாக இன்னும் எத்தனை சுதந்திர தினத்தை நாம் கடக்க வேண்டுமோ தெரியவில்லை.
இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் விவசாயிகள் வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு போராடுகிறார்கள்.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் கூட வறுமைக்க்கோட்டிற்குக் கீழே வாழும் பல கோடி மக்கள்.
நோய் என்பது உலகம் முழுதும் பரவியிருந்தாலும், அதற்கான மருத்துவம் எவ்வளவு தரமானதாக இருக்கிறது என்பதே ஒரு நல்ல அரசாங்கத்தை அடையாளம் காட்டும்.
இன்னும் கூட தரமான மருத்துவத்திற்கு தனியாரைத் தேடி அலையும் நிலையில் தான் இருக்கிறோம்.
ஆக மொத்தம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரால் கூறப்பட்ட ஒரு நாட்டிற்கான அணிகலன் என்பதில் ஒன்றைக்கூட முழுமையாக அடைந்திராமல் தான் வருடா வருடம் கொடி ஏற்றி பெருமிதத்தோடு சுதந்திரம் கொண்டாடுகிறோம்.
இந்தியா உலக நாடுகளின் வரிசையில் எவ்வளவோ முன்னிலையில் இருந்தாலும் கூட, நம்மிடையே உள்ள குறைகளை நாம் களைய வேண்டியது அவசியமாகிறது.
இது நாட்டுக்கு எதிராகப் பேசுவதோ, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ அல்ல.
ஆனால் இதை கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்றால் அது நமக்கு தான் பின்னடைவு.
சுதந்திரத்தைக் கொண்டாடும் இனிய வேளையில் நம்மிடம் உள்ள குறைகளை ஆராய வேண்டியதும் அவசியமாகிறது.
நாட்டிற்கு கேடாக எந்த விஷயம் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நம்மாலான செயல்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
நமது சுற்றத்தாரிடம் இதை எடுத்து சொல்லி இது தவறு என்று வளரும் தலைமுறைக்கு எடுத்து சொல்லி அவர்களை நல்விதமாக வளர்க்க வேண்டியது நமது கடமை.
நினைவுகள் வாசகர்களுக்கு 78 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்தகள்.
தொடர்ந்து வாசிக்க, குடிமக்களுக்கு தேவையான ஒழுக்கத்தை பற்றி இங்கு எழுதியிருக்கிறோம்
மேலும் சில திருக்குறள் சம்பந்தமான பதிவுகளை வாசிக்க.