காற்றில் நஞ்சை கலந்து
காசெனும் பேயை அடைந்திட,
ஓசோனில் ஓட்டை விழுந்து
ஓயாத இரைச்சலும் பெருகி,
பூச்சியும் மாண்டொழிந்து
புல்வெளிகள் காய்ந்து கருக,
ஆட்டமும் அதிகம் ஆகி
ஆள்பவன் நான் எனக்கருதி,
ஓட்டமாய் ஓடியே மனிதன்
ஒன்பதாம் கோளையும் தாண்டிட,
பூமியே தனக்கென கருதி
பூதமாய் மாறிய மனிதன்
அத்தனை வளத்தையும் சுரண்டி
மொத்தமாய் அபகரிக்க நினைத்தான்.
ஆர்ப்பரித்து வந்த கடல்
ஆட்களை கொன்று குவித்தும்,
சிலிர்த்து எழுந்த கோளது
வாய்பிளந்து கொன்று குவித்தும்,
வெடித்து கிளம்பிய எரிமலை
வெப்பத்தால் கருக்கி எரித்தும்
திருந்தவே இல்லை மனிதன்
திமிர் பிடித்ததாலே!
பொறுத்துக் கொண்ட அன்னை
பொங்கி விட்டாள் இன்று
கொரோனா எனும் கிருமி
கொலை செய்கிறது நின்று,
அகங்காரம் கொண்ட மனிதன்
அடங்கி வீட்டில் கிடக்க
அடங்கிக் கிடந்த அனைத்தும்
அழகாய் வாழ்கிறதே மனிதா?
சமநிலை எனும் சொல்லை
சாட்டையடி பட்டுதான் உணர்ந்தாய்,
கூண்டில் அடைந்த மிருகவதையை
குற்றம் செய்தே அடைந்தாய்.
கொரோனா மட்டும் அல்ல
கொடிய எண்ணங்களும் ஒழிய வேண்டு,
இயற்கை தாயை
மதிக்கப் பழகு!
கொரோனா சமயத்தில் எழுதிய இந்த கவிதையை நினைவுகள் வாசகர்களுக்காக பதிவிடுவதில் மகிழ்ச்சி.
பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் கீலிங் வளைவு பற்றி தெரிந்து கொள்ள.