Categories
அறிவியல் தமிழ் தற்கால நிகழ்வுகள்

வருமுன் காப்போம் – தடுப்பூசி தகவல்

கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) எனப்படும் நோய் மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு கொடிய புற்றுநோய்.

இது மாதவிடாய் முடிந்த பெரும்பாலான பெண்களை பாதிக்கும் நோயாக கண்டறியப்படுகிறது.

HPV அதாவது Human Pappiloma Virus என்ற விஷக்கிருமியால் இது உருவாகிறது. இந்த வைரஸ் இருக்கும் அனைவருக்கும் இந்த புற்றுநோய் வரும் என்பது கட்டாயமல்ல.

சிலரது உடல்வாகு காரணமாக, எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ் கிருமிகளை அழித்து விடுகிறது.

புகை பழக்கம், பாலியல் தொடர்பு, பல நபர்களுடனான பாலியல் தொடர்பு, வாய்வழி கர்ப்பத்தடை உபகரணங்கள் ஆகியவை இந்த நோய்க்குக் காரணமாக கண்டறியப்படுகிறது.

இந்த நோய் வந்த உடனே அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை. சிறிது காலத்திற்குப்பிறகே இந்த நோய் வந்தது சில அறிகுறிகளால் வெளிப்படுகிறது.

பிறப்புறுப்பிலிந்து அதிகப்படியான இரத்தப்போக்கு இதன் அறிகுறிகளில் முக்கியமானது. மேலும் இடுப்பில் வலி மற்றும் உடலுறவின் போது ஏற்படும் வலி ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும்.

பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும் வருமுன்னர் காப்பதே சிறந்தது என்ற வாக்கின் படி இதற்கு தடுப்பூசிகளும் உண்டு.

இப்போது இந்த நோய்க்கான தடுப்பூசி இந்தியாவிலேயே Make in India என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசு மற்றும் Serum Institute of India (SII) என்ற நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தயாரித்த
இதே நிறுவனம் தான் இந்த தடுப்பூசியும் கண்டறிந்துள்ளது.

வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் ஏற்கனவே இதற்கான தடுப்பூசிகளை கண்டறிந்து விட்டன.
ஆனால் ஏழ்மையான மற்றும் நடுத்தர குடும்பங்கள் எளிதாக அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு கட்டணம் இல்லை.

இரண்டு தவணை போட வேண்டிய இந்த தடுப்பூசியானது ஒரு தவணை 10000 ரூபாய்க்கு கிடைத்தது.

இப்போது Make in India திட்டத்தின் கீழ் இது தவணைக்கு 2000 ரூ ஆகவும், மேலும் ஆத்ம நிர்மான் பாரத் திட்டத்தின் கீழ் இது தவணைக்கு 1000 ரூபாய்க்கு கிடைப்பாதகவும் இணையங்களில் ஒரு தகவல் கிடைக்கிறது ஆனால் அதன் உண்மைத்தன்மை கண்டறியப்படவில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி

நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் இந்த கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் 9-14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனோடு அங்கன்வாடிகளை மேம்படுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இந்த திட்டம் இலவச தடுப்பூசி திட்டமாக அமையுமா, பள்ளிக்கூடங்களில் நேரடியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பதை பார்க்கலாம்.

தடுப்பூசி முறையாக பரிசோதிக்கப்பட்டு பக்க விளைவுகள் இல்லாமல் நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளும்.

நல்லதை எதிர்பார்ப்போம்.

நல்லதை நினைப்போம்.