வாயை அசைத்தால் சத்தம் என்பது எல்லோருக்கும் வரும்.
வார்த்தைகளை இணைத்தால் வாக்கியம் உருவாகும். ஆனால் பேசும் பேச்சு மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கிறதா, அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா என்பதைப் பொறுத்து தான் நமது பேச்சுக்கான மரியாதை கிடைக்கிறது.
சிலர் பேசுவதைக் கேட்டால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று கூடத் தோன்றும். பேசும் போது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும்.
Dear Brothers and sisters of America என்ற வார்த்தைகள் உருவாக்கிய அந்த மகிழ்ச்சியைப்போல.
சிலரது பேச்சுகள் அருவருப்பாக சபை நாகரீகம் இல்லாமல் இருக்கும். சிலர் பேசுவது அந்த சூழ்நிலைக்கு சம்பந்தமில்லாததாக இருக்கும்.
சிலர் பேசுவது தற்பெருமையாக இருக்கும், சிலரது பேச்சில் எப்போதும் எதிர்மறையான சிந்தனை இருக்கும்.
சிலரது பேச்சில் எப்போதும் விரக்தி தெரியும். நல்ல சந்தோஷமான ஞாயிற்றுக் கிழமைகளில் கூட “நாளைக்கு திங்கட்கிழமை, ஆபிஸ் போறத நினைச்சாலே கடுப்பா இருக்கு” என்று மறுநாள் சோகத்தை சந்தோஷமான சூழலில் வெளிப்படுத்துவார்கள்.
இப்படி பல ரகங்களில் பேச்சுகள் உண்டு.
ஒரு நல்ல பேச்சாளர் என்பவர் பல புத்தகங்களை வாசிப்பவராகவோ அல்லது பல நல்ல பேச்சாளர்கள், பெரியவர்கள், அறிவாளிகளின் பேச்சுகளை கேட்டு உணர்ந்தவராகவோ தான் இருக்க முடியும்.
பல விஷயங்களை முழுமையாகத் தெரிந்திருப்பது நல்ல பேச்சை வெளிப்படுத்த அவசியமாகிறது. இந்த முழுமையாக என்ற வார்த்தை முக்கியமானது.
ஏனென்றால் நாம் உதிர்க்கும் வாக்கியம் செய்தியா அல்லது புரளியா என்பது நாம் அந்த விஷயத்தின் ஆழத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
இதையே தமிழ், “அரைகுறை அறிவு ஆபத்தானது ” என்று அழகாய்க் கூறுகிறது.
இதையடுத்து, சொல்லவரும் விஷயத்தை எப்படி சொல்கிறோம், எந்த சூழலில் சொல்கிறோம் என்பது அவசியமாகிறது. சிறுகதை ஒன்று உண்டு.
நீண்டநாள் கழித்து வந்த நண்பனை உபசரிப்பதற்காக தனது மனைவியிடம் வெள்ளி ரோட்டாவில் பால் எடுத்து வந்து தரச்சொல்கிறார்.
அந்த நண்பரோ அதை வாங்கிப் பார்த்தபோது அதில் எறும்பு 🐜 ஒன்று இறந்து கிடந்தது.
சர்க்கரையில் இருந்து விழுந்த எறும்பாக இருந்திருக்கலாம். அதை குடிக்கவும் மனமில்லாமல், வெடுக்கென்று சொன்னால் நண்பன் அவரது மனைவியை கடிந்து கொள்வாரோ என்று சொல்லவும் மனமில்லாமல் தவித்தார்.
“என்னடா, பால் ஆறிடப்போகுது குடி” என்று தனது நண்பன் சொன்னதும் “அது ஒன்னுமில்லடா, சீனிவாசன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், அவரை தொந்தரவு செய்வானேன்?”
என்று சொன்னதும் அந்த ரோட்டாவை எட்டிப் பார்த்து அந்த நண்பரும் அவரது மனைவியும் குபீரென சிரித்து விட்டு, தனது விருந்தினரின் சாதுர்யத்தை உணர்ந்தார்கள் அதாவது நாம் சொல்ல வரும் உண்மை கூட ஒருவரை சிறிதும் காயப்படுத்தி விடக்கூடாது என்பது மரபு.
அப்படி நயமாக உண்மை கூற இயலாத சூழலில், ஒரு பொய்யேனும் சொல்லி அந்த இடத்தில் ஒரு நன்மை பயக்க திருக்குறள் வலியுறுத்துகிறது.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்ததிருவள்ளுவர், குறள் 292
நன்மை பயக்கும் எனின்
இன்னொரு முக்கியமான மரபு இடக்கரடக்கல்.
அதாவது ஒரு உண்மையை வேறு வார்த்தைகளால் வெளிப்படுத்துவது.
உதாரணமாக ஒருவர் மலம் கழிக்க சென்றிருக்கிறார் என்பதை பேச்சு வழக்கில் கொல்லைக்கு சென்றிருக்கிறார் என்று மாற்றி சொல்வது போல.
மேல்கூறியவை மட்டுமல்லாது அடுக்கு மொழி, இரட்டைக் கிளவி, போன்ற பல விஷயங்களும் ஒருவரை நல்ல பேச்சாளராக ஆக்குவதற்கு தேவையான விஷயங்கள்.
மேடைப் பேச்சாளருக்குத் தானே இதெல்லாம் தேவை என்றாலும், தினந்தோறும் நாம் பேசும் பேச்சுகளையே நயமாக நல்லவிதமாக பேசினால் நமது உறவுகளுக்கும் சுற்றத்தாருக்கும் மகிழ்ச்சி தானே?
உதாரணமாக காலையில் வேலைக்கு செல்லும் கணவனிடம் மனைவி, “ஏங்க பைக்ல பாத்துப்போங்க, பக்குவமா ஆபிஸுக்கு போயிட்டு போன் பண்ணுங்க” என்று சொல்வது அன்பின் வெளிப்பாடு.
அதே இவ்வாறு சிந்தித்துப் பாருங்களேன் “ஏங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி எதிர்வீட்டுக்காரர் வேலைக்குப் போறப்ப தண்ணி லாரில அடிபட்டு தலை நசுங்கி செத்துட்டாராம், நீங்க மறக்காம ஹெல்மட் எடுத்துட்டுப் போங்க”
இதுவும் அன்பு தான், தன் கணவன் தண்ணி லாரியில் தலை நசுங்கி செத்துப் போயிரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ஆனால் அப்படி சொன்னால் நமக்கு வேலைக்குப் போகத் தோன்றுமா?
ஆக நல்ல பேச்சு என்பது எதை எப்படி சொல்கிறோம் என்பதில் உள்ளது.
முகக் கவசம் என்பது வாய் மற்றும் மூக்கு ஆகிய இரண்டையும் மூடியிருந்தால் மட்டுமே முழுமையான பயன் தரும் என்பதோடு நிறுத்தாமல், இதை இப்படி மூக்கு தெரியும்படி அணிவதால் எந்தப்பயனும் இல்ல என்று முதல்வர் பேசியது பல இடங்களில் உபயோகிக்கப்படும் மீம்ஸ் ஆகி விட்டது.
பேசும் போது சொல்லப்படும் எதிர்மறை விஷயம் ஏற்றுக்கொள்ளப்படாது அல்லது கேலி செய்யப்படும் என்பதன் சாட்சி.
அதுபோல இன்னொரு கேலி பொருள் “இது ரொம்ப தவறுங்க” என்ற வாக்கியம்.
இது ஏன் கேலி பொருளானது? அவர் கோபமாக இதைக்கூறுகிறார். ஆனால் அது கேலி ஆகி விட்டது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, கோபத்தை பேசி தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதல்ல.
சில நேரங்களில் மௌனத்திற்கு வார்த்தைகளை விட பலம் அதிகம்.
இப்படி பல விஷயங்களையும் அனுபவங்களையும் கடந்து வரவே தான் நமது பேச்சு முதிர்ச்சியானதாக மாறுகிறது. எல்லாருமே முதிர்ச்சியான அருமையான பேச்சை வெளிப்படுத்த இயலாது என்பது உண்மை தான்.
ஆனால் அதற்கான முயற்சியை தாராளமாக செய்யலாமே?
வாய் மட்டும் இல்லாட்டி நாய் தூக்கிட்டு போயிரும், என்ற புதுமொழியையும், வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியையும் கருத்தில் கொண்டு, ஒரு நல்ல முதிர்ச்சியான பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
அதற்காக நிறைய வாசிக்கலாம்.
அன்புடன் நினைவுகள்.
வாசித்தல் கற்பனை திறனை எப்படி வளர்க்கும் என்று இங்கு எழுதியிருக்கிறோம்.