உலகில் மிகப்பிரம்மாண்டமாக பல சிலைகள் வந்துவிட்ட போதிலும், இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை விண்ணை முட்டும் உயரத்தை அடைந்தாலும் , இவையெல்லாம் சமீப காலத்தில் உருவானவை, அல்லது 20 ஆவது நூற்றாண்டில் உருவானவை.
இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியான சிலை, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை (statue of liberty).
பிரம்மாண்டம், மிகப்பிரம்மாண்டம் எல்லாம் பழக்கத்தில் இல்லாத பொறியியல் முன்னேற்றம் வெகுவாக இல்லாத 1886 ஆம் ஆண்டிலேயே 305 அடி உயரத்துக்கு ஒரு வெண்கல சிலை என்பது ஒரு மைல்கல் தான்.
சுதந்திர தேவி சிலை, அமெரிக்க மக்களுக்கு, சுதந்திரத்தின் அடையாளமாக, அடிமைத்தனம் உடைக்கப்பட்டதன் சின்னமாக பிரெஞ்சு மக்களால் பரிசளிக்கப்பட்ட சிலை.
பிரெஞ்சு சிற்பி பிரெடரிக் அகஸ்டே பார்த்தோல்டியால் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. உலோகக் கட்டமைப்பானது பிரபல ஈபிள் டவரை வடிவமைத்த குஸ்டாவ் ஈபிள் அவர்களால் செய்யப்பட்டது.
சுதந்திர ஒளியின் சின்னமாக இந்த சுதந்திர தேவி தன் வலது கையில் ஒரு ஜோதி உள்ள பந்தத்தைப்பிடித்திருக்கிறாள். அவளது இடது கையில் ஜூலை 4, 1776 என்ற தேதி பொறிக்கப்பட்ட ஒரு கோப்பும் உள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் (american civil war) பிறகு , அடிமைத்தனம் உடைந்ததை பரைசாற்றும் வகையில் சுதந்திர தேவியின் கால்களில் உடைந்த சங்கிலியும், ஒரு காப்பும் உள்ளது.
சுதந்திர தேவியின் சிலை முழுதாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்படுவதற்கு முன்பு, பல கண்காட்சிகளில் அதன் ஜோதி ஏந்திய கை, மற்றும் தலை உருவம் என காட்சிப்படுத்தப்பட்டு, பிரபலப்படுத்தப்பட்டு, பிரான்ஸ் மக்களிடம் நிதி உதவி கோரப்பட்டது.
அக்டோபர் 28, 1886 ல் நிறுவப்பட்ட சிலை 1934, 1984-86 மற்றும் 2011-12 வருடங்களில் சீரமைக்கப்பட்டது. 1933 துவங்கி இன்று வரை அமெரிக்க தேசிய பூங்கா நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
1924 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
ரோமானிய நாட்டின் சுதந்திர தெய்வம் இன்று அமெரிக்க நாட்டின் சின்னமாக, பிரெஞ்சு மக்களால் கொடிகட்டிப்பறக்கிறாள்
பிரம்மாண்ட சிலைகளுக்கெல்லாம் முன்னோடி இவள்.
நினைவுகள் வலைத்தள வாசகர்களின் நினைவில் இந்த சுதந்திர தேவியின் பெருமையை மீட்டெடுப்பதில் நினைவுகளுக்கு மகிழ்ச்சி.