EMI – Equated Monthly Installment, எனும் கொடிய கிருமி உருவெடுக்கும் முன்னரே கைமாத்து, கடன் போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இருந்து வந்த ஒன்று தான்.
அதாவது மாத ஊதியத்தைக்காட்டிலும் அதிகமாக ஏதாவது தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும் போது இவ்வாறான கைமாத்துகள் அல்லது வட்டிக்கு கடன் வாங்குதல் போன்றவை புழக்கத்தில் இருந்த ஒன்று.
இப்படி கடன் வாங்கும் போது ஏற்படும் பிரச்சினை என்னவென்றால் வட்டி. பெரிய தொகை ஒன்றை தேவைக்கென வாங்கிவிட்டு, அந்தத் தொகைக்கான வட்டியை கட்டியே கடன் வாங்கியவரின் வாழ்க்கை முடிந்து விடும்.
சிறிது காலத்திற்கு முன்பு வரை நாம் பார்த்த கந்துவட்டி வகை தற்கொலைகள் இந்த வகையில் நிகழ்ந்தவைகளே.
உதாரணமாக 1,00,000 ரூ கடனாக கொடுக்கப்படுகின்ற இடத்தில் கந்து வட்டியாக மாதம் 6-7 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும். (2-3 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டிய பணத்திற்கு வட்டி விகிதம் 20%-50% வரை இருக்கலாம், வங்கியில் வசூலிக்கும் 8-10% ஐ விட பல மடங்கு அதிகம்). கந்து வட்டியை பொறுத்தவரை ஒரு திட்டமோ, தெளிவான அவகாசமோ கொடுப்பது இல்லை. இது போன்ற கடன்களை ஆங்கிலத்தில் predatory lending (கொள்ளையடிக்கும் கடன்) என்கிறார்கள்.
1 லட்ச ரூபாயை கடனாக யார் வாங்குவார்கள்?
மாதம் 15-20 ஆயிரம் சம்பாதிக்கும் ஆட்கள். அவர்கள் மாதம் 7 ஆயிரம் வட்டி கட்டி விட்டால், அசலை எப்போது அடைப்பது?
இந்த உதாரணம் மிகைப் படுத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம் ஆனால் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்தவைகள் தான்.
அந்த கந்து வட்டி கலாச்சாரம் ஒழிந்து இப்போது புதிதாக அவதாரம் எடுத்திருப்பது தான் இந்த EMI. இங்கு திட்டங்களும், அவகாசமும் கொடுப்படுகின்றன. பிரச்சனை என்ன? ஆசை தான்.
கடனே வாங்கக் கூடாது என்பதற்காக அல்ல.
ஆனால் கடன் எதற்காக வாங்குகிறோம்? இது தேவைதானா? கடன் வாங்கி வாங்கும் அளவிற்கு உபயொகமானதா என்பதை யோசிக்கிறோமா என்பதே இங்கு முக்கியம்.
அவனும் பைக் வச்சிருக்கான், இவனும் பைக் வச்சிருக்கான் என நானும் பைக் வாங்கிய போது, மாதம் 4000 ரூ கட்டுவது எனக்கு எளிதாகத் தோன்றியது.
பைக் வாங்கும் முன் எனது போக்குவரத்துச் செலவு 1000 ரூ/ மாதம், பஸ் பாஸ் மற்றும் டிக்கெட். பைக் வாங்கிய பிறகு 2500-3500 பெட்ரோலுக்கு, பைக் தவணைப்பணம் 4000, இதர செலவுகள் 500, ஆக மொத்தம் 7000-8000 ரூ.
எனது செலவு 8 மடங்காகிப் போனது.
இது என் மூளைக்கு எட்டவே இல்லையே?
மாதம் 8000 ரூ இதிலேயே காலி செய்து விட்டு மீதி பணத்தில் என்ன செய்வது? இங்கிருந்து துவங்குகிறது பிரச்சினை.
இது இன்று இல்லை, 1960களிலும் கூட இது சினிமாவில் பாடலாக வரும் அளவிற்கு பெரிய பிரச்சினை ஆகத்தான் இருந்திருக்கிறது.
ஆமாம் 1960 ல் வெளிவந்த இரும்புத்திரை என்ற படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் இயற்றிய பாடலில் இந்த வேதனை வெளிப்பட்டிருக்கும்.
“கையில வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே“
என்ற பாடல் தான் அது.
மாத சம்பளம் வாங்கிய அன்றே கடன்காரர்கள் வரிசையில் வந்து தனது சம்பளம் மொத்தத்தையும் கடனுக்காக திரும்ப எடுத்துச் சென்று விடும் அவல நிலையை சொல்லும் பாடல்.
அது இல்லாமல் இன்று ஊழியர்கள் உழைத்து கார்ப்பரேட்டுகள் உயருவது போல, அந்தக் காலத்தில் குறிப்பிட்ட பணக்காரர்கள் உயர்ந்து வந்த்தையும் குறிப்பிட்டிருக்கும் அந்தப்பாடல்.
“சொட்டு சொட்டா வேர்வையும் விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பெட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே“
என்ற வரிகள் உழைக்கும் வர்க்கத்திற்கு வியர்வையும் பட்டினியும் மட்டுமே மிஞ்ச முதலாளிகள் பணத்தில் கொழிக்கிறார்கள் என்ற கம்யூனிச சித்தாந்தத்தைப் பேசுகிறது.
அந்தக்காலம் இந்தக்காலம் எந்தக்காலமாக இருந்தாலும் இந்த பிரச்சினை என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
நுகர்வெனும் மாயை இன்று அசுர வளர்ச்சி பெற்று பல குடும்பங்களை சீரழித்து வருகிறது.
சொந்தமா வீடு வாங்கிவதில் துவங்கி , கார் வரை இன்று அத்தியாவசியமானதாக தோற்றம் அளிக்கிறது.
கூடிய விரைவில் சொந்த விமானமும் விற்பனைக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கல்ல.
சம்பாதிக்கும் நமக்கு தான் தெரிய வேண்டும் நமது தகுதி.
நமது உயர் அதிகாரி வீட்டிலிருக்கும் அதே மாடல் சோபாவோ, காரோ நம் வீட்டில் இருந்தாலென்ன? வாழ்வது ஒரு வாழ்க்கை, அது வாழ்வதற்கே என்று வசனமெல்லாம் பேசி வியாபாரி நம் தலையில் கட்டலாம். ஆனால் அவர் வாங்கும் சம்பளமென்ன, நாம் வாங்கும் சம்பளமென்ன என்பதை உணர்ந்து, அதற்கு தகுதியான செலவை செய்வதே புத்திசாலித்தனம்.
அவர் சம்பளத்தை நாமும் வாங்கும் போது இதை வாங்கிக் கொள்ளலாம் என்ற பக்குவம் வந்துவிட்டால் சிறப்பு.
பல கந்துவட்டி தற்கொலைகளின் கனமான நினைவுகளுடன், இந்த சின்ன அறிவுரையும்.