சில நேரங்களில் நமது மனதை கனமாக்கினாலும், பல நேரங்களில் அருமையான நல்ல நினைவுகள் நம்மை மகிழ்விக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எதையாவது நினைத்து மனதைப்போட்டுக் குழப்பிக்கொள்ளாதே என்று நாம் பொதுவாக சொல்லும் வாசகம், நிகழ்காலத்தில் துவங்கி எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு பிரச்சினை எப்படியான ஒரு முடிவைத்தரும் என்பதைச்சார்ந்த ஒன்றாகவே இருக்கும்.
பழைய நினைவுகள் என்றுமே நமக்கு ஒருபோதும் குழப்பத்தைத் தருவதே இல்லை.
சொல்லப்போனால் சில நினைவுகள் ஒரு காரியத்தை நாம் சிறப்பாக செய்வதற்குக் கூட காரணமாக அமையலாம்.
ஒரு கோவிலுக்கு அல்லது ஒரு நல்ல காரியத்துக்காக செல்லும் போது,அது சரியாக செய்து முடிக்கப்பட எப்படியான திட்டமிடல் இருந்தால் நினைத்தது நினைத்தபடி முடியும் என்பதை நமக்கு பழைய நினைவுகள் வழிகாட்டும்.
நினைவுகள் என்பது நூலகத்தில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் போல.
வெறும் கல் கட்டிடம் நூலகமாகி விடாது என்பதைப்போல, மனித உடல் என்பது ஆன்மாவை சுமந்து வாழ்க்கையில் பயணித்து அந்த ஆன்மாவை இறக்கி வைத்து இறைவனடி சேரும் வரை, அந்த உடல் வாழ்ந்த வாழ்க்கை என்பது நூலகமா அல்லது வெறும் கல் கட்டிடமா என்பது அவரது வாழ்வில் இனிமையாக நினைத்துக்கொள்ளும்படியாக நல்ல சம்பவங்களும், அதன் நினைவுகளும் இருந்ததா என்பதைப்பொறுத்தே அமையும்.
ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவனோடு கடைசியாக வருவது அவனது நினைவுகள் மட்டுமே என்றும், அந்த நினைவுகள் மனதில் படபடத்துக்கொள்ளும் போது தான் எமக்காய்ச்சல் என்று உடல் உஷ்ணம் அதிகமாகும் நிகழ்வு நடைபெறுகிறது என்றும் நமது ஊர்களில் ஒரு சொல் உண்டு.
ஒரு உறவு நம்மை விட்டுப்பிரிந்த பிறகு அவருடனான நல்ல நினைவுகள் மட்டுமே நமக்கு மன ஆறுதலைத்தரும்.
நினைவுகள் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வரம்.
ஏதேதோ நினைவுகளின் வாட்டாத்தால் நினைவுகளைப்பற்றி ஒரு கட்டுரை, நினைவுகள் வலைதளத்தில்.