Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அதிகாரத்தின் சறுக்கல் – சாதியின் வெளிப்பாடு

மெட்ராஸ்ல லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..?

நவநாகரீக சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறிய எனக்கு எதிர்வீட்டில் வசிப்பவர், ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அலுவலகத்தில் பணி நேரத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் அந்த குடியிருப்பிலும்.

தண்ணீர் மின்விசைப்பம்புகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது.

சுவிட்ச் எல்லோருக்கும் பொதுவாக வெளியே இருந்தாலும் கூட, தண்ணீர் தேவை என்றால் அவரிடம் சொல்லியே சுவிட்ச் போட வேண்டும்.
அந்த குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் கூட ஒரு ஒழுக்கமான பராமரிப்பு என்ற பெயரில் அவருக்கு இவ்வளவு அதிகாரம் அளித்து விட்டனர்.

கொசு மருந்து அடிப்பவரோ, கொரோனா கணக்கு எடுக்க வருபவரோ எவராயினும் அவரிடம் கேட்காமல் உள்ளே நுழைய இயலாது.

சிரித்துக்கூட பேச மாட்டார் , எப்போதும் சிடு சிடுவென்றே தான் இருப்பார்.

நமது இருசக்கர வாகனத்தை மறந்து சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டால் அவ்வளவு தான். இரவு தூங்க முடியாது.

“தம்பி பாதைய அடைச்சு வண்டிய நிறுத்தி இருக்கீங்க, கொஞ்சம் நேரா நிறுத்துங்க” என்று இரவு 9.30 மணிக்கும் கதவை தட்டுவார்.

இரவு 9.30 மணிக்கு மேல் அந்தப்பாதையில் அவர் மட்டுமே ஒருமுறை மட்டுமே கதவுகளை மூடுவதற்காக செல்வார். அவர் நம்மை இதை செய்ய சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் அது அவருக்கு முக்கியம். எப்படியாவது, யாரையாவது தொந்தரவு செய்தாக வேண்டும்.

இப்படிப்பட்ட சிடுமூஞ்சிக்கு அவரது சாதி சங்கத்திலிருந்து வந்திருந்த மாத சந்தா புத்தகத்தை, எனது தாயார் நான்தான் ஏதோ
இந்த மாதாந்திர சந்தாவில் புதிதாக இணைந்துவிட்டேன் என நினைத்து, முகவரியைக்கூட படிக்காமல் என் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டார்.

இது தெரிய வந்ததும் எனக்கு சற்றே எரிச்சல். “நான் எப்ப இதுக்கெல்லாம் காசு கொடுத்தேன்? ஏன் ஒழுங்கா பாக்காம, அடுத்த ஆளோடத எடுத்துட்டு வர?” என்று என் அம்மாவிடம் வசை பாடிவிட்டு, அந்த சிடுமூஞ்சி முன்பு குழைந்து நிற்கிறேன்.

“சாரி ,சார், எங்கம்மா முகவரி பாக்காம, புத்தக அட்டையைப்பார்த்து விட்டு எனது வீட்டுக்கு வந்தது என்று நினைத்து எடுத்துவிட்டார்கள்” என்று சொல்லவும், “தம்பி நீங்க நம்ம ஆளுகளா” என்று கேட்டுவிட்டு பல்லைக்காட்டி அந்த சிடுமூஞ்சிக்காரர் வழிந்தது மறக்க இயலாது.

சென்னைல எல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க!

நாங்க இருக்கோம்😄

நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.