சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும்.
ஆன்மீகம் அப்படி இல்லை.
பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு அந்தப்பிரார்த்தனை நிறைவேறும் என்பது உறுதியல்ல.
இந்தக்கட்டுரை எழுதும் நான் முழு நாத்திகவாதியும் அல்ல, ஆத்மார்த்தமான ஆத்திகவாதியும் அல்ல.
நான் வேண்டியது கிடைக்கவில்லையே கடவுள் ஏன் தரவில்லை, அதைத்தராத கடவுளை போய்வணங்கி நான் ஏன் எனது நேரத்தையும் பணத்தையும் விரயமாக்க வேண்டும்? என்று கேட்டால், நீ இப்ப இந்த நிலையில் இருப்பதற்கே கடவுள் தான் காரணம். எல்லாம் கூடிய விரைவில் நிகழும் என்று வாயடைத்துவிடுவார்கள்.
அப்படி எத்தனையோ பக்தர்கள் என்றைக்காவது நல்லது நடக்கும் என்று நம்பி குவியத் துவங்கி விட்டார்கள். வருடாவருடம் திருப்பதியிலும், சபரிமலையிலும் கூட்டம் அதிகரிக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை.
சரி நம்ம கருவைப்பார்க்கலாம். பழனியில் வருகிற ஆகஸ்ட் 24-25 தேதிகளில் ஒரு பிரம்மாண்ட மாநாடு அறநிலையத்துறை சார்பில் நிகழவிருக்கிறது. மாநாட்டின் பெயர் முத்தமிழ் முருகன் மாநாடு.
சில சொற்பொழிவுகளும், பட்டிமன்றமும் நடக்கும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பொதுஜனம் 2 லட்சம் பேருக்கு அனுமதி. ஆனால் முன்பதிவுடன் அனுமதி.
மாம்பழமும் வேண்டாம், மண்ணும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம், கோவணம் போதும் என்று கோவணத்தோடு கோவித்துக்கொண்டு வந்த கோவண ஆண்டியைப்பற்றி மாநாடு நடக்கிறது என்றால் கண்டிப்பாக இலவச அனுமதியாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.
ரயில் வழிப்பயணம் மற்றும் தங்கும் செலவு அந்த நாட்களில் அதிகமாகத்தான் இருக்கும், அதை உத்தேசித்து செலவு செய்து மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று முன்பதிய விழைந்தேன்.
தலைக்கு 500 ரூ கட்டணமாக அல்லாமல் நிதியுதவி என்ற பெயரில் வசூலிக்கிறார்கள்
தலைக்கு 500 என்றால், 2 லட்சம் பேருக்கு பத்து கோடி ரூபாய்.
இது அல்லாமல் தங்குமிடம், உணவு என்று அந்த இரண்டு நாட்கள். வியாபாரத்தில் கொழிக்க இருக்கும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், முருக பக்தர்கள், விளம்பரதாரர்கள் என்று தங்கள் பங்குக்கு ஒரு தொகையை அளித்தால் இன்னொரு பத்து கோடி கூட வசூல் ஆகலாம்.
மாநாட்டின் இணைய பக்கத்திலேயே இந்த விடுதிகளில் தாங்கிக்கொள்ளலாம் என்று பெரிய பட்டியல் வருகிறது. பணம் வாங்காமலா பட்டியல் வந்திருக்கும்?
கண்டிப்பாக இரண்டாவது சொல்லப்பட்ட விதத்தில் ஒரு பெரிய தொகை பிரளும் என்பது உண்மை. ஆனால் பாவம் இத்தனைக்கும் காரணமான பழனியாண்டிக்கு கோவணம் தான். மிஞ்சிப்போனால் பட்டுக்கோவணம் கட்டுவார்கள்.
பத்து கோடியை அவர் பெயரிலா வங்கியில் போடப்போகிறார்கள்?
ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது.
மனிதன் மனநிம்மதிக்காக அல்லாமல், வேண்டுதலுக்காகவும், விளம்பரத்துக்காகவும் என்று கோவிலுக்குப் போக ஆரம்பித்தானோ அன்று துவங்கி கடவுளும் வர்த்தகப்பொருளாகி விட்டார்.
இதெல்லாம் பக்தி என்ற பெயரில் ஏமாந்து போகும் மக்கள் மனம் திருந்தாமல் மாறப்போவதில்லை.
நாத்திகம் பேசுவது நமது கொள்கையன்று, ஆத்திகத்தை சீர்படுத்தும் நல்ல நோக்கமே நமது சிந்தனை.
நினைவுகள் வாசகர்களோடு நல்ல சிந்தனைகளைப்பதிந்து கொள்வதில் பெருமிதம்.