பெரும்பாலான மக்களுக்கு சொந்தமில்லாததாக இருந்தாலும் அனைவரது நினைவுகளிலும் நிலைத்து நிற்கும் மாருதி 800 என்ற மகிழுந்தைப் பற்றி ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கலாம்.
1983 முதல் 2014 வரை பல நடுத்தர குடும்ப மக்கள் எளிமையாக சொந்தம் கொண்டாடிய வாகனம்
இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்த்து கிட்டதட்ட 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆன மாடர்ன் ரக கார்.
அதாவது பியட் பத்மினி, அம்பாசிடர் கார்களை ஒப்பிடும் போது மாருதி 800 தான் நவீன மகிழுந்து.
இந்தியாவில் அம்பாசிடர் கார்களுக்குப் பிறகு அதிக உற்பத்தியும் அதிக விற்பனையும் ஆன மகிழுந்து என்ற பெருமை மாருதி 800 காரையே சேரும்.
31 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் என்ற பெருமையும் உண்டு. 2004 ல் மாருதி 800 க்கு பதிலாக ஆல்டோ என்ற ரகம் மாற்றிவந்தது பிறகு 2014 ஆம் ஆண்டு நவீன ரக தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளீடு செய்ய இயலாத காரணத்தால் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
1983 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மாருதி காரின் சாவியை அன்றய பிரதமர் இந்திராகாந்தி, அதன் உரிமையாளர் ஹர்பல் சிங் அவர்களிடம் ஒப்படைத்தார். இது குலுக்கல் முறையில் அவருக்கு கிடைத்த பரிசு ஆகும்.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இதன் பயன்பாடு அதிகரித்தது. பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
அம்பாசிடர் கார்கள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பல உயர்ரக மக்கள் பயன்படுத்திய போது, எளிய மக்களின் நண்பனாக இருந்த மாருதி 800 பல சினிமாக்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயககிகளின் கௌரவமாக இருந்தது.
பணக்கார கதாநாயகிகள், மாட்டு வண்டி ஓட்டும் கதாநாயகர்களை கேலி செய்வதற்கு மாருதி 800 காரில் தான் வருவார்.
டயரை பஞ்சராக்குவது கண்ணாடியை உடைப்பது போன்ற பல சம்பவங்களில் பலியாகி நம்மை மகிழ்வித்தது இந்த மாருதி 800 கார்கள் தான்.
பலருக்கு சொந்தமானதாக இல்லாவிட்டாலும் அனைவரின் மனதுக்கும் நெருக்கமான மகிழுந்து மாருதி 800 1983 துவங்கி 2014 வரை முடிசூடா மன்னன் தான்.