Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

மனிதனா? இயந்திரமா? – நேர்காணல் பரிதாபங்கள்

வீட்டிற்கு ஒன்று துவங்கி 4,5 என நீளும் பட்டதாரிகளின் எண்ணிக்கை,ஆரோக்கியமானது என்றாலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுக்கிறது.

கல்வி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட வசதிகள், நடவடிக்கைகள் வேலைவாயப்புக்கு சரிவர செய்யப்படவில்லையோ, அல்லது இடைவெளி நிரப்பப்படவில்லையோ என்பதை நாம் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையில் நேர்காணலுக்கு எப்படித்தயாராக வேண்டும் என்று தற்போது பரவலாக நடக்கும் வேடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.

முதலில் இந்த நேர்காணல் கூற்றுகள் ஐடி நிறுவனங்களில் துவங்கியது. இன்று மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் வரை வந்து விட்டது.

அதாவது, தனது நிறுவனத்தில் பணிபுரிய நல்ல ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் Human Resources (HR) அணி ஒன்றை நிறுவுகிறது. அவர்கள் MBA போன்ற படிப்புகள் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் ஆரம்பித்த கூற்றுகள் தான் இவை.

அவர்களில் ஒரு பாதி பேர் இது மாதிரி நிறுவனங்களில் HR ஆகப்பணிபுரிகிறார்கள்.

மீதி பேர் HR அணியிடம் எப்படி நல்ல வேலைக்காரன் போல நடித்து வேலை வாங்கலாம் என்று வகுப்பு எடுக்கிறார்கள்.

என்னங்கய்யா உங்க திட்டம்?

எனது நண்பர் மூலமாக இதை அறிந்து கொண்டேன். அவரும் இந்த நேர்காணலில் வேலை வாங்குவது எப்படி என்ற வகுப்பிற்கு சென்றார்.
அதன் ஆங்கிலப் பெயர் Personality Development course. அதற்கு தரம் பிரித்து பணம் வசூலிக்கிறார்கள். ஆயிரங்களில் துவங்கி லகரங்கள் வரை நீள்கிறது.

சரி அதில் என்ன சொல்லித் தருவார்கள் என்றால், நேர்காணலுக்கு எப்படியான சட்டை மற்றும் பேன்ட் அணிந்து செல்ல வேண்டும்.

லைட் கலர் சட்டையும், டார்க் கலர் பேன்ட்ம். அப்படிப் போனால் தான் நேர்காணல் எடுப்பவர்கள் முன் நாம் எடுப்பாக இருப்போமாம்.

நாம என்ன சினிமா படம் நடிக்கவா போகிறோம் என்ற கேள்வி இங்கேயே எழுகிறதா? அடுத்தது வாசனை திரவியம், அதிலும் சில ப்ராண்ட் பெயர்களோடு சொல்கிறார்களாம்.

வியர்வை மண்ணில் சிந்த உழைக்கும் பல உன்னதமான உழைப்பாளிகளின் நடுவே நின்று பார். அதைவிட என்ன வாசனை வேண்டும் என்று கோவத்தைத் தூண்டுகிறதல்லவா?

அதன்பிறகு உங்களைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்கப்படும் கேள்விக்கு, ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விடச் சொல்கிறார்கள்.

உங்களுக்கு யானை தான் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல வேண்டுமாம்.
அப்போது தான் நீங்கள் கோவில் யானை போல பிச்சை எடுத்து, பாகனுக்கு அடங்கி வாழ்வது போல, ஐடி கம்பெனியில் வாழ்வீர்களாம்.

அட என்னங்கடா? என்று சலிப்பு வருகிறதா?

இன்னும் பல பல விஷயங்கள் இதில் அடக்கம். ஆங்கில வார்த்தை உச்சரிப்பு, வார்த்தை பிரயோகங்களில் அவர்கள் படுத்தும் பாடு இருக்கே!

எளிமையாக நாம் உரையாடும் வார்த்தைகளை உபயோகித்தால் கேவலமாம். அதனால் மிகவும் கடினமான , நளினமான ஆங்கில வார்த்தைகள் பலவற்றைப் பொறுக்கி அதை உபயோகிக்கச் சொல்கிறார்கள். அதெல்லாம் நாம் மனப்பாடம் செய்து ஓரிரு முறை வேண்டுமானால் பேசலாம். யதார்த்மாக நாம் நமக்குப் பரிட்சையமான பழகிப்போன வார்த்தைகளைத் தானே பேச முடியும்?

ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தகவல் பரிமாற்றத்துக்குத் தேவையான ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதாதா?

இப்படி நேர்காணலுக்கு என்று நமக்கே தெரியாத ஒருவனை நமக்குள் புகுத்தி, நம்மை நடிகனாக்கி, திரும்ப நாம் நாமாக மீள இயலாத வழிக்கு நம்மை அவனாகவே பழக்கி, வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு கொத்தடிமைகளாக வைத்திருப்பதே இதன் நோக்கமா என்பது புரியவில்லை. சிறு வயதிலிருந்தே சிங்கத்தின் மீது பேரார்வம் கொண்டிருந்த ஒருவன் நேர்காணலுக்காக, யானை பிடிக்கும் என்று சொல்லும் போதே அவனுக்குள் இருக்கும் உண்மை அழிந்தல்லவா போகிறது?

எனக்குப் பிடித்த நிறத்தில் நான் சட்டை அணிந்தால் தான், என்னை நான் பார்த்து ரசித்து, எனக்குள் ஒரு நம்பிக்கை வளரும் என்பதை மறந்து யாருக்கோ பிடிக்கும் வகையில் நான் வேஷமிட வேண்டுமோ?

போலி வேடம் எத்தனை நாள் நிலைக்கும்?

படித்துவிட்டு வேலைக்கு சற்றே சிரமப்படும் வேளையில் இதை செய்தால் வேலை, அதை செய்தால் வேலை என்று கூறி, ஒருவனை முட்டாளாக்கி, அவனிடமிருக்கும் உண்மையான அவனை காணாமலடிப்பது எந்த வகையில் நல்லது என்பது புரியவில்லை. யதார்த்த நிகழ்வுக்கு எதிரானதாக இருந்தாலும் என்னுடைய கண்ணோட்டத்தில் இது தவறாகப்படுகிறது.

இதன் நன்மை தீமைகளை பகுத்து ஆராய ஒவ்வொருவருக்கும் ஒரு காரணமும், அறிவும் இருக்கிறது. நினைவுகள் வாசகர்களோடு இந்த வாதத்தை வைப்பதில் மகிழ்வு கொள்கிறோம்.

கருத்து: கற்பனை உலகின் திறவுகோல், வாசிப்பு

நினைவுகள் என்பது அழியா வரம்