மாதா, பிதா, குரு , தெய்வம் என்ற வரிசைப்பாடு நமக்கெல்லாம் மிகவும் பரிட்சயம்.
இதில் மாதா , பிதாவுக்கான மரியாதையோ, அன்பு பாசமோ குறைவில்லாமல் நிறைவாகத்தான் பெரும்பாலான குடும்பங்களில் இருக்கிறது. சில குடும்பங்களில் பெற்ற தாய், தந்தையை ரோட்டில் விட்ட கதைகளும் இல்லாமல் இல்லை.
தெய்வம் என்ற ஒன்று இப்போது சொல்லவே தேவையில்லை.
நாளுக்கு நாள் தெய்வ ஆராதனைகளும், நிந்தனையும் பூஜையும் கோவிலுக்குச் செல்லும் கூட்டமும் அதிகரிக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை.
பாவம் குருமார்களின் பாடு தான் திண்டாட்டம். சினிமாவில் கேலியாக குருமார்களை சித்தரிக்கத்துவங்கி இன்று உண்மையிலேயே குரு என்பவருக்கான மரியாதை எள்ளளவும் இல்லாமல் போய்விட்டது.
குழந்தைக்கு முதலில் சொல்லித்தரப்பட வேண்டிய பாடம், குருபக்தி.
அப்படி ஒன்று இன்றைய தலைமுறைக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
குருபக்தியை நினைவுறுத்தும் விதமாக சிறுகதைகளை பெரியவர்கள் சொல்வதுண்டு. அவையெல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டது.
ஏகலைவன், கர்ணன் போன்ற காரசாரமான குருகதைகளாக அல்லாமல், நகைச்சுவையாக பல கதைகள் சொல்லப்படுவதுண்டு். இன்று நினைவுகள் வாசகர்களோடு அப்படியான இரு கதைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.
முதல் கதை, திருவிளையாடல் என்ற படத்தில் வந்த கதை.
ஒரு வாள் வித்தைக்காரன், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பெயரெடுப்பதற்காக, தன் குருவையே சண்டைக்கு அழைக்கிறான். வயோதிகம் காரணமாக தன்னால் அவனிடம் சண்டையிட்டு வென்றிட முடியாது என்று வருந்திய குருவுக்கு அவரது மனைவி ஒரு யோசனை சொல்கிறார்.
மறுநாள் களத்திற்கு மாணவன், வாளுடனும் கேடயத்துடனும் வந்து நிற்க, குருவோ, இட்லி தட்டுடனும் கரண்டியுடனும் வருகிறார்.
திகைத்த மாணவன், “என்னங்கய்யா இது சண்டைக்கு இட்லி தட்டோடு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்க, “இது நான் உனக்குக் கற்றுக்கொடுக்காத வித்தை. நீ வாளை சுழற்றும் முன்பே உன்னை ஒரே போடாக வீழ்த்த போகிறேன்” என்று குரு சொன்னதும், மாணவன் பயந்து குரு காலில் விழுகிறான்.
“மன்னியுங்கள் ஐயா, ஆணவத்தில் தங்களையே சண்டைக்கு அழைத்துவிட்டேன்.”
“என்னை மன்னித்து அந்த வித்தையைக்கற்றுத் தாருங்கள்” என்று கெஞ்சினான்.
குருவோ, சிரித்து விட்டு. இது ஒரு வித்தையே இல்லப்பா, உன்னை ஏமாற்றவே அப்படி செய்தேன் என்று
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்பதை நிரூபித்து விட்டார்.
இரண்டாவது கதை, ஆல் இந்தியா ரேடியோவில் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதை.
ஒரு குருவிடம் நான்கு சீடர்கள் மடத்தில் தங்கி பயில்கிறார்கள்.
அதில் ஒரு சீடனின் மீது குருவுக்கு அதீத நல்லெண்ணம்.
அவன் மிகுந்த குருபக்தி உடையவன் ஆதலால், அவனுக்கு கிடைத்த பரிசு அது. மீதி மூவருக்கும் அது பிடிக்கவில்லை. இவனை எப்படியாவது குருவிடம் கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
இரவு சாப்பிட்டு உறங்கச்செல்லும் முன் வழக்கமாக, குரு வெற்றிலை பாக்கு சுவைப்பார். பற்களின் பலவீனம் காரணமாக உரலில் இடித்து அந்த மாணவன் தருவதை ருசித்து சுவைப்பார்.
அந்த மாணவனை மாட்டி விடுவதற்காக மீதி 3 பேரும் அந்த உரலை மறைத்து வைத்தனர். அன்றும் வழக்கம்போல குரு வெற்றிலை பாக்கு கேட்க, அந்த மாணவன் இடிப்பதற்காக உரலைத்தேடுகிறான் காணவில்லை.
நேரமாகிவிட்டதால் குரு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
இவன் செய்வதறியாது தன் வாயில் அந்த வெற்றிலை பாக்கை போட்டு மென்று அதை குருவிடம் கொடுத்து விட்டான். அவரும் சாப்பிட்டு விட்டு இன்று நல்ல ருசியோடு உள்ளதே என்று பாராட்டுகிறார்
இதனை அறிந்த மற்ற மாணவர்களுக்கு அதிர்ச்சியும் கோபமும்.
இப்படியே சிலநாட்கள் கழிய, அந்த மாணவர்கள், இவனை ஒழித்துக்கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து, குருவிடம் செல்கின்றனர்.
“குருவே, நீங்கள் அவனை குருபக்தி உள்ள மாணவன் என்றுதானே மெச்சுகிறீர்கள்? அவனிடம் வெற்றிலை இடிக்கும் உரலை எடுத்து வரச்சொல்லுங்கள்” என்று மாட்டி விடுகிறார்கள்
குருவும் யதார்த்தமாக அவனிடம் “வெற்றிலை இடிக்கும் உரலை எடுத்து வா” என்று கூற, சரி என்று தலையசைத்து விட்டு, உள்ளே சென்றான்.
சிறிது நேரத்தில் அவன் தலை வெட்டப்பட்டு அவன் கைகளில் இருந்தது. அவனது முண்டம் ஒரு பத்து, இருபது அடி முன் வந்து அவனது தலையை அவன் குருவின் கால்களுக்கு முன்னால் சமர்ப்பித்தது.
அந்த குரு மற்ற மாணவர்களை அழைத்து, பார்த்தீர்களா அவனது குருபக்தியை? என்று கேட்டார். அந்த மாணவர்கள் திகைப்பிலிருத்தும், அதிர்ச்சியிலிருந்தும் மீளவில்லை.
அவன் வாயில் வெற்றிலை மென்று தந்தான் என்பது தனக்கு முன்னரே தெரியுமென்றும், இந்த 3 மாணவர்களிடமும் சொன்னார்.
குரு கேட்டதைத் தட்டாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தன் தலையை வெட்டிய மாணவனுக்கு தனது விஷேச சக்திகளின் மூலமாக மீண்டும் உயிர் தந்து, தனக்குத் தெரிந்த மொத்த வித்தைகளையும் அந்த மாணவனுக்குக் கற்றுத் தந்து அவனை சிறந்த மனிதனாக்கினார்.
இந்தக்காலத்தில் குருவுக்கு தலை எல்லாம் வெட்டித்தரத் தேவையில்லை. ஆனால் தலைவணங்கி குருவிடம் போதனைகளைக் கற்றுக் கொள்வதற்கே இந்தத் தலைமுறைக்கு இயலவில்லை.
அது மாற்றப்பட வேண்டும்.
வாத்தியாரிடம் அடி வாங்கித் திருந்தாதவன் போலீஸடம் அடி வாங்குவான் என்ற நிதர்சனம் அனைவருக்கும் புரிய வேண்டும்.
மாதா , பிதா, குரு , தெய்வம் என்பது வெறும் வாக்கியமாக இல்லாமல் வழக்கமாக மாற வேண்டும்.
நினைவுகள் வலைத்தளத்தில் ஒரு நல்ல கருத்தைப் பதிவிடுவதில் மகிழ்ச்சி.