Categories
சினிமா தமிழ்

பழைய பொக்கிஷ சினிமா: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

தமிழ் படங்களில், ஏன் தென்னிந்திய படங்களில் ஒரு புதிய முயற்சியாக இந்தப்படம் முழுநீள வண்ணப் படமாக வந்த முதல் படம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அதற்கு முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள் தான்.

இந்த வண்ணப்படமானது Gevacolor என்ற முறையில் படமாக்கப்பட்டது.
Gevacolor என்பது பெல்ஜியத்தில் கேவர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓடும் படத்தை வண்ணப்படமாக்கும் உத்தி.

இந்தப்படமானது இந்தியில் வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் ரீமேக். The Arabic Nights என்ற புத்தகத்தில் வந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

1956 ல் பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் 1941 லேயே இதே அலிபாபாவும் 40 திருடர்களும் படம் N.S.கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்தது. ஆனால் அது தோல்வியைத் தழுவியது.

அதன் மறுபிரதியான இந்தப்படம் மிக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

இது கலரில் வந்த முதல் படம் என்பதைத்தாண்டி இந்தப்படத்தில் வந்த அன்டாகா கசம், அபூகாஹுகூம், திறந்திடு சீசேம், மூடிடு சீசேம் என்ற மந்திரங்களும் அந்த குகை திறக்கப்படும் விதமும் மக்கள் மனதைக் கவர்ந்தது.

மேலும் இந்தப்படத்தின் மாசிலா உண்மைக்காதலே, அழகான பொண்ணுதான், உல்லாச உலகம் உனக்கே சொந்தம் போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றன. அந்தக்கால ரசிகர்கள் மட்டுமல்லாது தலைமுறை தாண்டிய ரசிகர்களைக் கொண்டது அந்தப்பாடல்கள்.

ஒரு மரம் வெட்டும் சாதாரண ஆள், இந்த அதிசய குகையைத் திறக்கும் மந்திரத்தை யதார்த்மாக அறிந்து கொண்டு அதன் மூலம் செல்வந்தனாவதோடு அல்லாமல், நாட்டையே உலுக்கி வந்த 40 திருடர்களை எப்படி ஒழித்துக்கட்டினார் என்பது கதை.

மாயாஜாலக் கதையாக இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டதோடு அல்லாமல், பேராசை பெருநஷ்டம்,
ரகசியம் என்பது இன்னொரு நபரிடம் சென்றால் அது ரகசியமாக இருப்பதில்லை போன்ற கருத்துக்களை ஆழமாக சொன்ன படம்.

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென் இந்திய சினிமாவில் இது ஒரு மைல்கல். என்றென்றும் நினைவுகூறத்தகுந்த நல்ல படம்.

மாசிலாவை நினைவுகள் வாசகர்களுக்கு நினைவுபடுத்தியதில் மகிழ்ச்சி.

பழைய பொக்கிஷ சினிமாக்களை பற்றி தொடர்ந்து வாசிக்க:

அதே கண்கள்

துணிவே துணை