பழைய பொக்கிஷ சினிமா
சினிமா என்றாலே கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என பல கூறுகளின் ஒருங்கிணைப்பு. ஆனால், சில படங்கள் ஒரே கூறின் மூலம் முத்திரை பதிக்கின்றன. இந்தப்படத்தின் கதாநாயகன் ஜெய்ஷங்கர் என்றாலும் இந்தப்படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான்.
பழைய படத்தில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா என்று நாம் அசந்து போகும் அளவிற்கு திரைக்கதை அமைந்த படம்.
ரிப்பீடட் சீக்வென்ஸ் எனப்படும் ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும் திரைக்கதை, 1976 லேயே ஒரு இயக்குனரால் படமாகி வெளிவந்து ஓடியிருக்கிறது என்றால் மிகப்பெரிய ஆச்சரியம் தான்.
அது மாதிரியான ஒரு திரைக்கதை என்பதை கனவில் கூட தமிழ் சினிமா உலகமும், ரசிகர்களும் நினைத்தருக்காத ஒரு கால கட்டத்தில் தைரியமாக அமைத்த முத்துராமன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
அப்படி என்ன ரிப்பீடட் சீக்வென்ஸ் என்பது இன்னமும் கூட ஆச்சரியம். கதையின் சஸ்பென்ஸில் நம்மை சீட் நுனியில் அமர வைக்கும் ஆரம்ப காட்சியை, கதாநாயகன் அசால்ட்டாக கடந்து போகும்படியான இரண்டாவது காட்சி.
அதாவது, முதல் காட்சியும் இரண்டாவது காட்சியும் ஒரே காட்சி.
பிறகு அந்த சஸ்பென்ஸை கடந்து கதைக்குள் நுழையும் கதாநாயகன் தோற்றுப்போகிறான்.
தோற்றவன் திரும்ப அதே கதையில் வேறு வேடத்தில், வேறு பெயரில் பயணிக்கிறான்.
இப்படி கதையும் திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக பயணித்தாலும் துளியும் சலிப்பில்லாமல் திரைக்கதையாக அமைத்திருக்கிறார் முத்துராமன் அவர்கள்.
கதையின் சஸ்பென்ஸும் கதையும் மிகவும் முற்போக்கு சிந்தனை கொண்டது. கதையை வெளிப்படுத்தினால் படம் பார்க்கும் போது அந்த ஆர்வம் குறையலாம் என்பதால், கதையை வெளிப்படுத்தவில்லை.
கதாநாயகனை வெறிகொண்டு காதலிக்கும் வில்லி, முற்போக்கு சிந்தனைகொண்ட கதையோட்டம், சஸ்பென்ஸ் என தன்னுள் பல விஷயங்களை சுமந்திருக்கும் படம், வெறும் 137 நிமிடம் மட்டுமே ஓடுகிறது.
2 மணி நேரம், 17 நிமிடம்.
இந்தக்காலத்தில் இது ஆச்சரியமல்ல. ஆனால் 1976 ல் வந்த படங்கள் யதார்த்தமாகவே 3 மணி நேரம் ஓடும். அதிலும் ஒரு வித்தியாசம்.
மொத்தத்தில் இந்தக்கால ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டாட வேண்டிய படம். கண்டிப்பாக பார்த்து மகிழுங்கள்
“துணிவே துணை” யூடியூப்பில் முழுப் படமாக இலவசமாக கிடைக்கிறது. கண்டிப்பாக பார்த்து மகிழுங்கள்.
இனிய பார்வையைத் தொடர, மீண்டும் ஒரு நல்ல படத்தைப் பற்றி நாமும் பேசுவோம்.