ஒரு உணவகத்துக்கு செல்கிறோம், அங்கே ஒரு தோசை 90 ரூ என பட்டியலில் இருக்கிறது.
உங்களிடம் வரும் சர்வரிடம் ஒரு தோசை என்று நீங்கள் கோருகிறீர்கள். உடனே அவர், தோசை 140 ரூ என்று கூறுகிறார்.
ஏம்ப்பா பட்டியல் ல 90 ரூ தானே போட்டுருக்கு? நீ என்னவோ 140 ரூ சொல்ற? என்று கேட்டால்,
எங்க முதலாளி எங்களுக்கு சம்பளமாக சொற்ப பணம் தான் தருகிறார். நீங்கள் 140 ரூ தருவது என்றால் சாப்பிடுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம் , கிளம்புங்கள் என்று கூறினால் அது எப்படியான அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு?
நியாயமாக என்ன கோரிக்கை வைக்கலாம்?
ஐயா தங்கள் மனசு கோணாமல் உணவு பரிமாறுகிறேன், சட்னி சாம்பார், பொடி கூட அதிகம் தருகிறேன், சாப்பிட்டு பில் தரும்போது எனக்கு சிறிய டிப்ஸ் தாருங்கள் என்று கூறினால்,ஒரு 10 ரூ டிப்ஸ் ஆக தரலாம்.
ஆனால் இப்படி விலைப்பட்டியல் திருத்தம் என்பது முறையா?
அது போலத்தான் நமது நிருபருக்கு நடந்த இந்த OLA வாகன புக்கிங் விவாகரமும்.
கோவிலம்பாக்கம் முதல் சென்னை சென்ட்ரல் வரை புக் செய்ய 430 ரூ காட்டியது.
17 கிமீ. கிமீ க்கு 15 ரூ என்று வைத்துக்கொண்டால் கூட அதை விட இருமடங்கு கட்டணம் தான்.
முதல் 4 கிமீக்கு 100, மீதி கிமீக்கு 15 ரூ என்றாலும் லாபம் தான்.
ஆனால் புக்கிங்கை ஏற்றுக்கொண்ட டிரைவர்கள் 800 ரூ தந்தால் வருகிறேன் இல்லாவிட்டால் நான் வரவில்லை என்று அந்த புக்கிங்கையும் கேன்சல் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.
இதனால் புக்கிங் கேன்சல் செய்யும் பயனாளிகளுக்கு சில நேரங்களில் அபராதம் விதிக்கப்படுகிறது.
430 ரூ காட்டுது, கூட ஒரு 50,100 வாங்கிக்கோங்க பிரதர் ஏன் டபுளா கேட்கிறீங்க என்று சொன்னால், OLA காரனுக்கு Rate fix பண்ண தெரிலங்க, அந்த Rate க்குலாம் வராது என்கிறார்.
அப்படி Rate fix செய்ய தெரியாத OLA ல ரிஜிஸ்டர் பண்ணி ஓட்ட வேண்டிய அவசியம் என்ன?
இவர்கள் கேட்கும் பணம் நியாயமானது என்ற எண்ணம் மக்களுக்கு இருந்திருந்தால் இன்று ஆன்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் ola uber போன்ற அப்ளிகேசன்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன?
அரசு அதிகாரி ஒரு சர்டிபிகேட் கொடுக்க அரசு நிர்ணயித்த பணத்தை விட அதிகமாக ஏதாவது பணம் கேட்டால் லஞ்சம் என்று காரி துப்பும் இந்த சமுதாயத்தில் மீட்டருக்கு மேல போட்டுக்கொடு, டபுளா கொடு என்று பேசி பயனாளர்களை அவஸ்தைக்குள்ளாக்கும் இப்படியான டிரைவர்களை என்ன சொல்வது.
ஒன்னு, இவங்க ola uber ல பேசி இவங்களோட நியாயமான கோரிக்கையை வைக்கனும், அல்லது இவங்களா ஒரு சங்கம் அமைச்சு, நியாயமான விலைக்கு மக்களுக்கு நல்ல ஒரு சேவையை உருவாக்கி பெயர் வாங்கி ola uber ஐ விட சிறப்பான வகையில் முன்னேற வேண்டும். இல்லையெனில் ஒரு கட்டமைப்பில் வேலை செய்யும் போது அதற்கு உட்பட்டு அதன் விதிமுறைகளை மீறாமல் அதை செய்ய வேண்டும்.
அவசரத்துக்காக புக்கிங் செய்யும் பொதுஜனத்திடம் அந்த சூழலை உபயோகித்திக்கொண்டு இருமடங்கு பணம் கேட்பது வழிப்பறி தானே?