Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பனாமா கால்வாயின் தண்ணீர்ச் சிக்கல்

தண்ணீர் பற்றாகுறையால் பனாமா கால்வாயில் என்ன சிக்கல்?

பனாமா கால்வாய் நம்மில் பலருக்கும் பரிட்சையமான ஒரு செயற்கையான கால்வாய்.

இது அமெரிக்க கண்டங்களுக்கு இடையே அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைப்பதற்காக 78.5 கிமீ நீளத்திற்கு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான கால்வாய் என்பதெல்லாம் நமக்கு நன்கு தெரிந்த விஷயங்களாக இருக்கலாம்.

பனாமா இன்றளவிலும் பொறியியல் அதிசயம்.

மனிதன் செய்த சாதனை என்று புகழப்பட பல காரணங்கள் உண்டு.

அவ்வளவு பொருட்செலவுகள் மற்றும் உயிர்பலிகளை மீறி அதன் கட்டமைப்பு நம்மை கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்துகிறது.

பொதுவாக கப்பல் பயணிக்க நீரின் ஆழம் தேவையான அளவில் இருக்க வேண்டும்.

பல செயற்கை துறைமுகங்களில், நாமாக நீரை ஆழப்படுத்தி கப்பல்களை இயக்குவது போல, பனாமா கால்வாயிலும் கப்பல் இயக்கத்திற்கான நீரின் ஆழம் இருக்கும்படியான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது..

ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அட்லாண்டிக் கடலின் கடல் மட்டத்தையும், பசிபிக் கடலின் கடல் மட்டத்தையும், இரண்டையும் இணைக்கும் நிலப்பரப்பு சமமாக இல்லாமல் உயர்ந்து மலைப்பகுதியாக இருப்பதுதான். 

அது சரி கடலில் கப்பல் ஓடும்!

தரையில் ஓடுமா, அதுவும் மலைப்பகுதியை கடந்து?

அதெப்படி ஓடும் ? தண்ணியிலேயே குறிப்பிட்ட ஆழம் இல்லாட்டி கப்பல் தரை தட்டிரும்ல..

அப்புறம் எப்படி அட்லாண்டிக் கடலுக்கும் , பசிபிக் கடலுக்கும் நடுவே உள்ள நிலப்பரப்பை கப்பல் கடக்கும்?

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு முழுவதுமாக தோண்டி , இடையிலிருந்த நீர் வழியில், 78.5 கிமீ நீளத்தையும் பயணித்து பசிபிக், கடலின் மட்டத்திற்கும் கீழே கப்பல் போகும் அளவுக்கு  வடிவமைக்கும் முயற்சி பலத்த பணம் மற்றும் உயிர்ச்சேதத்திற்கு பிறகு கைவிடப்பட்டது.

பூமியின்  சூழல் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தோண்டுவதற்கு அனுமதிப்பது இல்லை..

பிறகு என்ன செய்தார்கள்? 

மலையின் மேல் ஒரு செயற்கையான ஏரி உருவாக்கப்பட்டது. அட்லாண்டிக் கடலிலிருந்து வெளியேறும் கப்பல் செயற்கையாக உருவாக்கப்பட்ட கட்டன் (Gatun Lake) ஏரியில் மிதந்து பசிபிக் கடலை அடையும்.

சரி அட்லாண்டிக் கடல் மட்டமும் கட்டன் ஏரியின் கடல் மட்டமும் சமமா ?

அட்லாண்டிக் கடல் மட்டத்தில் இருந்து கட்டன் ஏரி 85 அடி உயரத்தில் இருக்கிறது.. 8 மாடி உயரம்!

அட்லாண்டிக் நுழைவில் நுழையும் கப்பல் நேர்கோட்டில் 78.5 கிமீ ஐயும் பயணிப்பது இல்லை..

6 இடங்களில் வளைந்து 8 நிலைகளைக் கடந்து அதன் பின்னரே பசிபிக் கடலை அடைகிறது.

அப்ப தரைத்தளத்தில் மிதக்கும் கப்பல் எப்படி 8 ஆவது மாடிக்கு போகும்?

அதுதான் விஷயம்!

அட்லாண்டிக் கடலுக்கும் கட்டன் ஏரிக்கும் நடுவிலான பாதை 3 பிரிவுகளாக உள்ளது.

அந்த 3 பிரிவுகளிலும் முன் பின் அடைப்புகள் இருக்கும்.

எப்படி தொட்டியில் ஒருபுறம் தண்ணீர் விட்டு மறுபுறம் இடத்தில் தொட்டி நீர் உயருமோ, அதுபோல கப்பல் முதல் பகுதிக்கு வந்த உடன்  இருபுறமும் அடைக்கப்பட்டு தண்ணீர் செலுத்தப்பட கப்பல் தண்ணீரோடு சேர்ந்து உயருகிறது.

இந்த நீர்மட்டம் ஏற்ற இறக்கம்தான் பனாமா கால்வாயின் முக்கிய தன்மை.
பனாமா கால்வாயின் குறுக்கு வெட்டு படம்
இதே போல் மற்ற இரு பகுதிகளிலும் செய்யப்பட அந்த 85 அடி உயரத்தை கப்பல் அடைகிறது, பிறகு தனது பயணத்தை கட்டன் ஏரியில் தொடர்கிறது..

பசிபிக் பெருங்கடலை அடையவும் இது போன்ற 3 படிநிலைகளில் சிறிது சிறிதாக மட்டம் குறைக்கப்படுகிறது..

இப்படி ஒரு கப்பல் பயணிக்கும் போது நீரின் உதவியுடன் இந்த மட்ட ஏற்ற இறக்கம் நடைபெறுகிறது..

ஒரு கப்பலை இயக்கப் பயன்படும் நீரின் அளவு, 80 ஒலிம்பிக் நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரின் அளவாகும்.

 ஒரு நாளைக்கு சராசரியாக 30 கப்பல்கள், எனில் ஒரு வருடத்திற்கு எவ்வளவு நீர் செலவாகுமெனில், தோராயமாக 950 TMC.

இது கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு ஒரு ஆண்டுக்குத் தரவேண்டிய காவிரி நீரை விட இரண்டு மடங்கு.

இந்தப் பனாமா கால்வாயில் இப்போது என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் நடப்பது போலவே தண்ணீர் பிரச்சினை தான்.  கடலில் இருந்து இவ்வளவு தண்ணீர் மேலே ஏற்றுவது சிரமம் என்பதால் கட்டன் ஏறியில் இருந்து தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இது குடிநீராக பயன்படுத்தக்கூடிய தண்ணீர். 

தேவையான தண்ணீர்  இருந்துவிட்டால் நமக்கு ஏன் பிரச்சினை வரப்போகிறது.

எல்நினோ என அழைப்படும் பருவகால மாறுதலால் ஏற்பட்ட மாறுதலால் பனாமா நாடு கடந்த 143 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் கடந்த 2 ஆண்டுகளாக சந்தித்து வருகிறது.

அப்படியிருக்க கப்பல் ஓட்ட எங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது..

இதனால் கப்பல் போக்குவரத்தில் பல கிடுக்குப்பிடி விதிமுறைகளும், குறிப்பாக சரக்குக்கப்பல்களின் எடையில் மிகப்பெரிய விதிமுறைகள் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.

இன்னொரு 10-15 மாதங்களில் இந்தப்பிரச்சினை சரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *