நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
கண்ணதாசன்
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
இந்தப்பாடல் வரிகள் வந்து சரியாக 64 வருடங்கள் ஆகிறது..
இன்னும் ஒரு நூற்றாண்டு முன் சென்றாலும் நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும்..
இதன் கருத்து என்னவென்றே இப்போதைய தலைமுறையில் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம்.
” Life has to move on”
என்று ஆங்கிலத்தில் இன்று பல நேரமும் கொடுக்கப்படும் அறிவுரை சித்தாந்தம் தான் அந்தப்பாடலின் வரிகள் உணர்த்தியவை.
இன்று நம் வாழ்வில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத துயரம் நிகழ்ந்துவிட்டால், அதை நம்மால் மாற்ற இயலாது.
ஆனால் அதிலிருந்து வெளியேறி அதை மறந்து மீண்டும் இயல்பான வாழ்க்கையை வாழ இயலும்.
நாம் நினைத்தபடியே ஒவ்வொரு நாளும் இருந்துவிட்டால் ஒரு கட்டத்தில் வாழ்க்கை என்பது அச்சடித்த நாட்காட்டி ஆக மாறிவிடும்.
வருடம் 365 நாளையும் ஒரே பேப்பரில் அச்சடித்து கிழிப்பதில் என்ன பலன்.?
எதற்காக 365 காகிதங்கள் தனித்தனியாக அச்சடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு குணம் ஒவ்வொரு அனுபவம் என்பதை காட்டும் குறிப்பு தானே நாட்காட்டி..
ஆலோசனை எல்லாம் சரி?
என் வாழ்க்கையில் நான் நினைத்தது நடக்காவிட்டால் மனசுடைந்து போகிறதே?
எப்படி நான் மீள்வது? அடுத்த கட்டத்தை எப்படி எதிர்கொள்வது?
மிகப்பெரிய போர்க்களத்தில் நிராயுதபானியாக நிற்கிறேனே?
நான் எதை வைத்து சண்டை செய்வது என்று குழப்பமாக இருக்கிறீர்களா?
சத்தியமாக இங்கே வாழ்க்கை யாரையும் நிராயுதபானியாக சண்டைக்கு அழைப்பதில்லை..
இராவணனை நிராயுதபானியாக இருந்த சமயத்தில் அழிக்கக் கூடாது என்று அவகாசம் கொடுத்த ராமன் போல..வாழ்க்கை எப்போதும் நீங்கள் நிராயுதபானியாக இருக்கும் போது சண்டை செய்ய அழைப்பதில்லை..
நம்மிடம் ஒரு மிகப்பெரிய பிரம்மாஸ்திரம் இருக்கிறது..
அதை எடுத்து உபயோகிக்கப் பலரும் பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.
அதன் பெயர்
” தன்னம்பிக்கை”.
நான் முன்னே மேற்காட்டிய பாடல் வரிகள் போலவே சமீபத்தில் ஒரு பாடல் இந்தக்காலத்திற்கு ஏற்றாற் போல இசையமைக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது..
” நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று, கேட்டது ஒன்று , கிடைத்தது ஒன்று”
இப்படி குதர்க்கமாகவே நடந்து கொண்டிருந்தால் நான் செய்யும் காரியங்களுக்கு என்ன பலன்?
அடுத்த காரியத்தை நான் எப்படி முழுமனதோடு செய்வது?
அடுத்த காரியமும் தோற்றுப்போகட்டுமே?
ஆனால் என்றாவது ஒரு நாள் நான் வெல்வேன் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் போதும்.
அரிச்சந்திரன் தனது நிலையலிருந்தி என்றாவது தவறி இருந்தானாயின் அவன் அரிச்சந்திர மகாராஜாவாக இன்று வரை புகழப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை..
கால்கள் இல்லாதிருப்பது ஊனமல்ல, நம்பிக்கை இல்லாதிருப்பதே ஊனம் என்று கால்கள் இல்லாமல் இமயத்தை அடைந்த அருணிமா சின்ஹாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் நம்பிக்கை..
நீங்கள் கால்கள் இல்லாமல் இமயம் ஏறி ஆக வேண்டும் என்று வாழ்க்கை ஒரு போதும் யாரையும் வற்புறுத்தாது.
ஆனால் அடுத்த அடியை நீங்கள் எடுத்து வைக்காவிட்டால் வாழ்க்கை உங்களை முன்னெடுத்துச் செல்லாது..
நம்பிக்கை இழந்திருந்தால் இன்று M.S.Dhoni என்பவர் ஏதோ ஒரு ரயில்வே நிலையத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்திருக்கக் கூடும்.
இப்படி ஒரு புகழும், இப்படி ஒரு பணமும், ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்குமா?
நம்பிக்கை என்ற பிரம்மாஸ்திரத்தை மட்டும் நாம் உபயோகிக்க மறந்துவிடக்கூடாது..
எந்த பரசுராமரின் சாபமும் நம்மிடம் இருந்து அந்த ஆயுதத்தை ஒருபோதும் பறித்துவிடாது..
வாழ்க்கை வாழ்வதற்கே!
எதையும் நீங்கள் சாதிக்க வேண்டியதில்லை.
யாரிடமும் சவால் விட வேண்டியதில்லை.
எதையும் புதிதாக கண்டிபிடிக்க வேண்டாம்.
உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று நிரூபிக்க வேண்டாம்.
ஆனால் முயற்சி என்பது முதகெலும்பு போல..
நிமிர்ந்து உட்கார அது வேண்டுமே!..
எதையாவது முயற்சி செய்யலாமே அனுதினமும்..
என்றாவது ஒரு நாள் உங்கள் முயற்சியும் பயிற்சியும் உங்களுக்கு ஏதாவது ஒரு மிகப்பெரிய பரிசைத் தரத்தான் போகிறது..
அதுவரை நம்பிக்கை என்ற ஆயுதத்தை இறக்கி வைத்துவிடக்கூடாது..
மீண்டும் மீண்டும் முயற்சிப்போம்.. மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொள்வோம்..
மீண்டும் சந்திப்போம்..
அன்புடன்..