NEET – National Eligibility Cum Entrance Test
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு.
மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வின் வழியே தான் சேர முடியும் என்று அதிரடியாக திட்டம் வகுத்து, பல மாநிலங்களில் மாணவர்கள் தயாராகும் முன்னரே, பல எதிர்ப்புகளை மீறி திணிக்கப்பட்ட இந்தத் தேர்வு, பல மாணவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்பதெல்லாம் நாம் அறிந்ததே.
சில பல தற்கொலைகளும் கூட இதன் காரணமாக அரங்கேறியது மனதில் இன்னும் ஆறா தழும்பாய் இருக்கத்தான் செய்கிறது.
நாளாக நாளாக பாடத்திட்டங்களுக்குப் பழகி, பயிற்சி மையங்களில் லட்சங்களில் பணம் கொடுத்து, தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களே கூட நீட் தேர்வில் முதலில் மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட நீட் தேர்வின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் தமிழக மக்களுக்கு வரவில்லை.
காலம் போக போக இந்தத் தேர்வு தகுதியானதா? என்ற குழப்பம் தான் மிஞ்சுகிறது
நீட் தேர்வு நேர்மையாக நடத்தப்படுகிறது என்று வெளிக்காட்ட எத்தனை களேபரங்கள்?
தாலியை கழட்டு, முடியை வெட்டு, சட்டையின் கைப்பகுதியை வெட்டு, என்று தமிழக மாணவர்களைப் படுத்திய பாடு மறந்து போகுமா நமக்கு?
இங்கெல்லாம் தேர்வெழுத இடமில்லாமல் கேரளாவிலும், ஆந்திராவிலும் தேர்வு மையம் ஒதுக்கி படுத்திய பாடென்ன.
இத்தனை இத்தனை விதிமுளைகளைத் தாண்டி இன்று நீட் தேர்வில் 23 பேர் பித்தலாட்டம் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றால் இது எத்தகைய இழிவான விஷயம்?
இது மட்டுமா?
கருணை மதிப்பெண் கொடுத்து, திரும்பப் பெறப்பட்ட விவகாரம்; ஒரு கேள்வித்தாளை சரியாக வடிவமைக்க முடியாமல், கருணை மதிப்பெண் கொடுத்து, பிறகு அதை செய்யமுடியாது என்று பின்வாங்கி, இப்போது மறுதேர்வு நடத்தப்போகிறார்களாம். அப்படியென்றால் அந்த முதல் தேர்வு?
கருணை மதிப்பெண்கள் இல்லாமல் கணக்கிட்டுக்கொள்வோம் என்கிறார்கள். தேர்வு நடத்தும் துறையே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உயர்நீதிமன்ற உத்தரவு தேவைப்படுகிறது.
கருணை மதிப்பெண் வாங்கிய 6 பேர் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களாம்?
67 பேர் 720/720 ஆம்.
நல்லா படிச்சு வாங்கியிருந்தா சரி. நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு வாங்கியவர்கள்.
மருத்துவம் என்பது மனப்பூர்வமாக ஆழமாகப் புரிந்து உணர்வுகளோடு சேர்ந்து படித்து, அதை அப்படியே தொழிலாக செய்யும் போது, தீராத வியாதியும் தீரும். இங்கே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனித இயந்திரங்கள் மருத்துவம் படித்து நாளைய சமுதாயத்துக்கு மருத்துவம் செய்ய வரும்போது , அதில் உணர்வு எங்கே இருக்கும்?
நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கு நாள்தோறும் ஒரு காரணம் புதிது புதிதாக உருவாகிறது.
இன்னும் சொல்லப்போனால் நீட் தேர்வு தான் நேர்மையின் உச்சகட்டம், இதில் குளறுபடிகளே செய்ய முடியாது என்று விடப்பட்ட சவால் காணாமல் போய்விட்டது.
கேள்வித்தாள் கசிவு என்று ஒருபுறம் செய்தி.
இத்தனை குளறுபடிகளைக் கொண்ட தேர்வு இத்தனை ஆண்டுகளாக சரியாக நடந்திருக்குமா?
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவரானவர்களை நம்பி வைத்தியம் செய்யலாமா?
குழப்பத்தில் சாமானியன்.