கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி.
இந்த 2024 ஆம் ஆண்டிலும் கள்ளச்சாராயம் குடிக்க அவசியம் என்ன இருக்கிறது. தமிழ்நாடு என்ன சவுதி அரேபியா போல, குஜராத் போல சரக்கு கிடைக்காத இடமா?
அரசாங்கமே ரேஷன் கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் இங்கே வியாபாரம் படுஜோராக இருக்கிறது.
மேலும் வட இந்திய மாநிலங்கள் போல இங்கே பணப்புழக்கம் இல்லாமலும் இல்லை. சின்ன சின்ன தொழிலாளியும் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல பணம் சம்பாதிக்கும் மாநிலம் தான் இது. இத்தனை காரணத்தையும் மீறி கள்ளச்சாராயம் குடிக்க காரணம் என்ன?
கொழுப்புதானே ஒழிய வேறென்ன?
கள்ளச்சாராயம் குடித்தால் இன்னும் நல்ல போதை கிடைக்கும், குறைந்த செலவில் அதிக போதை, ஒரு புது அனுபவம், பழையகால நினைவுகள் என்று என்ன சொல்லி அதைக்குடிப்பார்களோ தெரியவில்லை.
குடிப்பவனுக்கு சரி, ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். ஒருவேளை கள்ளச்சாராயம் குடித்து உயிர் பிரிந்தால் குடும்பத்துக்கு பத்து லட்சம் பணம் கிடைக்கும் என்ற புதிய காரணமும் கூட கள்ளச்சாராயம் குடிக்கக் காரணமாக இருக்கலாம்.
ஆனால் அதை காய்ச்சி விற்பவனுக்கு அப்படி என்ன ஒரு தேவை? வேறு வழியே இல்லையா சம்பாதிக்க? இப்படி உயிர்களைக் காவு வாங்கி சம்பாதித்து, அதில் தன் பிள்ளைகள் பால் குடித்து வளரட்டும் என்று நினைக்கிறார்களோ?
அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை அடுத்த ஒருவனுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தைரியத்தை தடுக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய படம்
இவர்கள் மீது ஏற்படும் கோவத்தை மீறி, இங்கு மது பழக்கத்தை பற்றி பொதுவாக பேசவும் அவசியம் இருக்கிறது.
இத்தனை விளம்பரங்கள், இத்தனை எதிர்ப்புகளை கடந்து இங்கே ஒரு நாளில் இத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனை என்று நாம் படிக்கும் செய்தியல் நம் வீட்டுப் பிள்ளைகளின் பங்களிப்பு இல்லை என்று போலியான நம்பிக்கொண்டு அந்தச்செய்தியைக் கடந்து செல்கிறோம்.
ஆனால் அது மாயை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
தரவுகள் ஏதுமில்லை.
ஆனால் ஏதோ ஒரு சினிமாவில் கஞ்சா கருப்பு ஒரு காமெடியில் கணக்கு சொல்வது போல, தமிழ்நாட்டில் ஒரு தொகுதிக்கு ஒருவன் தான் குடிக்காமல் இருப்பான், அவனும் நேத்து பிறந்த குழந்தையாகத்தான் இருப்பான் என்பது கூடிய சீக்கிரத்தில் உண்மையாகிவிடலாம்.
ஒருவனுக்கு ஒரு நாள் சம்பளம் 1000 ரூ என்று கணக்கிட்டுக்கொண்டால் அவன் வாரத்திற்கு ஒரு 1000 ரூ க்கு குடித்துவிட்டு மீதி பணத்தில் குடும்பத்தை பிரச்சினை இல்லாமல் நடத்திவிட்டால் இங்கே சிக்கல் இப்போதைக்கு இல்லை. ஆனால் அவனுடைய முதிர்வு காலத்தில் அவன் இந்தக்குடியால் சந்திக்கப்போகும் உடல் உபாதைகளை எதிர்கொள்ள பணரீதியாகவும் மனரீதியாகவும் தயாரா என்பதை ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் நினைத்துக் கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்று.
இது ஒரு ரகம் என்றால் இன்னொரு ரகமுண்டு.
ஒரு நாள் சம்பளம் 1000 ரூ என்றால் ஒரு நாளைக்கு 700-800 ரூக்கு குடித்து விட்டு குடும்ப பாரத்தை மனைவி தலையில் சுமத்துவது. மூன்றாவது ரகம், சம்பாதிக்க வழி கிடையாது. ஆனால் மனைவி சம்பாத்தியத்தில் ஒரு நாளைக்கு 200-300 ரூ க்கு குடிப்பது.
மேம்போக்கான பார்வையில் அழகான குழந்தைகள் இந்த இரண்டாவது, மூன்றாவது ரக குடிகாரர்களுக்கு, திருமணமாகி ஓராண்டில் தவறாமல் கிடைத்து விடுகிறது.
தான் கெட்டதில்லாமல் வனத்தையும் கெடுத்த குரங்காக, அழகான குடும்பத்தை குழந்தைகளை வளர்க்காமல் குடித்துஙகூத்தடிக்கும் குடிகாரர்களால் தான் இந்தப்பிரச்சினை முதலில் துவங்குகிறது.
அயல்நாடுகளில் சாதாரணமாக இரவு உணவுக்கு முன் ஒரு பானமாக உட்கொள்ளப்படும் மது இங்கே பேசு பொருளாக மாறக்காரணம் என்ன?
மது நமது அதிகாரத்திற்கு உட்படாமல், மதுவின் அளவீட்டில் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு தள்ளாடி குப்புற விழுந்து உருண்டு பிரளும் வரை நாம் குடிப்பது தான்.
மதுவிற்கு நாம் அடிமையா, இல்லை மது நமக்கு அடிமையா என்பது முக்கியமானது.
குடிமகன்களின் அளவீட்டை குறைப்பது தனி மனித பிரச்சனை அல்ல. ஆனால் குடி என்பது ஒரு ஒழுக்கத்திற்கு உட்பட்டு கட்டுப்பாட்டுடன் நிகழ்த்தக்கூடியது.
குடிக்கவே கூடாது என்பது வாதமல்ல. குடியே நம்மை முழுங்கி விடக்கூடாது என்பது வேண்டுகோள்.
இன்னொரு பக்கத்தில், சாராய விற்பனை மீது ஏகபோக உரிமை கொண்ட அரசு, அதன் குடிமக்களை காக்கும் பொறுப்பும் கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.
தள்ளாடும் தமிழகத்தை தடி கொடுத்து நிறுத்துமா அரசு?
அக்கறையுடன், நினைவுகள் வலைப்பக்கம்.